twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: விஷால், லட்சுமி மேனன், சரண்யா, ஜெயப்பிரகாஷ், சுந்தர்ராமு, ஜெகன்

    இசை: ஜிவி பிரகாஷ்

    காமிரா: ரிச்சர்ட் எம் நாதன்

    தயாரிப்பு: விஷால் - சித்தார்த் ராய் கபூர்

    இயக்கம்: திரு

    பழிவாங்கல் கதைதான். ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட திரைக்கதை படத்துக்கு புதிய பரிமாணம் தருகிறது.. கடைசி வரை ஈர்ப்புடன் பார்க்க வைக்கிறது.

    1985-ல் ரஜினி நடித்து வெளியான நான் சிகப்பு மனிதன் கதைக்கும், இப்போது விஷால் எடுத்துள்ள நான் சிகப்பு மனிதன் கதைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ரஜினி படத்தில் வில்லன்கள் அவரை தலைகீழாக கட்டித் தொங்க விட்டு, அவர் கண்ணெதிரிலேயே தாயைக் கொன்று, தங்கையைக் கற்பழிப்பார்கள். அதற்கு பழிவாங்கப் போய் ராபின் ஹூட்டாக மாறி அநியாயத்தைத் தட்டிக் கேட்பார்.

    இந்தப் படத்தில், ஹீரோ விஷால் நார்கோலப்சி வியாதியால் தூக்கத்திலிருக்கும்போது, அவர் எதிரிலேயே அவரது காதலியை துடிக்கத் துடிக்க கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். அதற்கு பழி வாங்கப் புறப்படுகிறான் நாயகன.

    இந்த ஒன்று தவிர, மற்ற அனைத்திலுமே விஷாலின் நான் சிகப்பு மனிதன் முற்றிலும் வேறுபட்ட படைப்புதான்.

    விஷாலுக்கு நார்கோலப்சி நோய். அதிக சந்தோஷம், அதிர்ச்சி, பயம் எதுவாக இருந்தாலும் உடனே தூக்கத்தில் ஆழ்ந்துவிடும் வியாதி. ஆனால் விழி மூடிக்கிடந்தாலும் சுற்றிலும் நடப்பதை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

    மருத்துவத்தால் இதனைச் சரி செய்ய வழி இல்லை என்றானதும், அந்த நோயுடனும் உற்ற நண்பர்களுடனும் வாழ்கிறார். எங்கும் அவரால் தனித்து போக முடியாத நிலை. ஒரு நாள் அப்படிப் போக முயலும் போது, நடுச்சாலையில் மயங்கிச் சரிந்து தூக்கத்திலாழ்கிறார்.

    அவரை பிணமாகக் காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் மயில்சாமி இறங்க, பரிதாபப்பட்டு பணம் தருகிறார் லட்சுமி மேனன். ஆனால் அடுத்த காட்சியிலேயே விஷாலை ஒரு மாலில் பார்த்து, அதிர்ச்சியில் லட்சுமி மயங்கி விழுகிறார். பின்னர் உண்மை தெரிந்து விஷால் மீது பரிதாபம் கொள்கிறார். அந்த பரிதாபம் மெல்ல காதலாகிறது. ஆனால் இப்படியொரு வியாதி உள்ளவரால் எப்படி செக்ஸ் சுகம் தர முடியும் என்ற கேள்வி. வாரிசு தர முடியாத விஷாலை திருமணம் செய்து வைக்க முடியாது என மறுக்கிறார் லட்சுமியின் தந்தை ஜெயப்பிரகாஷ்.

    ஆனால் தன் முடிவில் உறுதியாக இருக்கும் லட்சுமி மேனன், விஷால் எந்த சூழலில் தூங்காமலிருப்பார் என்பதைத் தெரிந்து அந்த நேரத்தில் அவருடன் உறவு கொள்கிறார். கர்ப்பிணியாகிறார். ஒரு மழை இரவில் இருவரும் காரில் செல்லும்போது இன்னொரு கார் மோதுவது போல வந்து மடக்க, அதிர்ச்சியில் தூங்கிப் போகிறார் விஷால். அப்போது ஒரு கும்பல் லட்சுமி மேனனை இழுத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். மனைவிக்கு நேரும் கொடுமையை கண்களில் நீர்வழிய கேட்க மட்டுமே முடிகிறது விஷாலால்...

