ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே குழப்பம்.. காத்துவாக்குல ஒரு காதல் படம் எப்படி இருக்கு?
சென்னை: மாஸ் ரவி எழுதி இயக்கி நடித்த திரைப்படம் காத்துவாக்குல ஒரு காதல். இத்திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும், சாய் தீனா, சூப்பர்சூ சூப்பராயன், தங்கதுரை, பல்லவி, கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிகேவி இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியான இப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
கதையின் நாயகனான மாஸ் ரவியும்(ஜீவா) லக்ஷ்மி பிரியாவும் (மேக்னா) உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலிக்கிறார்கள். இவர்கள் காதலிக்க தொடங்கி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு, காதலர் தினத்தில் தங்களுடைய ஓராண்டு நிறைவை கோலாகலமாக கொண்டாட திட்டமிடுகின்றனர். இந்த நேரத்தில் லட்சுமி பிரியாவுக்கு நடு இரவில், தன்னுடைய காதலனான மாஸ் ரவி விபத்தில் சிக்குவது போல கனவு வருகிறது. இதனால், பயந்து போன லட்சுமி பிரியா, காதலனுக்கு போன் செய்கிறாள். ஆனால், காதலன் போனை வேறு யாரோ எடுத்து, நீ யார் எதற்காக எனக்கு போன் செய்கிறாய், என் பெயர் ஜீவா இல்லை மாஸ் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

காத்துவாக்குல ஒரு காதல்: இதனால், குழப்பம் அடையும் லட்சுமி பிரியா, தன்னுடைய காதலனான ஜீவாவை பல இடங்களில் தேடி அலைகிறாள். வழக்கமாக இருவரும் சந்தித்து பேசிய இடம், பார்க், ஐஸ் கிரீம் ஷாப் என தேடி அலைகிறாள். ஆனால், காதலனான ஜீவா பத்தி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. கடைசியில் லட்சுமி பிரியா தன்னுடைய காதலனை தேடி கண்டுபிடித்தாரா... ஜீவாவிற்கு என்ன ஆனது என்பது தான் காத்துவாக்குல ஒரு காதல் திரைப்படத்தின் மீதி கதை.
படத்தின் கதை: இந்த படத்தை மாஸ் ரவி எழுதி இயக்கி அதில் கதையின் நாயகனாக நடித்தும் இருக்கிறார். படத்தில் பெயரிலேயே காதல் இருப்பதால், ஒரு காதல் கதையாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. படம் தொடங்கிய 10 நிமிடம் ரசிக்கும் படி இருந்தது. ஆனால், அடுத்த நிமிடம் வடசென்னை படத்தில் வருவது போல, இவன் இந்த ஏரியா தாதா, அவன் அந்த ஏரியா தாதா என சொல்லப்பட்டு, படத்தில் தேவையே இல்லாமல், பல கொலை, சண்டை, வெட்டு, குத்து வருகிறது. மிரட்டலான வில்லனாக சூப்பர் சூப்பராயனும், சாய் தீனாவும் நடித்து இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எதற்கான அடித்து கொள்கிறார்கள் என்பது கடைசி வரை தெரியவே இல்லை. ஆனால், இருவரின் நடிப்பும் சூப்பர்.
நல்ல நடிப்பு: அதே போல மாஸ் ரவி முதல் பாதியில் அசட்டுத்தனமாக காதலிக்கும் இளைஞராகவும், இரண்டாம் பாதியில் அதிரடியான ரௌடியாகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி லட்சுமி பிரியாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்திற்கு காத்து வாக்குல ஒரு காதல் என்று பெயர் வைத்துவிட்டதால், படத்திற்கு தேவையே இல்லாமல் இரண்டாம் ஹீரோயினாக பல்லவி மாஸ் ரவியை ஒரு தலையாக காதலிக்கிறாள். இசையமைப்பாளர் ஜிகேவியின் இசையில் வரும் இரண்டு பாடல்களும் ரசிக்கும் படி உள்ளது. ஆனால், மனதில் நிற்கவில்லை. தேவா குரலில் ஒலிக்கும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் இயக்குநர் நல்ல ஒரு காதல் கதையை தொடங்கி கடைசியில் அதை ரௌடிச கதையாக மாற்றி கதையின் போக்கை கெடுத்துவிட்டார். மொத்தத்தில் காத்துவாக்குல ஒரு காதல்... வெக்கையான காதல்.


Click it and Unblock the Notifications











