twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுர வீரன்... ஜூனியர் கேப்டன் தேறிட்டாரா?

    By Vignesh Selvaraj
    |

    ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மதுரவீரன்'. பி.ஜி.முத்தையாவே இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

    சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மீனாட்சி நடித்திருக்கிறார். இவர்களோடு சமுத்திரக்கனி, பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, மைம் கோபி, மாரிமுத்து, தேனப்பன், செந்திகுமாரி எனப் பலர் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். பிரவீன் கே.எல் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கிறார். இனி, 'மதுரவீரன்' விமர்சனம் பார்க்கலாம்.

    சண்முக பாண்டியன்

    சண்முக பாண்டியன்

    ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கிராமத்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற நடிகராக வளர்ந்த விஜயகாந்த்தைப் போலவே அவரது மகன் சண்முக பாண்டியன் கிராமத்து சப்ஜெக்ட் கதையில் நடித்து வெளியாகியிருக்கிறது 'மதுரவீரன்'. தீவிர அரசியலில் புகுந்த விஜயகாந்த் தனது திரையுலக வாரிசாக மகனை அறிமுகப்படுத்திய, 'சகாப்தம்' படம் வந்த சுவடு தெரியாமல் சுருண்டு போனது. அடுத்த அடி, வலுவானதாக இருக்கவேண்டும் என்பதற்காகச் சில வருடங்களாகக் கதை கேட்டு ஓகேவான படம் என்பதால் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு. சண்முக பாண்டியனின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'மதுரவீரன்' படம் எப்படி? கேப்டன் மகன் கரையேறுவாரா? வாங்க பார்க்கலாம்.

    மதுரவீரன்

    மதுரவீரன்

    மதுரையை பின்னணியாகக் கொண்டு வெளிவரும் சாதிப்பெருமை பேசும் படங்களுக்கு மத்தியில், துணிச்சலாக அதை விமர்சித்து வந்திருக்கும் படம் தான் 'மதுரவீரன்'. சமுத்திரக்கனி அந்த ஊரில் பெரிய மனிதர். விவசாயம் தொடங்கி கலாச்சாரம் வரை மக்களுக்காகப் பாடுபடுபவர் என்பதால் அவருக்கு ஊரில் நல்ல மரியாதை. ஜல்லிக்கட்டில் மேல் சாதி, கீழ் சாதி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இணைந்து பங்குபெற்று நடத்தவேண்டும் என்பதே அவர் விருப்பம். மேல்சாதிக்காரர் வேல.ராமமூர்த்தியும், கீழ்சாதிக்காரர் மைம் கோபியும் அவருக்கு எதிராக நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டில் தன் மாட்டைத் தொட்டவரின் கையையே வெட்டத் துடிக்கும் வேல.ராமமூர்த்தியின் மாடு அந்த ஜல்லிக்கட்டில் பிடிமாடாகிறது. பிடித்தது கீழ்சாதியைச் சேர்ந்த மைம்கோபியின் ஆள். அவமானத்தில் வாடிவாசலில் இருந்து கோபமாகக் கிளம்புகிறார் வேல.ராமமூர்த்தி.
    (* மேல், கீழ் சாதி எனக் குறிப்பிடப்பட்டவை உயர்த்தப்'பட்ட' தாழ்த்தப்'பட்ட' எனக் கொள்க)

    படத்தின் கதை

    படத்தின் கதை

    அன்றே இரவோடு இரவாக மைம் கோபியின் அண்ணன் சிலரால் கழுத்தறுக்கப்படுகிறார். அதே நேரத்தில் வேல.ராமமூர்த்தியின் தம்பியும் திட்டமிட்டுக் கொல்லப்படுகிறார். இருதரப்பும் மாற்றி மாற்றிக் கொலைசெய்துகொண்டதாக எல்லோரும் நம்புகிறார்கள். ஊரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸில் வழக்கு பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தையோடு முடித்து விடுகிறார்கள். இந்நிலையில், சமுத்திரக்கனியும் தனது ஊருக்குச் செல்லும் வழியில் சிலரால் கொல்லப்படுகிறார். சமுத்திரக்கனியைக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு, சமுத்திரக்கனியின் மனைவி, சிறு வயது மகன் இருவரும் சமுத்திரக்கனியின் மைத்துனருடன் மலேசியாவுக்கு சென்று செட்டில் ஆகிறார்கள்.

