Madharaasi Review: மதராஸி விமர்சனம்.. கஜினி + துப்பாக்கி.. சிவகார்த்திகேயன் ‘மேட்னஸ்’ தெறிக்குது!
சென்னை: தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி படங்களின் இயக்குநர் தான் நான் என ஆணித்தரமாக சொல்லி ஏ.ஆர். முருகதாஸ் நான் இன்னும் அவுட்டேட்டட் ஆகவில்லை என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்துள்ளார். சிக்கந்தர் படத்தை எடுத்த ஏ.ஆர். முருகதாஸ் நிச்சயம் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு சுமாரான படத்தை தான் கொடுத்திருப்பார் என நினைத்து பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்ற ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரைக்கும் ஃபுல் மீல்ஸ் விருந்தை எந்த இடத்திலும் ஸ்லோ டவுன் ஆகாமல் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
கஜினி சூர்யாவையும் துப்பாக்கி விஜய்யையும் உள்வாங்கி சிவகார்த்திகேயன் மெண்டல் மேட்னஸ் ஆக நடித்திருப்பது ரசிகர்களை நிச்சயம் தியேட்டர்களை நோக்கி வரவழைத்துவிடும். அமரன் படம் அளவுக்கு எல்லாம் அடுத்து சிவகார்த்திகேயன் படம் வராது என்றும் பெரிய வசூல் கொடுக்க முடியாமல் தடுமாறுவார் என ட்ரோல்கள் குவிந்த நிலையில், துப்பாக்கியை தான் சரியாக பிடித்துவிட்டேன் என்பதை சிவகார்த்திகேயன் அசால்ட்டாக துப்பாக்கி வில்லனையே அடித்து நொறுக்கி காட்டுகிறார்.

மதராஸி படத்தின் கதை என்ன? அதன் பிளஸ் மற்றும் மைனஸ்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
மதராஸி கதை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், பிஜு மேனன், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஒரு விபத்தில் தனது மொத்த குடும்பத்தையும் இழக்கும் ரகு மனநலம் பாதிக்கப்பட்டு வியாசர்பாடியில் உள்ள மனநல காப்பகத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்து சரியாகி வருகிறார். அவரை பல் மருத்துவரான மாலதி காதலிக்கிறார். ரகுவிடம் பிடித்த ஒரு குணம் திடீரென மாறிப்போன நிலையில், அவரை பிரிகிறார். காதலி பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டு இறக்க பார்க்கும் ரகுவை துப்பாக்கி கலாசாரத்தை தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ விட்டு விடக் கூடாது என போராடும் போலீஸ் அதிகாரி பிஜு மேனன் எப்படி பயன்படுத்துகிறார் என்றும் அவர் அனுப்பி வைக்கும் சூசைட் மெஷினுக்கு சந்தோஷமாக போகும் சிவகார்த்திகேயன் செத்தாரா? அல்லது எதிரிகளை சாகடித்தாரா? என்பது தான் மதராஸி படத்தின் கதை.
சிவகார்த்திகேயன் நடிப்பு மெண்டல் மேட்னஸ்: யாருக்கு அடிபட்டு ரத்தம் வந்தாலும் தனது சொந்தம் என நினைத்து அவர்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ணும் ரகு. துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜமாலை சுட்டுவிட்டு உயிருக்கு ரத்த வெள்ளத்தில் போராட அவரையும் காப்பாற்றும் இடங்களில் எல்லாம் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்ப காட்சியில் துப்பாக்கிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் இடத்தில் டோல்கேட் சண்டையில் வித்யூத் ஜமால் ஹீரோவை விட மாஸ் காட்டுகிறார். துப்பாக்கி படத்துக்குப் பிறகு வித்யூத் ஜமாலை மீண்டும் சரியாக பயன்படுத்தியது ஏ.ஆர். முருகதாஸ் தான் என தெரிகிறது. அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் டான்ஸிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கலும் ஒரு கை இல்லாத வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுக்கிறார். காதல் காட்சிகளில் சிவகார்த்திகேயன் செம க்யூட்டாகவும் காமெடி காட்சிகளில் பைத்தியமாகவும் ஆக்ஷன் காட்சிகளில் அனிமலாகவும் நடித்துள்ள விதம் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிவிடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

பிளஸ்: அனிருத்தின் பிஜிஎம் படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. அதை விட ஸ்டண்ட் மாஸ்டர்கள் கெவின் மிஷ்ரா மற்றும் திலீப் சுப்புராயனின் சண்டைக் காட்சிகள் ரொம்ப காலத்துக்குப் பிறகு சண்டைக் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது. ஒரு ஆக்ஷன் படத்துக்கு முக்கியமே சண்டைக் காட்சிகள், ரசிகர்கள் எப்படி எதிர்பார்ப்பார்களோ அதை முழுமையாக பூர்த்தி செய்துள்ளனர். பிஜு மேனனின் மகனாக நடித்துள்ள விக்ராந்த் நடிப்பும் வில்லன் கூட்டத்தில் ஸ்பையாக இருக்கும் நடிகரும் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி கொடுக்கும் காட்சிகள் எல்லாம் தியேட்டர் தெறிக்கிறது. ஃபிளாஷ்பேக்கை வாயாலே வடை சுடாமல் அந்த கரண்ட் ஷாக் அடித்து பேருந்தில் பலரும் இறக்கும் காட்சிகளை படமாக்கிய விதம், சண்டைக் காட்சிகளில் தெரிந்த நேர்த்தி படத்துக்கு பலமாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்ட் மற்றும் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிடக் கூடாது என மூலக் கதையை உருவாக்கிய விதம் என அனைத்துமே சூப்பர். அந்த பள்ளியில் மாணவன் ஒருவன் துப்பாக்கியை வைத்துக் கொண்டு நடத்தும் வெறியாட்டம் படத்துக்கு பெரிய பிளஸ்.
மைனஸ்: பிஜிஎம்மில் அதிக ஈடுபாட்டை காண்பித்த அனிருத் பாடல்களில் சற்றே கோட்டை விட்டது மைனஸ் ஆக தெரிகிறது. மேலும், அய்யப்பனும் கோஷியும் நடிகர் பிஜு மேனனை கொண்டு வந்து மேஜர் சுந்தர்ராஜன் போல நடிக்க வைத்த இடத்தில் அவரது கதாபாத்திரம் மட்டுமே படத்தில் ரொம்ப வீக்காக தெரிகிறது. சில குறைகளையும் லாஜிக் மீறல்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நிச்சயம் இந்த மதராஸி மாஸ் ஹிட் படம் தான்.


Click it and Unblock the Notifications











