Manmadha Leelai Review - ஒரு எபிசோட் 2 நிமிடங்கள்.. 'மன்மத லீலை'மினி வெப் சீரிஸ் விமர்சனம்.. தேறுமா?
Star Cast: Catherine, Navin Vetri
Director: Sanjay
சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது எல்லோரையும் பரபரத்து இயங்க வைத்திருக்கிறது. அதனால் மொபைலில் பார்க்கும் விஷயங்களைகூட ரொம்பவே குறைவான நேரமே பார்க்கும் மன நிலைமையில் இருக்கிறார்கள். அதிகம் பேர் இங்கே ரீல்ஸ் மோகத்தில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள்தான் புரட்டி போட்டன என்ற கூற்றும் எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க ரீல்ஸ் பார்க்கும் நேரத்துக்குள் ஒரு வெப் சீரிஸை பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் கதை ஷார்ட்ஸ் செயலியில் 'மன்மத லீலை' வெப் சீரிஸ் வெளியாகியிருக்கிறது.
உலகமே கைப்பேசிக்குள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதன் காரணமாக ஓடிடி தளங்களும் அதிக அளவு வளர்ந்துவிட்டன. அதில் ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றன. அந்த வெப் சீரிஸ்களின் நேரம் சராசரியாக எப்படியும் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் இருக்கும்.ஒவ்வொரு எபிசோடும் கிட்டத்தட்டா 45 நிமிடங்கள் வரை இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் அதைவிட குறைவான நேரத்தில் ஒரு வெப் சீரிஸை பார்க்கும் வகையில் கதை ஷார்ட்ஸ் செயலி வந்திருக்கிறது.

என்ன ஸ்பெஷல்?: இந்த செயலியில் வரும் வெப் சீரிஸ்களின் ஒவ்வொரு எபிசோடும் அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்குள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இந்த மைக்ரோ ட்ராமா வெப் சீரிஸ்களின் வளர்ச்சி இப்போது அதிகளவில் இருக்கிறது. ரீல்ஸ் பார்க்கும் நேரத்தில் ஒரு சீரிஸையே பார்க்க முடிவதால் ரசிகர்களின் பார்வை அந்தப் பக்கம் அதிகம் செல்கிறது. அந்தவகையில் கதை ஷார்ட்ஸ் செயலியில் வந்திருக்கும் மினி வெப் சீரிஸ்தான் மன்மத லீலை.
மன்மத லீலை மைக்ரோ ட்ராமா: இதனை சஞ்சய் என்பவர் இயக்க, கேத்ரின், நவீன், சங்கரி, மதன் குமார், ரியா தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யூகி சேது சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இரண்டு பெரிய கம்பெனிகளின் வாரிசுகள் முதலில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதும்; பிறகு ஹீரோ உடலில் ஹீரோயினும், ஹீரோயின் உடலில் ஹீரோவும் கூடு விட்டு கூடு பாய்ந்ததால் மலர்ந்த காதலும்; அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதும்தான் கதை.
எப்படி இருக்கு வெப் சீரிஸ்: மைக்ரோ ட்ராமா வெப் சீரிஸ் என்பதை மனதில் வைத்து இயக்குநர் வேலை பார்த்திருக்கிறார். மொத்தம் 40 எபிசோடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் அதிகபட்சம் 2.50 நிமிடங்களுக்குள்தான் இருக்கின்றன. மைக்ரோ ட்ராமாவில் சில நிமிடங்களுக்குள்ளேயே சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லியாக வேண்டும் என்பதால்; இயக்குநர் அதை செய்வதில் மட்டும்தான் கவனத்தை செலுத்தியிருக்கிறார்.
வேகமாக செல்கிறது ஆனால்?: சில நிமிடங்களுக்குள் ஒவ்வொரு எபிசோடிலும் கடகடவென்று சீன்களை இயக்குநர் கடத்தினாலும்; அதில் எந்த விதமான உணர்வோ, நடிகர்கள், நடிகைகளின் நடிப்போ இல்லை. கேத்ரின் மட்டும்தான் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோலை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோவாக வரும் நவீன் சுமாரான நடிப்பை வெளிப்படுத்த; மற்றவர்களோ ஏனோதானோவென நடித்து ஒப்பேற்றியது மாதிரியே இருக்கிறது. கொஞ்சம் கூட அவர்களது நடிப்பு நம்முடன் கனெக்ட்டே ஆகவில்லை. சில இடங்களில் எல்லாம் ஹிந்தி சீரியலை தமிழில் டப்பிங் செய்தது மாதிரியாக இருந்தது. அதில் இயக்குநர் அதிக கவனத்தை செலுத்தியிருக்கலாம்.
ப்ளஸ்ஸும், மைனஸும்: கதை ரீதியாக பார்த்தால் ஓகேதான். ஆனால் அதை ப்ரெசண்ட் செய்த விதத்தில்தான் இயக்குநர் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டார். கூடு விட்டு கூடு பாய்ந்த பிறகு ஹீரோவும், ஹீரோயினும் அலுவலகத்தில் சந்திக்கும் அனுபவங்கள் நன்றாக வந்திருந்தன. அதே டோனில் மற்ற ஏரியாக்களையும் அணுகியிருக்கலாம். சிறப்பு தோற்றத்தில் வரும் யூகிசேது தனது வழக்கமான ட்ரேட் மார்க் ஸ்டைலில் படபடவென்று டயலாக்குகள் பேசுகிறார். அது ஓரளவுக்கு ஈர்க்கவே செய்கின்றன
பஞ்ச தந்திர திரைப்பட ஸ்டைலில் அவர் வசனங்களை கொடுத்திருந்தாலும்; அது சில இடங்களில் ஓவர் டோஸ் ஆகி பார்ப்பவர்களை கடுப்பாக்குகிறது. முக்கியமாக அவரது அடுக்குத்தொடர் வசனங்கள், எதுகை மோனை வசனமெல்லாம் அவரை ஒரு குடுமி வைத்த டி.ராஜேந்தராக காண்பித்தது. அந்த ஏரியாவில் கொஞ்சம் எடிட்டர் இன்னும் கத்தரித்திருக்கலாம். ஜீவன் என்ற வில்லன் கேரக்டர் நம் ஜீவனைத்தான் எடுக்கிறார்.
கேமரா, இசை என அந்த ஏரியாக்களும் ஏதோ ஓகே என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஹீரோயினை பழைய ஆம்னி வேன் வைத்து கடத்துவதெல்லாம் 90களோடு முடிந்துவிட்டது பாஸ். இப்படி எக்கச்சக்க இடங்களில் இந்த மைக்ரோ ட்ராமா வெப் சீரிஸ் நொண்டி அடித்து நம்மை திண்டாட வைக்கிறது. ஒன்றிரண்டு நிமிடங்கள் என்பது ரொம்பவே குறைவான நேரம்தான். இந்த சீரிஸின் பல இடங்களில் அதையும் ஃபார்வேர்ட் செய்து பார்க்கும் அளவுக்குதான் நிலைமை இருந்தது. மைக்ரோ ட்ராமா என்ற புதிய முயற்சியின் முடிவில் இயக்குநர் பெரிய அயற்சியையே கொடுத்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..


Click it and Unblock the Notifications