    மீதிக்கதை

    மீதிக்கதை

    பெரியவனானதும், திருமணம் செய்வதற்குப் பெண் தேடி மதுரைக்கே வருகிறார்கள். ஆனால், சண்முக பாண்டியன் வந்தது தன் அப்பாவை யார் கொன்றது என அறிந்துகொள்வதற்காகத்தான். அதனால், பார்க்குப் பெண்களையெல்லாம் பிடிக்கவில்லை எனத் தட்டிக் கழிக்கிறார். இதற்கிடையே, சமுத்திரக்கனி மறைவுக்குப் பிறகு இருபது வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்தாமல் ஊரே ரெண்டுபட்டுக் கிடக்கிறது. எனவே, ஊரார் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு நடத்த முடிவெடுக்கிறார்கள். ஆனால், இப்போதும் வேல.ராமமூர்த்தியும், மைம் கோபியும் குறுக்கே கட்டையைப் போடுகிறார்கள். இவர்களை மீறி சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டை நடத்தி ஊரை ஒன்று சேர்த்தாரா, தன் அப்பாவைக் கொன்றவனைக் கண்டுபிடித்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை.

    சண்முக பாண்டியன்

    சண்முக பாண்டியன்

    சண்முக பாண்டியன் அறிமுகமான 'சகாப்தம்' படத்தை விட இதில் எவ்வளவோ தேறியிருக்கிறார். சண்டைக் காட்சி தவிர மற்ற எல்லாக் காட்சிகளிலும் ஒரே ரியாக்‌ஷன் கொடுப்பது தான் தாங்கமுடியவில்லை. கேமரா பயம் இன்னும் ஒருசில படங்களில் விலகிவிடும் என்றாலும் அதுவரை நாம் பார்த்துச் சகிக்கவேண்டும் இல்லையா? ஹீரோயின் மீனாட்சி அப்படியே கிராமத்துப் பெண் வேடத்துக்கு பக்காவாக பொருந்திப் போகிறார். வெட்கமும், சிரிப்பும், நையாண்டியுமாக மதுரைப் பின்னணி கொண்ட படத்துக்கேற்ப செம செலக்‌ஷன். சமுத்திரக்கனி ஊர் மக்களுக்காக நல்லது செய்வது, வழியில் பார்ப்பவர்களுக்கு அட்வைஸ் செய்வது, கெத்தாக நடந்து செல்வது என அவர் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவர் விட்ட பாதயாத்திரையை அவர் மகன் சண்முகபாண்டியன் படம் முழுக்க நடந்து நிறைவேற்றி வைக்கிறார்.

    காமெடி

    காமெடி

    பங்காளி, மாமன், மச்சான் என மாரிமுத்து, தேனப்பன், வேல.ராமமூர்த்தி ஆகியோர் மதுரை கதைக்கேற்ற நடிகர்கள். சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் செந்திகுமாரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடிக்கு பாலசரவணன் டயலாக் மற்றும் மாடுலேஷனால் சிரிக்கவைக்கிறார். அட்ரஸ் மாறி வந்து சண்முகபாண்டியனின் ஊரிலேயே டென்ட் போடும் கேரக்டர் ஒன்று டைமிங் என்ற பெயரில் போடும் மொக்கைகள் கொஞ்சம் வெறித்தனம். மொட்டை ராஜேந்திரன் மலேசியா கான்செப்ட் வைத்து 'கபாலி' படத்தை ஸ்பூப் செய்திருக்கிறார். 'கபாலி'யில் கெத்தாக ரஜினி சொன்ன டயலாக் கேட்கும்போதெல்லாம் இனி மொட்டை ராஜேந்திரன் நினைவு வருமென நினைக்கும்போதுதான் சற்றே டரியலாகிறது.

