My Lord Review: மை லார்ட் விமர்சனம்.. சுசிலாவின் கிட்னியை திருடியது யார்?.. படம் எப்படி இருக்கு?
சென்னை: கடந்த ஆண்டு அதர்வாவை வைத்து DNA என குழந்தைகள் திருட்டுக் கதையை மையமாக வைத்து ஒரு நல்ல படத்தைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் இந்த ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட்' (My Lord) படத்தை பிப்ரவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.
ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், ஆஷா சரத், கோபி நயினார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மை லார்ட்' படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.

கிட்னி திருட்டுக் கதையை மையமாக வைத்து நெஞ்சை உலுக்கும் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த 'மை லார்ட்' படத்தின் கதை, பிளஸ், மைனஸ் என ஒட்டுமொத்த விமர்சனத்தையும் இங்கே பார்க்கலாம் வாங்க..
'மை லார்ட்' கதை: ரேஷன் கடை முதல் அரசு மருத்துவமனை வரை கடைகோடியில் க்யூவில் நின்றுக் கொண்டு தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் முத்துச்சிற்பியும் (சசிகுமார்), எல்லா லைனையும் பை பாஸ் செய்து விட்டு செல்லக் கூடிய மத்திய அமைச்சரும் (ஆஷா சரத்) ஒரு புள்ளியில் சந்திக்க என்ன ஆகிறது என்பது தான் 'மை லார்ட்' படத்தின் கதைச்சுருக்கம்.
கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுசிலா (சைத்ரா) தனது அப்பா மறைவுக்குப் பிறகு தன்னை பார்த்துக் கொள்ளும் முத்துச்சிற்பியையே விரும்புகிறார். ஆனால், சுசிலாவை நல்ல இடத்தில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என முத்துச் சிற்பி போராடுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர்.
அதே சமயம் சென்னையில் வசித்து வரும் மத்திய அமைச்சராக நடித்துள்ள ஆஷா சரத்துக்கு கழுத்தளவுக்கு காசு இருந்தும் தீர்த்த தண்ணீரை கூட குடிக்கக் கூடாத அளவுக்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை காப்பாற்ற முயற்சிக்கும் அவரது மகன் சசிகுமாரை ஏன் தேடுகிறார்? சுசிலாவின் கிட்னி எப்படி? யாரால் திருடப்படுகிறது. கடைசியில் முத்துச் சிற்பிக்கும் சுசிலாவுக்கும் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜு முருகன் ஜிப்ஸி படத்தில் அழுத்தமான அரசியலை பேசியிருந்தார். அந்த படம் ஏகப்பட்ட சென்சார் கட்களை சந்தித்து இறுதியில் வெளியான போது குத்துயிரும் குலை உயிருமாக வர படம் பெரிதாக ஓடவில்லை. கார்த்தியை வைத்து கடைசியாக எடுத்த ஜப்பான் படமும் தோல்வியை சந்தித்தது. ஆனால், இந்த முறை சசிகுமாரை வைத்து மினிமம் கியாரண்டி படத்தை கொடுத்து விட வேண்டும் என கிட்னி திருட்டுக் கதையை கையில் எடுத்திருக்கிறார்.
நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து அசத்தலான நடிப்பை வழங்கி வரும் சசிகுமார் இந்த படத்தில் முத்துச்சிற்பியாகவே வாழ்ந்துள்ளார். 3 பிஹெச்கே படத்தில் நடித்த சைத்ரா இந்த படத்தில் சுசிலாவாக வாழ்ந்துள்ளார். அதிலும் இறந்தவர்களின் ஆத்மா உடம்புக்குள் வந்து சாமி ஆடுவது போன்ற காட்சிகளில் எல்லாம் வாயில் பீடியை வைத்து இழுத்துக் கொண்டு அவர் நடித்துள்ள நடிப்பு அல்டிமேட்.
மக்கள் குத்து பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம் படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளார். ஆஷா சரத் தனது முக பாவனைகளிலேயே வில்லத்தனத்தை காட்டும் விதம் அருமை. அவரது மகளாக பிக் பாஸ் கெமி நடித்துள்ளார். மகனாக வரும் நபர், அவரது உதவியாளர் என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
சாமானிய மனிதனிடம் ஒரு நாள் தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தால், அவன் என்ன செய்வான் என்கிற பரபரப்புடன் படம் ஓடுகிறது. ஏழை மக்களை ஏமாற்றி கிராமங்களில் நடக்கும் கிட்னி திருட்டு காட்சிகளை படமாக்கிய விதம் பதை பதைக்க வைக்கிறது.
பிளஸ்: இந்தியா ஜனநாயக நாடு, அதை விட மிகப்பெரிய பிளாக் மார்க்கெட் நாடும் நம்ம நாடு தான் என வரும் வசனங்களும் உயிருடன் இருப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிட அதற்கு எதிராக போராடும் காட்சிகளும் படத்திற்கு பலமாக மாறியுள்ளது. ராஜு முருகன் தேர்வு செய்த கதை, அவரது வசனங்கள், சசிகுமார், சைத்ராவின் நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ். ஷான் ரோல்டனின் இசை படத்தை கடைசி வரை தூக்கி நிறுத்துகிறது. கிளைமேக்ஸில் வரும் பின்னணி இசை மூலம் கண்கலங்க வைத்து விடுகிறார். வள்ளலார் தத்துவங்கள் இடம்பெற்ற முறை, மருத்துவமனையில் பூஜை போடும் காட்சி, காசு பணத்தை விட மனிதத்தின் முக்கியம் போன்ற விஷயங்களை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் பாராட்டுக்களை அள்ளுகிறார்.
மைனஸ்: படத்தின் முதல் பாதியில் இயக்குநர் கையாண்ட ட்ரீட்மெண்ட் கொஞ்சம் செயற்கையாகவே தெரிந்தது. முத்துச்சிற்பி கதாபாத்திரத்தை சாதாரண எளிய மனிதனாகவே காட்டி கிட்னி பிர்ச்னையை கையில் எடுத்திருந்திருக்கலாம். ஆனால், ஏகப்பட்ட சமூக அவலங்களை அவன் வழியாக சொல்ல நினைத்த இடத்தில் சில காட்சிகள் தொய்வாகவும் லாஜிக் மீறல்களாகவும் காணப்படுகின்றன. ஆனால், இரண்டாம் பாதி மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் படத்தை காப்பாற்றுகிறது. கண்டிப்பாக தியேட்டரில் இந்த அழுத்தமான படைப்பை பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











