Haraa Review: கொடுமையின் உச்சகட்டம் .. கோட்டைவிட்ட மோகன்.. பயில்வானின் ஹரா விமர்சனம்!
சென்னை: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகன் நடித்துள்ள திரைப்படம் ஹரா படம். இதில், அனுமோல், சாரு ஹாசன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, தீபா ஷங்கர், சுரேஷ் மேனன் என பலர் நடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
இந்த படத்திற்கு ஹரா என்று பெயர் வைத்து இருக்கிறார்கள், ஹரா என்றால் என்ன அர்த்தம் என்று தெரியல, ஒரு வேளை என் சின்ன அறிவுக்கு இது தெரியாமல் இருக்கலாம். இயக்குநர் நம்மைவிட அதிகமான அறிவு உள்ளவர் என்பதால், அவருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த படத்தில் மோகன், தனது மகள் மீது கண்மூடித்தனமாக பாசம் வைத்து இருக்கிறார்.

ஹரா படத்தின் கதை: கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறாள். இதையடுத்து, திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளின் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேடிச் செல்கிறார் மோகன். கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு அவர்களைப் பழிவாங்குகிறார் மோகன் இதுதான் படத்தின் கதை.
நிறைய கதாபாத்திரங்கள்: இந்த படத்தில் சாரு ஹாசன், வனிதா விஜயகுமார், பழ கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். பழ கருப்பையா மூன்று காட்சிகளில் வந்தாலும், மனதில் நிற்கும்படி நடித்து இருக்கிறார். அதே போல வனிதா விஜயகுமார் அமைச்சராக வருகிறார். ஆனால், எது என்ன கதாபாத்திரம் என்று நமக்கு தெரியவே இல்லை. இப்படி படத்தில் பல நடிகர்களை பயன்படுத்தி குழப்பி இருக்கிறார் இயக்குநர். இதனால் எந்த காட்சியும் மனதில் ஒட்டவே இல்லை.
மனதில் ஒட்டவில்லை: காதல் மன்னனாக நடித்த மோகன், இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து இருக்கிறார். மோகனை ரொமான்ஸ் ஹீரோவாக பார்த்து பழகிய நமக்கு அவரை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க மனம் வரவில்லை. 14 வருடம் மோகனின் எந்த படமும் வெளியாகவில்லை, ஹரா திரைப்படம கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று பார்த்தால், எந்த காட்சியும் அழுத்தமே இல்லாமல் இருப்பதால், எதுவும் மனதில் தைக்கவே இல்லை.
பிளஸ்: மோகனின் லுக், அவரது கூலான உடல்மொழி, மோகனை துணிந்து ஆக்ஷன் ஹீரோவாக்கிய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குறியது. சண்டைக் காட்சிகளில் படத்தொகுப்பாளர் காட்சிகளை சுவாரஸ்யமாக வைத்திருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். மேலும், ரஷாந்த் அர்வினின் பின்னணி இசை கதைக்கு கொஞ்சம் பலம் சேர்த்தாலும், பாடல்கள் அந்தக் கால பாசப்பறவைகள் மூடில் ரொம்ப உணர்ச்சிகளை பிழிந்து விடுகின்றது.
கோட்டைவிட்ட மோகன்: அண்மையில் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம், கதைத் தேர்வு அழுத்தமான பின்னணி இருந்ததால், படம் வெற்றி பெற்றது. ஆனால், மோகன் கதையை சரியாக தேர்வு செய்யாமல் கோட்டைவிட்டு உள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் ஹரா படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











