Mr X Review: மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. யாரு வில்லன், யாரு ஹீரோ?.. மிரட்டியதா இந்த ஸ்பை த்ரில்லர்?
சென்னை: விஷ்ணு விஷாலை வைத்து FIR எனும் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் தான் மிஸ்டர் எக்ஸ். இந்த படத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.

துரந்தர் படம் அளவுக்கு எல்லாம் இருக்காது என்றும் இது பிரச்சார படம் இல்லை என்றும் மனு ஆனந்த் ஏற்கனவே சொன்ன நிலையில், ஸ்பை த்ரில்லர் படமாக த்ரில்லிங்கா இருந்ததா? என்றால், அதுவே பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சரி வாங்க படத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.
மிஸ்டர் எக்ஸ் கதை: இந்தியாவின் டாப் ரா ஏஜென்ட்டாக மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் வருகிறார். நியூக்ளியர் பாம் தயாரிக்க உதவும் மூலக்கூறு பொருளை இமயமலையில் ஒளித்து வைத்துள்ளனர். அதை பல ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாத்து வருகிறார். ஒரு கட்டத்தில் ரஷ்யர்கள் அதை எடுக்க முயற்சிக்கும் போது, அதை தடுக்க முயன்ற மிஸ்டர் எக்ஸையும் அவர்கள் கைதியாக்கி மாஸ்கோவுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு அதை விற்கப்போவதாக ரா தலைமைக்கு (மஞ்சு வாரியர்) தகவல் வருகிறது. இந்த மிஷனில் அமரன் (கெளதம் கார்த்திக்) மற்றும் கெளதம் (ஆர்யா) இருவரும் களம் இறங்குகின்றனர். இதில், யார் ஹீரோ? யார் வில்லன்? என்பது தான் மிஸ்டர் எக்ஸ் படத்தின் கதை. சென்னையில் ஜி20 மாநாடுகள் நடக்கும் போது ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதையே படமாக்கியுள்ளனர்.
படம் எப்படி இருக்கு?: இந்த கதையை தரமான மேக்கிங் மற்றும் ஸ்க்ரீன்ப்ளே செய்திருந்தாலே படம் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கும். ஆனால், இயக்குநர் மனு ஆனந்த் ரஷ்யா, பாகிஸ்தான் என்றெல்லாம் கதையை பெரிதாக எடுத்துக் கொண்டு சென்றாலும், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதமர் மோடியாக வரும் நபர் முதல் மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் வரும் சரத்குமார் மேக்கப் வரை எதுவுமே பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ஆர்யா முதல் காட்சியில் நீருக்கு அடியில் இருந்து சிக்ஸ்பேக் உடம்புடன் வரும் காட்சியை கிளைமேக்ஸில் வைத்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும்.
மஞ்சு வாரியர் முடிந்த வரை ஆக்ஷன் காட்சிகளில் அசத்தினாலும், பல இடங்களில் அவருக்கு ஆக்ஷன் சொன்னதும் நடிப்பது போலவும் கட் சொன்னதும் நடிப்பை அப்படியே நிறுத்தி விடுகிறார். ஆர்யாவின் தந்தை யார்? தங்கையை எப்படி பிரிகிறார், போன்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் எம்ஜிஆர் காலத்து குடியிருந்த கோயில் ஃபிளாஷ்பேக்காக உள்ளது.
கெளதம் ராம் கார்த்திக் செம ஃபிட்டாக நக்கலான சிரிப்புடன் வில்லத்தனத்தில் அசத்துகிறார். அவருடைய ஃபிளாஷ்பேக் போர்ஷன் ஸ்ட்ராங்காகவே உள்ளது. ஆனால், ரைசா வில்சன் காட்சிகள், அதுல்யா ரவியை வைத்து விளையாடும் நியூக்ளியர் ரியாக்டர் கேம் எல்லாம் இன்னமும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
பிளஸ்: ஆர்யா, அனகா லவ் ஸ்டோரி கொஞ்சமாக இருந்தாலும் க்யூட்டாக இருக்கிறது. ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் இந்த படத்துக்காக போட்டுள்ள பெரும் உழைப்பு படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. மிஸ்டர் எக்ஸ் உளவாளியாக சூர்யவம்சம், சூரியன் பட கெட்டப்புகளில் சரத்குமாரை காட்டும் போது தியேட்டரே பிளாஸ்ட் ஆகிறது. அந்த காமினி ட்விஸ்ட் கிளைமேக்ஸில் கைகொடுத்துள்ளது. ஏகப்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மைனஸ்: திபு நிணன் தாமஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கத் தவறிவிட்டது மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. இயக்குநர் மனு ஆனந்த் ஏகப்பட்ட கதைகளை எழுதி உள்ளே புகுத்த நினைத்து, எதையும் சரியாக சுவாரஸ்யமான திரைக்கதையாகவோ, வியப்பூட்டும் ஸ்டன்ட் சீக்வென்ஸாகவோ, ஸ்பை த்ரில்லருக்கே தேவையான ட்விஸ்ட் இருந்தும் அதை மேம்போக்காக எடுத்த விதம் படத்தை பாதிக்கிறது. ஆனால், ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமாரின் டெடிகேஷன் கடைசி வரை படத்தை பார்க்க வைத்து விடுகிறது.


Click it and Unblock the Notifications