    பின்னணி இசை

    பின்னணி இசை

    படத்தின் பெரும் பலம் ஒளிப்பதிவு. இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிற ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா மதுரையின் அழகியலை மண்மணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை மிரட்டல். 'என்ன நடக்குது நாட்டுல...' பாடல் புல்லரிப்பு வகையறா என்றால் 'உன் நெஞ்சுக்குள்ளே' மெலடி வருடல். ஜல்லிக்கட்டு தொடர்பான கதை தொடங்கியதும், கடந்த கால ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான காட்சிகள் தொகுப்பாக காட்டப்படுகின்றன. மெரினா போராட்டத்தின் எழுச்சியை ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு விளையாட்டில் தென் மாவட்டங்களில் நிலவி வருகிற சாதிய மோதல்களைத் துணிச்சலாகப் பேசியிருக்கிறது 'மதுரவீரன்' படம். நல்ல கதைக்களம், ரசிகர்களை எளிதில் ஈர்க்கிற மாதிரியான ட்ரெண்டி சப்ஜெக்ட் எனப் பிடித்திருந்தாலும், மலேசியாவில் இருந்து வந்த சண்முக பாண்டியன் தான் வந்த நோக்கத்தை அந்தலை சிந்தலையாக விட்டுவிட்டு ஜல்லிக்கட்டை நடத்தத் துடிப்பது, பிறகு, அப்பாவைக் கொன்றவனை கண்டுபிடித்த பின்பும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கே முன்னுரிமை கொடுப்பது என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தல். கடைசி கட்டங்களில் அடுத்து எதை வைப்பது என்பதில் தடுமாறியிருக்கிறது திரைக்கதை. சாதிய மோதல்களுக்கும், வன்முறைக்கும் எதிராக நிற்கும் சண்முக பாண்டியனே, "என் அப்பாவ கொன்னவன் யாருன்னு தெரிஞ்சும் கண்டந்துண்டமா வெட்டாம இருக்கேன்னா..." என வசனம் பேசுவது துருத்தல்.

    சாதிக்கு எதிரான துணிச்சல்

    சாதிக்கு எதிரான துணிச்சல்

    சாதிகளுக்குள் இருக்கும் சுயநல பிரிவினைவாதிகளால் ஏற்படுத்தப்படும் சாதிய மோதல்கள் துணிவாகக் கையாளப்பட்டிருக்கின்றன. எதிரும் புதிருமாய் முட்டிமோதிக்கொண்டிருந்த வேல.ராமமூர்த்தியே மைம் கோபியின் கைதூக்கி மேலேற உதவுவது சாதியற்ற சமூக விதைக்கான குறியீடு. ஆண்ட பரம்பரை, ஆளப்போற பரம்பரை என வரிந்துகட்டிக்கொண்டு சாதி வெறியில் திளைக்கும் இளைஞர்களையெல்லாம் 'பனானா' பவுன்ராஜ் வழியாக நையாண்டியாகவும், சண்முகபாண்டியன் வழியாக சீரியஸாகவும் விமர்சிக்கிறது படம். அதற்காகவே ஸ்பெஷல் பாராட்டுகள்.

    சண்முக பாண்டியனுக்கு "பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம்" சொல்லி, இயக்குநர் பி.ஜி.முத்தையாவுக்கு "மைல்ஸ் டு கோ" சொல்வோம்.

    English summary
    'Maduraveeran' is an action film lead by Shanmuga pandian directed by P.G.Muthiah. 'Maduraveeran' movie is based on jallikkattu in the backdrop of madurai. Read Maduraveeran review here..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X