»   »  நான் அவனில்லை-பட விமர்சனம்

நான் அவனில்லை-பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

70களில் வெளியாகி ஹிட் ஆன நான் அவனில்லை படத்தை அதே பெயரில் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரிஜினலுக்குப் பழுது வராமல் சிறப்பாகவே எடுத்துள்ளார் இயக்குநர் செல்வா.

ேக.பாலச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம்தான் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் பிளேபாய் வேடத்தில் நடித்திருந்தார். பல பெண்களுடன் சுற்றி அவர்களை கழற்றி விட்டு விடும் ரோமியோ கேரக்டரில் கிட்டத்தட்ட வாழ்ந்திருந்தார் ஜெமினி.

அதே கதையை இந்தக் காலத்துக்கேற்ப சில மாற்றங்களுடன் மறுபடியும் ரீமேக் செய்துள்ளார் பாலச்சந்தரின் சிஷ்யரான இயக்குநர் செல்வா.

ஜீவன் ஜெமினி வேடத்தில் நடித்துள்ளார். கிராமத்து அப்பாவி இளைஞர்தான் ஜீவன் (அண்ணாமலை). கோர்ட் முன்பு அவர் நிறுத்தப்படுகிறார். அவர் மீது பல பெண்களை கல்யாணம் செய்து கொண்டு, நகை, பணத்தைப் பறித்துக் ெகாண்டு ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு.

லட்சுமிதான் நீதிபதியாக வருகிறார் (ஒரிஜினல் படத்தில் இவரும் ஒரு நாயகியாக நடித்திருந்தார்). அண்ணாமலையால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் பிரியா (மாளவிகா), அம்மு குட்டி (ஜோதிர்மயி), ராதா (கீர்த்தி சாவ்லா), மோனிகா (நமீதா) ஆகியோரின் வாக்குமூலங்களை உன்னிப்பாக கவனிக்கிறார் நீதிபதி லட்சுமி.

ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு பெயர், தொழில், முகவரியைக் கூறி ஜீவன் ஏமாற்றியதாக அவர்களது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள். நீதிபதியின் மகள் அஞ்சலியும் (சினேகா) ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி (ராஜ்கபூர்) புதிய தகவலைக் கண்டுபிடிக்கிறார். அண்ணாமலையின் உண்மையான பெயர் ஜோசப் பெர்னாண்டஸ். புத்திசாலி மாணவரான ஜோசப், தவறான பழக்க வழக்கங்களினால், சீக்கிரம் பணக்காரரா ஆசைப்படும் ஜோசப்,அதற்காக கல்யாணம் என்கிற புனித பந்தத்தை குறுக்கு வழியாகப் பயன்படுத்தி பணம் பார்க்கிறார் என்று கண்டுபிடிக்கிறார் ராஜ்கபூர்.

ஆனால் இந்தப் புகார்களை எல்லாம் ஒரே வார்த்தையில் மறுக்கிறார் ஜோசப் பெர்னாண்டஸ் எனப்படும் அண்ணாமலை. அவர் கூறும் பதில் நான் அவன் இல்லை என்பதே.

அண்ணாமலை மீதான புகார்களை நிரூபிக்க கடுமையாக முயலும் காவல்துறை அதில் தோல்வியுறுகிறது. இதனால் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி அவரை விடுதலை செய்கிறார் லட்சுமி.

ஆனால் அதன் பின்னர் ஏற்படும் ஒரு டிவிஸ்ட் படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. அது என்ன என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

திருட்டுப் பயலே படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த இமேஜ் இந்தப் படத்துக்கு ஜீவனுக்கு சுத்தமாக பொருந்தி வருகிறது. ஐந்து நாயகிகளையும் படுஸ்டைலாக கவருகிறார், ஏமாற்றுகிறார்.

அட்டகாசமான டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என கலக்கலாக நடித்துள்ளார் ஜீவன். கேரக்டருக்கு செமத்தியாக ஜீவன் கொடுத்துள்ளார்.

அதே போல ஜீவனுக்கு ஜோடியாக வரும் ஐந்து நாயகிகளும் அருமையாக நடித்துள்ளனர். அனைவருக்கும் சமமான வேடங்கள் என்பதால் போட்டி பொறாமை இல்லாமல், சிறப்பாக நடித்துள்ளனர்.

குறிப்பாக நமீதாதான் இதில் கவருகிறார். படு கிளாமராக வரும் நமீதா, நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். சினேகாவுக்கும் நல்ல வேடம்.

காவல்துறை அதிகாரியாக வரும் ராஜ்கபூர் தனது அனுபவத்தைக் கொட்டி வேடத்தோடு கன கச்சிதமாக பொருந்திப் போயுள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனத்தில் இந்தக் காலத்து சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் ஜீவன், ரசிகர்களின் அப்லாஸ்களை அள்ளிக் கொள்கிறார்.

செந்தில்குமாரின் கேமரா கண்களை உறுத்தவில்லை. சுரேஷ் அர்ஸின் எடிட்டிங் படத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

பாடல்களும் தித்திப்பாகவே உள்ளன. ராதா காதல் வராதா என்ற பழம்பெரும் பாடலை அழகாக ரீமிக்ஸ் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

படத்தில் சிற் சில குறைகள் தெரிந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக பார்த்தால் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்துள்ளது நான் அவனில்லை.

பார்க்கலாம் - பழுதில்லை!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil