Mr House Keeping Review: மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்.. லாஸ்லியா, ஹரிபாஸ்கருக்கு லவ் செட்டாச்சா?
நடிகர்கள்: ஹரிபாஸ்கர், லாஸ்லியா, ரயான்
இசை: ஒஷோ வெங்கட்
இயக்கம்: அருண் ரவிச்சந்திரன்
சென்னை: அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'ஜம்ப் கட்ஸ்' யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர், பிக் பாஸ் பிரபலங்களான லாஸ்லியா, ரயான், யூடியூபர் ஷாரா மற்றும் இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி ரொமான்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் இன்று வெளியானது.
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர் ஒவ்வொரு வீடியோ முடிவிலும் கடைசியாக சொல்லும் 'எதுக்கு' என்கிற வசனமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வந்த நிலையில், கொஞ்ச வருஷமாக அவரை எங்கே காணோம் என தேடிய ரசிகர்களுக்கு ஹீரோவாக காட்சி தந்திருக்கிறார்.

சிங்கிள் ஆளாக காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ஹரி பாஸ்கர் பிக் பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் தேறுமா? தேறாதா? ரசிகர்களை சிரிக்க வைத்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் கதை: கல்லூரியில் படிக்கும் போது லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹரி பாஸ்கருக்கு லாஸ்லியா ஓகே சொல்லவில்லை. அதன் பின்னர், அவரிடம் சவால் விட்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால், கடைசியில் அந்த பெண்ணும் இன்னொருவரை திருமணம் செய்துக் கொள்ள விரக்தியின் உச்சிக்கே செல்லும் ஹரி பாஸ்கர் தற்கொலைக்கு முயற்சிக்க அவரை ஷாரா காப்பாற்றுகிறார். அதன் பின்னர், ஒரு வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக ஹரி பாஸ்கர் செல்ல, அங்கே லாஸ்லியாவை மீண்டும் பார்க்கிறார். அவரை மறுபடியும் காதல் செய்ய வைக்க போராடும் அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: தேனாண்டாள் நிறுவனம் மூலம் உருவாகியுள்ள இந்த படம் ஹரி பாஸ்கருக்கும் லாஸ்லியாவுக்கும் ஒரு நல்ல வெற்றிப் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பக்காவான காமெடி கதையை குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை ஆங்காங்கே சரியாக தூவி அனைவரும் பார்க்கும்படியான ஒரு படமாக கொடுத்து பாராட்டுக்களை அள்ளுகிறார். லாஸ்லியா நடிப்பில் இதற்கு முன் வெளியான படங்கள் சரியாக அமையாத நிலையில், அவருக்கும் இந்த படம் நல்ல படமாகவே மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ்: லாஸ்லியாவின் பெஸ்ட்டியாக மாறும் ஹரி பாஸ்கர் பிக் பாஸ் ரயான் வந்த பின்னர் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் மற்றும் டாக்ஸிக் லவ்வராக மாறுவது என தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். ரசிகர்களை அடிக்கடி ஷாராவின் ஒன்லைனர்கள் சிரிக்க வைத்து போரடிக்காமல் படம் செல்ல அருமையாக உதவுகிறது. லாஸ்லியாவின் அழகான நடிப்பு, இளவரசு உள்ளிட்டோரின் அழுத்தமான நடிப்பு படத்திற்கு பக்க பலம்.

மைனஸ்: படத்தின் நீளம் தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியிருக்கிறது. இந்த வாரம் குடும்பஸ்தன், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என தொடர்ந்து யூடியூபர்களின் காமெடி சரவெடி கதைகள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் சென்று படங்களை பார்த்து என்ஜாய் பண்ணலாம். ஆனால், பொங்கல் படங்களையே ரசிகர்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறிதான்.


Click it and Unblock the Notifications











