Mufasa Review: முஃபாசா விமர்சனம்.. 3டி ட்ரீட்.. சிம்பா அப்பாவின் கதை.. இங்கேயும் சமூகநீதியா?
நடிகர்கள் (குரல்): அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன்
இசை: டேவ் மெட்ஜர், நிக்கோலஸ் ப்ரிட்டல் மற்றும் லின்
இயக்கம்: பேரி ஜென்கின்ஸ
சென்னை: இந்த வாரம் வெளியான விடுதலை 2 மற்றும் முஃபாசா என 2 படங்களிலும் சமூக நீதியை மையமாக வைத்து மக்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர். சிம்பா தி லயன் கிங் படத்தை கடந்த 2019ம் ஆண்டு உலகமே கொண்டாடியது. சிம்பாவின் அப்பாவான முஃபாசாவின் கதையாக ப்ரீக்வெல் படமாக முஃபாசா த லயன் கிங் படம் இன்று வெளியானது.
ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்கள் எல்லாம் வெறும் குழந்தைகளுக்கான படமாக மட்டும் கருதுவதில்லை. அந்த ஜானருக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து தெரிந்த காமிக்ஸ் கதையை விஷுவல் ட்ரீட்டாக எந்தளவுக்கு தத்ரூபமாக கொடுக்க முடியும் என்று காட்டி வருகின்றனர்.

அவர்களின் உழைப்பை தியேட்டரில் மக்கள் இந்த கிறிஸ்துமஸ்க்கு கொண்டாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. த லயன் கிங் படம் அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்ததா? சிம்பாவின் அப்பா முஃபாசா கதை ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தியதா? இல்லையா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.
முஃபாசா கதை: த லயன் கிங்காக சிம்பா மாறிய நிலையில், சிம்பாவுக்கும் அவரது ஜோடி சிங்கமான நலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையான கியாராவுடன் நலா அடுத்த குழந்தையை பிரசிவிக்க உள்ள நிலையில், ஒரு இடத்துக்குச் செல்கின்றனர். அங்கே சிம்பாவின் அப்பா முஃபாசாவின் கதையை பெண் குழந்தை கியாராவுக்கு ரஃபிகி எனும் குரங்கு சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது. சாதாரண சிங்கக்கூட்டத்தில் பிறந்து வளர்ந்து பெற்றோர்களை விட்டு பிரியும் சூழலில் இன்னொரு இடத்தில் தஞ்சம் புகும் முஃபாசா அந்த இடத்துக்கே அரசன் ஆனது எப்படி என்பது தான் முஃபாசா படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: தண்ணீரை கண்டாலே பயப்படும் குட்டிச் சிங்கமாக முஃபாசா இருக்கும் போது அதன் பெற்றோர்களை ஒரு வெள்ளம் வந்ததன் காரணமாக பிரிய நேரிடுகிறது. வேறு ஒரு இடத்துக்கு அடித்துச் செல்லப்படும் முஃபாசாவை முதலைகளிடம் இருந்து இன்னொரு சின்ன சிங்கமான டாக்கா காப்பாற்றுகிறது. தனது அப்பா அம்மாவான ராஜா ஒபேசி மற்றும் ராணி எஷியிடம் முஃபாசாவை டாக்கா அழைத்துச் செல்கிறான். அங்கே இருவரும் அண்ணன் தம்பியாகவே வளர்கின்றனர். டாக்கா விரும்பும் நலா முஃபாசாவை விரும்ப அங்கே பாகுபலி பகை உருவாகிறது. வெள்ளை சிங்கம் கூட்டம் ஒன்று இவர்கள் இருக்கும் பகுதியை தாக்க யானைக் கூட்டத்தின் உதவியோடு முஃபாசா அவற்றை ஓடவிடும் காட்சிகள் அட்டகாசம். வெள்ளை சிங்கத்தின் தலைவன் தனது வாரிசு கொல்லப்படுவதால் பழி வாங்கத் துடிக்க இறுதியில் என்ன ஆனது உடன் பிறவாத சகோதரன் டாக்கா வஞ்சனையால் ஸ்கார் ஆக எப்படி மாறுகிறான் என்பதை இயக்குநர் செதுக்கியிருக்கிறார்.

பிளஸ்: 3டியில் இந்த வாரம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு அனிமேஷன் படத்தை பார்க்க சரியான தருணம். விஷுவலாக படம் நின்று பேசுகிறது. படத்தில் உள்ள கதையும் பல இந்திய சினிமாவில் பார்த்த கதை போலவே நகர்கிறது. சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்று சொல்லக் கேட்டு இருப்போம். அந்த சிங்கக் கூட்டத்தில் யாரு ராஜாவாக மாறுகிறார் என்பதும் அரச பரம்பரையில் பிறப்பவன் தான் அரசனாக வேண்டும் என்று இல்லை, யார் மக்களை காப்பாற்றுகிறானோ அவன் தான் தலைவன் என்கிற மெசேஜ் எல்லாம் டாப் நாட்ச்.
மைனஸ்: த லயன் கிங் படத்தில் ஏகப்பட்ட கூஸ் பம்ப்ஸ் மற்றும் அட்வெஞ்சர் காட்சிகள் கடைசி வரை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும். ஆனால், முஃபாசா கதையில் அதற்கான ஸ்கோப் இருந்தாலும் பெரிதாக பல இடங்களில் வசனம் மட்டுமே படத்தை நகர்த்திச் செல்வது சற்றே ஏமாற்றம் தான்.


Click it and Unblock the Notifications