    கற்பழித்தவர்கள் யார்.. காரணம் என்ன... அவர்கள் முகம்... வேறு எதாவது துப்பு... ஒன்றும் கிடைக்காத நிலையில், அவர்கள் பேசிய அந்த வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, விஷால் எப்படிப் பழிவாங்குகிறார் என்பது பிற்பாதி கதை.

    இந்தப் படத்தில் முதல் பாராட்டுக்குரியவர் ஹீரோ விஷால். வாவ்... இப்படியொரு நேர்த்தியான நடிப்பு, நம்பும்படியான உடல் மொழியை சமீபத்தில் வேறு எந்த ஹீரோவும் காட்டியதில்லை. அதிர்ச்சியில் அல்லது சந்தோஷத்தில் மயங்கி தடாலென விழும் காட்சிகளிலெல்லாம் அதிர வைக்கிறார். ஒரு காட்சியில் அவர் முகம் தரையில் டமாலென்று விழும். லட்சுமி கோமாவில் கிடக்க, அவரைக் கண்டு உருகி அழும் காட்சிகளில் நெகிழ்த்துகிறார். படம் முழுக்க ஒரு ஹீரோவாக இல்லாமல், அந்த பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டை அசத்தல்!

    லட்சுமி மேனன் இந்தப் படத்தின் சொத்து எனலாம். முதல் பாதி முழுக்க லட்சுமி மேனன் ராஜ்ஜியம்தான். அவரும் விஷாலும் நிஜ காதலர்களாக, நெருக்கமான காட்சிகளில் நிஜ கணவன் மனைவி மாதிரி தெரிகிறார்கள். A Perfect pair!

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவர் கோமாவில் படுத்துவிடும் காட்சிகளில் மனசு கலங்குகிறது.

    விஷாலின் அம்மாவாக வரும் சரண்யா... ஒட்டுமொத்த மகன்களின் ஓட்டும் இந்த அம்மாவுக்குதான் போங்க. அப்படி ஒரு அருமையான நடிப்பு.

    Naan Sigappu Manithan review

    ஜெயப்பிரகாஷ்... இந்த பாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் இத்தனை கச்சிதமாக இருந்திருக்காது.

    விஷாலுக்கு பைக் ட்ரைவராக வரும் ஜெகன், இன்னொரு நாயகியாக வரும் இனியா, அவரை கள்ளத்தனமான காதலிப்பவர்அந்த நான்கு வில்லன்கள்... எல்லோருமே கச்சிதம்.

    ஆனால் நண்பன் - கம் - வில்லனாக வரும் சுந்தர்ராமு சரியான செலக்ஷனாகத் தெரியவில்லை. அத்தனை பவர்புல் பாத்திரத்துக்கு அவர் பொருத்தமாகவும் இல்லை.

    படத்தின் குறை என்று பார்த்தால் அந்த இரண்டாம் பாதியில் வரும் இனியா பகுதி. இன்னும்கூட வேறு மாதிரி அதை உருவாக்கியிருக்கலாம்.

    வளவளவென இல்லாமல் நறுக்குத் தெறித்த மாதிரி வசனங்கள். எந்தக் காட்சியையும் ஜவ்வாக இழுக்காதது இன்னொரு ஆறுதல். இரண்டாம் பாதி முழுக்க ஹீரோயினே இல்லை. ஆனாலும் அது தெரியாத வகையில் விறுவிறுவென திரைக்கதையைக் கொண்டுபோயிருப்பது திருவின் சாமர்த்தியம்.

    பெரிதாகப் பேசப்பட்ட முத்தக் காட்சி, நீச்சல் குள நெருக்கக் காட்சிகளுக்கு கதையில் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை நிச்சயம் தியேட்டரில் போய் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜிவியின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் அவரது பழைய படங்களின் சாயல்... ஆனால் விஷால் - லட்சுமி மேனனுக்காக அந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாம்!

    ரிச்சர்டு எம் நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு ப்ளஸ். இரவு நேரக் காட்சி, உயரத்திலிருந்து விழும் வில்லனின் உருவத்தை நீரில் பிரதிபலிக்கும் காட்சி... அத்தனையிலும் முத்திரை பதித்திருக்கிறது.

    நான் சிகப்பு மனிதன்.. பார்த்து ஆதரிக்க வேண்டிய வித்தியாசமான முயற்சி!

    English summary
    Naan Sigappu Manithan is an engaging thriller and its major pluses are Vishal, Lakshmi Menon screen presence and Thiru's packaging.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X