Maidaan Review: மைதான் விமர்சனம்.. தியேட்டர்கள் எல்லாம் ஸ்டேடியமா மாறுது.. பிகிலுக்கெல்லாம் பிகிலு!
நடிகர்கள்: அஜய் தேவ்கன், பிரியாமணி
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
நேரம்: 3 மணி நேரம் 1 நிமிடம்
இயக்கம்: அமித் ஷர்மா
மும்பை: போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான் திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடைபெற்று பாராட்டு மழை குவிந்து வருகிறது. ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானதும் தியேட்டர்கள் எல்லாம் கால்பந்தாட்ட மைதானமாகவே மாறப்போகின்றன. இந்தியாவில் இதற்கு முன் பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்தவொரு படத்தை ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள்.

இந்த படத்தில் இந்தியாவின் சிறந்த கால்பந்தாட்ட கோச்சான எஸ்.ஏ. ரஹீம் ஆக அஜய் தேவ்கன் வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவி சாய்ரா கதாபாத்திரத்தில் பிரியாமணி வரும் காட்சிகள் எல்லாம் வேறலெவல்.
முதலில் இந்த கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டு பின்னர், ஓவராக ஒல்லியானதால் தூக்கியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக உருவாகி வந்த மைதான் திரைப்படம் நிச்சயம் இந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படத்துக்கு பல பிரிவுகளில் விருதுக்கு போட்டியாக நிற்கும் என தெரிகிறது. மைதான் படத்தின் கதை மற்றும் பிளஸ், மைனஸ் குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

மைதான் கதை: இந்தியாவுக்கும் ஃபுட் பாலுக்கும் என்ன சார் சம்மந்தம் என நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு 1951 முதல் 1962ம் ஆண்டு வரை கால்பந்தாட்டத்தின் பொற்காலமாக இந்திய விளையாட்டுத் துறையை மாற்றிய எஸ்.ஏ. ரஹீம் கோச்சின் வாழ்க்கை வரலாறும் ஏசியன் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்ற தருணங்களையும் அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்த மைதான் திரைப்படம். இப்படியொரு கோச் மீண்டும் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு கிடைக்க மாட்டாரா? என்கிற ஆதங்கம் நிச்சயம் இந்த படத்தை பார்த்தால் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கே எழும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
நடிகர்கள் பர்ஃபார்மன்ஸ்: எஸ்.ஏ. ரஹீமாக அஜய் தேவ்கன் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிப்பு அவரது லைஃப் டைம் செட்டில்மென்ட் நடிப்பு என்றே சொல்லலாம். பாலிவுட்டில் சிங்கமாக சுற்றி வரும் அஜய் தேவ்கன் இந்த ஆண்டு ஷைத்தான் படத்தின் மூலம் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியுள்ளார். அடுத்த சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தியேட்டர்களை எல்லாம் ஸ்டேடியமாக மாற்ற போகிறார். ஆடு ஜீவிதம் படத்துக்காக பிருத்விராஜுக்கு தேசிய விருது கிடைக்குமா? அல்லது மைதான் படத்துக்காக அஜய் தேவ்கனுக்கு தேசிய விருது கிடைக்குமா? என விவாதமே நடத்தும் அளவுக்கு அவரது நடிப்பு மிரட்டலாக உள்ளது.
பிளஸ்: அஜய் தேவ்கன் மட்டுமின்றி 1951ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்திய கால்பந்தாட்ட அணிக்காக விளையாடிய சுனி கோஸ்வாமி, பி.கே. பானர்ஜி, பீட்டர் தங்கராஜ், துல்சிதாஸ் பலராம், ஜர்னைல் சிங், பிரத்யுத் பர்மன் உள்ளிட்ட வீரர்களை பாலிவுட் நடிகர்கள் பலர் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இடமெல்லாம் கூஸ்பம்ப்ஸ் ஓவர்லோட் தான். பின்னணி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே நான் தான்டா பிஜிஎம் கிங் என மியூசிக் போட்டு மெய் சிலிர்க்க வைக்கிறார். இந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் விருது நிச்சயம் ஏ.ஆர். ரஹ்மானுக்குத்தான் கிடைக்கும். அதில், சந்தேகமே இல்லை. துஷார் கந்தி ராய் மற்றும் ஃபியோடர் லியாஸின் ஒளிப்பதிவு அந்த கிளைமேக்ஸ் இந்தியா - தென் கொரியா போட்டிகளின் போது செய்த மேஜிக் எல்லாம் பெரிய ஸ்க்ரீனில் மட்டுமே கண்டு ரசிக்க வேண்டிய அற்புத காட்சி. எடிட்டிங், சவுண்ட் டிசைன் என அத்தனை பேரும் மைதான் படத்தில் வரும் வசனத்தை போல ஒருவராக மாறி படத்தில் விளையாடி உள்ளனர்.
மைனஸ்: ஸ்போர்ட்ஸ் டிராமா படங்கள் அதிகம் பார்த்து போரடித்து விட்ட ரசிகர்களுக்கு சில இடங்கள் பார்த்து பழகியது போலவே இருக்கும். ஒரு சில இடங்களில் லேசான தொய்வு உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக படத்தை பார்த்தால் குறைகள் எல்லாம் பறந்து போய் அவர்கள் போட்டிருக்கும் உழைப்பு மட்டுமே தெரியும். நிச்சயம் ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை இந்த மைதான் கொடுக்கும் என்பதில் எந்தவொரு டவுட்டும் வேண்டாம். இது பிகிலுக்கெல்லாம் பிகிலு!


Click it and Unblock the Notifications











