»   »  நாச்சியார் விமர்சனம் #NaachiyaarReview

நாச்சியார் விமர்சனம் #NaachiyaarReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
#Naachiyar Review #நாச்சியார் விமர்சனம் #Jyothika #GVPrakash
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ்

ஒளிப்பதிவு: ஈஸ்வர்

இசை: இளையராஜா

தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் & இயான் ஸ்டுடியோஸ்

இயக்கம்: பாலா

எளிய மனிதர்கள், காக்கிச் சட்டைகள், ஒரு புறம் மனித மிருகங்கள், இன்னொரு பக்கம் மனிதாபிமானிகள், போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்கள் என வாழ்வின் பல கூறுகளை பாலாவின் பெரும்பாலான படங்களில் பார்க்கலாம். ஒரு சில படங்களில் இவற்றுக்கு இடையே வன்முறை மிகுந்திருக்கும்... நாச்சியாரும் இந்த வரையறையிலிருந்து தப்பவில்லை. பாலாவிடமிருந்து அவரது பாணியில், ஆனால் கொஞ்சம் அவசரமாக வந்திருக்கும் படம், நாச்சியார்.

Naachiyaar Review

உதவி ஆணையர்கள் ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் 'ஒரு மைனர் ரேப் கேஸை'க் கையாள நேர்கிறது. கேஸில் தொடர்புடைய ஜிவி பிரகாஷ் - இவானா இருவருமே காதலர்கள். பதின்ம வயதின் எல்லையில் நிற்பவர்கள், விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதினாறே வயதில் இவானா கருவுற்றிருக்கிறாள். வழக்கை விசாரிக்கும்போதுதான். அந்தக் கருவுக்கு யார் காரணம் என்பது தெரிகிறது. அவனைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் நாச்சியார் என்பதுதான் மீதி.

Naachiyaar Review

சின்ன கதைதான். கிட்டத்தட்ட பார்த்த கதையும் கூட. அதை பாலா தன் பாணியில், எளிய மனிதர்களின் ஈரமிக்க வாழ்க்கைப் பின்னணியில் தந்திருக்கிறார்.

வழக்கமான பாலா படங்களை விட இந்தப் படத்தின் நீளம் குறைவு.

வசனங்களில் வழக்கமான பாலாத்தனம். சில இடங்களில் நறுக்குத் தெறிக்கும் நக்கல், நய்யாண்டி. குறிப்பாக அடிக்கடி பிறக்கும் புதிய இந்தியா குறித்த பாலாவின் க்ளைமாக்ஸ் வசனம்.

Naachiyaar Review

பணம், பதவி, அந்தஸ்து, சமூக கவுரவம் பார்க்கும் ஒரு நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினனுக்கும், விளிம்பு நிலை மனிதனுக்குமுள்ள மனிதாபிமானத்தை, காதலை மிக சிம்பிளாக, ஆனால் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் பாலா, ஜிவி பாத்திரம் மூலம்.

ஜோதிகாவுக்கு நேர்மையும் மனிதாபிமானமும் துணிச்சலும் நிறைந்த ஐபிஎஸ் அதிகாரி வேடம். அவர் 'பிய்த்து உதறியிருக்கிறார்' என்றெல்லாம் சொல்வது 'சிவாஜிக்கு நன்றாக நடிக்கத் தெரியும்' என்பதைப் போல வழக்கமான க்ளீஷே. சுருக்கமாக, மறுவரவில் ஜோதிகாவின் பெயர் சொல்லும் வேடம் இந்த நாச்சியார்.

ஜிவி பிரகாஷுக்கு நியாயமாக இதுதான் முதல் படம். அவர் இனி அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். காத்து பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா வர்ஜின் பாய் மாதிரி வேடங்கள் செய்தால் அவரைத் தேடி வந்து அடிப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு முற்றிலும் வேறு ஜிவி பிரகாஷ். நல்ல முயற்சி, மாற்றம். அதைச் செய்ய பாலாவால்தான் முடியும்.

Naachiyaar Review

இவானா மிக அருமையாகச் செய்திருக்கிறார். புதுமுகம் என்றெல்லாம் யாரும் சொல்லிவிட முடியாது. காட்டு மலர் போல அத்தனை எளிமை, புத்தம் புதிய முகம், தேர்ந்த நடிப்பு. குறிப்பாக ஜோதிகா விசாரணையில் அந்தப் பெண் காட்டும் பாவம்... மனசை என்னமோ பண்ணுகிறுது.

போலீஸ் அதிகாரியாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் மிக இயல்பாகச் செய்திருக்கிறார். இன்னுமொரு தேர்ந்த குணச்சித்திர, வில்லன் தயார்.

மற்ற பாத்திரங்களில் வரும் யாருமே சோடை போகவில்லை. இன்னும் அறியாத ஒரு உலகம், வாழ்வியலை இவர்கள் மூலம் பாலா காட்டியிருக்கிறார். அந்த சமையல் காண்ட்ராக்டர் ஒரு சாம்பிள்.

படத்தின் மைனஸ், தொலைக்காட்சித் தொடர் போன்ற ஒரு உணர்வைத் தரும் இழுவைத்தனம். குறிப்பாக அந்த பாய் வீட்டு கல்யாணத்தை இத்தனை விலாவாரியாக ஒரே இடத்தில் இழுத்துக் கொண்டிருப்பதில் அலுப்பு.

பாலா படம் என்றாலே எதையாவது வெட்டி எறிய வேண்டும், கடித்துத் துப்ப வேண்டும் என்பது நியதி போலிருக்கிறது. அதை இந்தப் படத்திலும் செவ்வனே செய்திருக்கிறார் பாலா.

Naachiyaar Review

இளையராஜாவின் இசை ஆர்ப்பாட்டமில்லாமல், தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளை கதறவிடுகிறது. குறிப்பாக ஜிவி - இவானா காதல் மற்றும் க்ளைமாக்ஸில். ஒரே ஒரு பாடல்தான் என்றாலும், அபார இனிமை. ஆனால் அதைக் கூட முழுமையாக வைக்கவில்லை பாலா என்பதுதான் குறை.

ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

English summary
Bala's Jyothika starrer Naachiyaar review. The movie is watch worth for its humanitarian narration and conveys some positive vibes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil