Taj : Divided By Blood Review.. காதல், காமம், வன்மம் நிறைந்த ‘தாஜ்’.. முகலாயர்களின் இருண்ட பக்கம்!
Taj : Divided By Blood
இயக்குனர் : ரொனால்ட் ஸ்கால்பெல்லோ
நடிகர்கள் : நசீருதீன் ஷா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி, தாஹா ஷா பாதுஷா
இயக்குனர் ரொனால்ட் ஸ்கால்பெல்லோ இயக்கத்தில் உருவான 'Taj : Divided By Blood' வலைத்தொடராகும். இதில், நசீருதீன் ஷா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி, தாஹா ஷா பாதுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வெளியான இந்த தொடர் பத்து எபிசோடுகளை கொண்டதாகும்.
Taj : Divided By Blood
வரலாற்று திரைப்படங்கள் என்றே அதன்மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது தாஜ். ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும். ராஜ்யத்திற்கான போர், காதல், காமம், சூழ்ச்சி, தூரோகம் என முகலாயர்களின் இருண்ட மறுபக்கத்தை இயக்குநர் அப்பட்டமாக காட்டி உள்ளார்.
அக்பரின் ராஜ்யம் யாருக்கு
அக்பர் (நசீருதீன் ஷா) ராஜ்யத்தை தனக்கு பிறகு, தகுதியான மகனுக்கு கொடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், முதல் மகன் சலீம் (ஆஷிம் குலாட்டி) குடிபோதைக்கும், பெண் போதைக்கும் அடிமையாகி இருக்கிறார். இரண்டாவது மகன் முராத் (தாஹா ஷா) வீரராக இருந்தாலும் மூர்க்க தனமாக நடந்து கொள்கிறார். மூன்றாவது மகன் டானியால் (சுபம் குமார் மெஹ்ரா) மதத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.
விறுவிறுப்பான எபிசோடு
இந்த மூவரில் யாரிடம் ஆட்சியை கொடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் அக்பர், விரோதியாக மாறிய தனது, தம்பி ஆட்சி செய்து வரும் காபூல் மீது போர் தொடுக்க தனது மூன்று மகன்களையும் அனுப்பி, 3 பேரின் பலத்தை அறிய முயற்சி செய்கிறார். முதல் இரண்டு எபிசோடில் அக்பரின் ராணிகள், அரச ஆலோசகர்கள், மூன்று மகன்களின் பாசப்பிணைப்பு என கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கிறது.
அனார்கலி ஆசைநாயகியா?
அக்பரின் மூத்த மகனான சலீம், தனது தந்தையின் ஆசைநாயகி அனார்கலியின் மீது காதல் வயப்படுகிறான். அனார்கலியை அக்பர் 18 ஆண்டுகளாக அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் அடைந்து வைத்து இருக்கிறார். இறுதியில், அனார்கலி யார் ? அவளை அரண்மனையில் அடைத்துவைக்க காரணம் என்ன? தந்தையின் ஆசை நாயகி மீது சலீமின் காதல்? ராஜ்யத்திற்காக நடக்கும் துரோகம், வன்மம் என தாஜ் வலைத் தொடர் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது
சர்ச்சைக்குரிய கதை
காவிய காதல் வரலாற்றில் இடம் பெற்றிருந்த சலீம், அனார்கலியின் காதலை, விவகாரமான காதலாக காட்டி இருக்கிறார் இயக்குநர். சலீம் மீதான காதலுக்காக அனார்கலியை உயிரோடு வைத்து கல்லறை கட்டிய கதையைத்தான் நாம் இதுவரை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், அனார்கலி ஒரு விலை மாது என்றும், உறவு முறையில் ஒருவகையில் மகன் முறைவரும் சலீமுடன் காதல் வயப்பட்டார் என்ற சர்ச்சைக்குரிய கதையை அழுத்தமாக பதிய வைத்துள்ளார் இயக்குநர். வசீகரமான, அழகான அனார்கலியாக அதிதி ராவ் ஹைதாரி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
நசீருதீன் ஷா பேரரசர் அக்பர்
மூத்த பழம் பெரும் நடிகர் நசீருதீன் ஷா பேரரசர் அக்பர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். அவரது நடை முதல் வசன உச்சரிப்பு வரை அக்பரின் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டார். இந்த வலைத்தொடரின் மொத்த விறுவிறுப்புக்கும் நசீருதீன் ஷா சொந்தக்காரராக இருக்கிறார். தாஜ் உண்மையில் ரத்தத்தால் பிரிக்கப்பட்ட ஒரு சரித்திரக்கதையாகும்.
10 எபிசோடுகள்
10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது காணலாம், ஒவ்வொரு எபிசோடு குறைந்தது அரைமணிநேரத்திற்கு மேல் உள்ளது. இந்த வார விடுமுறை நல்ல பொழுதுபோக்குடன் கழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த Taj : Divided By Blood வலைத் தொடரை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











