Iru Dhuruvam 2 Review : அடுத்தடுத்து தொடர் கொலை.. இருதுருவம் 2 வெப் சிரீஸ் எப்படி இருக்கு?
நடிகர்கள்: நந்தா, பிரசன்னா, அபிராமி
இயக்கம்: அருண் பிரகாஷ்
ஓடிடி: சோனி லைவ்
சென்னை : சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ள இரு துருவம் 2 இணையத் தொடர் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.
2019ம் ஆண்டு சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியான வெப் தொடர் இருதுருவம். இந்த தொடரை எம் குமரன் எழுதி இயக்கி இருந்தார். பலரின் பாராட்டைபெற்ற இந்த தொடரில் நந்தா, அபிராமி, செபாஸ்டின் ஆண்டனி, அப்துல் ஆகியோர் நடித்திருந்தனர்.
அடுத்தடுத்து கொலை செய்த சைகோ கொலைகாரனை கண்டுபிடித்து சுட்டுத்தள்ளுகிறார் இன்ஸ்பெஸ்டர் விக்டர். அதேநேரம் விக்டரின் மனைவி காணாமல் போக தனது மனைவியை தேடி அலைவதோடு முதல் சீசன் முடிந்தது.
இருதுருவம் 2
முதல் சீசன் வெளியாகி சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து இருதுருவம் இரண்டாவது சீசன் சோனி லிவில் இன்று வெளியானது. இதில் விக்டர் செல்லத்துரை (நந்தா) மனைவி கீதா (அபிராமி) காணாமல் போனதில் இருந்து போலீஸ் வேலைக்கு திரும்பாமல் தனது மகள் காயத்ரியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டு, அதே நேரம், மனைவியை பல இடங்களில் தேடி அலைகிறார்.
அடுத்தடுத்து கொலை
இந்த நேரத்தில், காவல்துறைக்கே சவால் விடும் வகையில் போலீஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாமல் போலீஸ் திணறும் போது, அவருக்கு ஒரு க்ளு கிடைக்கிறது. அதாவது கொலை செய்யப்பட்ட போலீசாரின் வாயில், ஒரு துண்டு சீட்டில் திருக்குறள் எழுதி திணித்து வைக்கப்படுகிறது.
திருக்குறள் தடயம்
7 போலீசார் கொலை செய்யப்பட்ட நிலையில், முன் அனுபவம் பெற்ற விக்டரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. திருக்குறள் தடயத்தை வைத்து, இந்த தொடர் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது உளவியலாளரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான லங்கேஸ்வரன் (பிரசன்னா) என்று தீர்க்கமாக நம்புகிறார் விக்டர். ஆனால், லங்கேஸ்வரனுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காமல் ஆதாரத்தை தேடித் தேடி அலைகிறார். இறுதியில் லங்கேஸ்வரன் தான் கொலையாளி என்பதை விக்டர் நிரூபித்தாரா? மனைவி கீதாவை கண்டுபிடித்தாரா? என்ற பல திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
எதார்த்தமான நடிப்பு
அறிமுக இயக்குனர் அருண் பிரகாஷ் எழுதி இயக்கி இருக்கும் இந்த இணையத் தொடரில், நடிகர் பிரசன்னா மிகவும் இயல்பாக எதார்த்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது. அவரின் கேரக்டருக்கு என்னதேவையோ அதை கச்சிதமாக செய்திருக்கிறார் பிரசன்னா.
ஜவ்வுபோல இழுக்கும் எபிசோடு
10 எபிசோடுகள் கொண்ட இருதுருவம் இரண்டாவது சீசனின் ஒவ்வொரு எபிசோடும் ஜவ்வுபோல இழுத்துக்கொண்டே சென்றது.ஆறாவது எபிசோடிலையே கொலைகாரன் லங்கேஸ்வரன் (பிரசன்னா) தான் என தெளிவாக தெரிந்த போதும், கொலைக்கான ஆதாரம் கிடைக்கவில்லை என கதாநாயகன் அலைந்ததை பார்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
வெப் சீரிஸா? டிவி சீரியலா
அதே போல, திரைக்கரையில் பல இடங்களில் ஓட்டை, இன்ஸ்பெக்டர் திலக்கிற்கும் விக்டருக்கு இடையேயான ஈகோ சண்டையை பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. இது வெப் சீரிஸா இல்லை டிவி சீரியலா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி விட்டது.
கோட்டைவிட்டுவிட்டார்
கணவன் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நந்தா, தொடர் முழுவதும் ஸ்டிட் ஆபிசராக முறைப்பாக நடந்து கொண்டு முதல் சீசனில் எடுத்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். அதே போல மற்ற நடிகர்களின் கேரக்டரும் மனதில் நிற்கவில்லை. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் இந்த தொடரைப்பார்த்து ஏமாற்றம் அடைய செய்துள்ளது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி கதையில் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். ஆனால், இயக்குநர் அதை கோட்டைவிட்டுவிட்டார்.


Click it and Unblock the Notifications











