twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Nedunalvadai Review: தாத்தா.. பேரன்.. பாசம்.. காதல்.. பிரிவின் வலியை பேசும் நெடுநல்வாடை! விமர்சனம்

    தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசத்தை மண் மண(ன)ம் வீச பேசுகிறது நெடுநல்வாடை.

    |

    Rating:
    4.5/5
    Star Cast: பூ ராமு, அஞ்சலி நாயர், மைம் கோபி, இளங்கோ குமாரவேல்
    Director: செல்வகண்ணன்

    Recommended Video

    Nedunalvadai Movie Audience Review | நெடுநல்வாடை படம் எப்படி இருக்கு?-Filmibeat Tamil

    சென்னை: ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பையும், பிரிவின் வலியையும், மண் மண(ன)ம் வீச பேசுகிறது நெடுநல்வாடை.

    சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் செல்லையா (பூ ராமு). வீட்டைவிட்டு ஓடிப்போன இவரது மகள் பேச்சியம்மாள் (செந்தி), ஒருகட்டத்தில் கணவனைவிட்டுப் பிரிந்து தனது இருகுழந்தைகளுடன் மீண்டும் தாய் வீட்டிற்கு வருகிறாள். மகனின் எதிர்ப்பையும் மீறி மகளுக்கும், பேரன், பேத்திக்கும் அடைக்கலம் தருகிறார் செல்லையா.

    Nedunalvadai review: A film with lots of emotional

    சதா வெறுப்பை உமிழும் மாமா கொம்பையாவை (மைம் கோபி) தோற்கடிக்க, நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, பாசத்தோடு ஊட்டி பேரன் இளங்கோவை வளர்க்கிறார் தாத்தா. அதே எண்ணத்தோடு வளரும் இளங்கோவுக்கு, தன்னைச் சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் அமுதா (அஞ்சலி நாயர்) மீது ஈர்ப்பு வருகிறது. ஆனால் தாத்தா சொல்படி தனது குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்கிறான்.

    Nedunalvadai review: A film with lots of emotional

    ஒருகட்டத்தில் வெளிநாடு செல்லும் இளங்கோ, சொந்த ஊருக்கே திரும்பி வராமல் அங்கேயே இருந்து விடுகிறார். இதனால் மனவேதனை அடையும் செல்லையா, மரணப்படுக்கையில் விழுகிறார். தாத்தாவை பார்க்க பேரன் வந்தாரா, அவரது காதல் என்ன ஆனது என்பது தான் உணர்வுகள் சங்கமிக்கும் நெடுநல்வாடை.

    தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களுள் ஒன்று, பிரிவைப் பற்றி பேசும் நெடுநல்வாடை. மிக பொருத்தமான இந்த தமிழ் சொல்லை, தன் படத்தலைப்பாக தேர்வு செய்த இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறார் செல்வகண்ணன்.

    Nedunalvadai review: A film with lots of emotional

    தன் நண்பன் ஜெயிக்க வேண்டும் என நினைத்து, நல்ல தரமான படத்தை தயாரிக்க செல்வகண்ணனுக்கு 50 தயாரிப்பாளர்கள் உதவியுள்ளனர். அவர்கள் இல்லாமல் இந்த நல்ல படைப்பு சாத்தியமாகி இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    Nedunalvadai review: A film with lots of emotional

    தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும், பாசத்தை பற்றியும், காதலை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நெடுநல்வாடை இவற்றில் இருந்து தனித்துவமாக நிற்கிறது. காரணம் இப்படம் சொல்லும், உறவின் வலியும், காதலும், பாசமும், நேசமும், தியாகமும், நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்திருத்திருக்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் நம்முடன் எளிதில் ஒட்டிக்கொள்கிறது இந்த நெடுநல்வாடை.

    நெல்லை சுற்றுவட்டார மக்களின் வாழ்வியலை, அவர்களின் உணர்வுகளை, உழைப்பை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஒரு காதலின் வழியே, தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசம், பிரிவு, வலி, தியாகம் என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை வட்டார பாஷை காது குளிர கேட்க முடிகிறது. 'பொம்பள பிள்ளைய நான் என்ன தவிட்டுக்கா வாங்குனேன்' என்பது உள்ளிட்ட பல வசனங்கள் நச் என பதிக்கின்றன.

    Nedunalvadai review: A film with lots of emotional

    புதுமுகங்கள் மட்டுமே நடித்துள்ள இதில், படம் முழுவதையும் தன் தோளில் சுமக்கும் பொறுப்பு பூ ராமுக்கு. இவரை விட்டால் வேறு யார் என சொல்லும் அளவுக்கு, மிக யதார்த்தமாக, உண்மையாக, தாத்தா செல்லையாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர். கண்டிப்பு, பாசம், கருணை, செல்லம் என பேரனிடம் செல்லையாக காட்டும் அத்தனை உணர்வும் நம் தாத்தாவை ஞாபகப்படுத்துபவை. மகள் வழி பேரனுக்காக ஒரு தாத்தா காட்டும் இத்தனை பாசமும், அன்பின் அட்சயபாத்திரம். பூ ராமுவின் திரைவாழ்க்கையில், அவரது பெயர் சொல்லும் முக்கியமான படம் நெடுநல்வாடை.

    குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்து, கடைசியில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் இளங்கோ, நம்முள் ஒருவன். இளங்கோவை போன்று, தன் காதலை தியாகம் செய்து குடும்பத்துக்காக உழைக்கும் எத்தனை இளைஞர்களை நாம் கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் இளங்கோ.

    Nedunalvadai review: A film with lots of emotional

    நெடுநல்வாடையில் நடித்து முடித்த பிறகு, சர்வதேச விமானங்களில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துவிட்டார் அஞ்சலி நாயர். இதனால் அவர் மீண்டும் நடிக்க வருவது சிரமம் தான். இருப்பினும் ஒரே படம் என்றாலும், வாழ்நாள் முழுவதும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியாக நடித்திருக்கிறார் இந்த இளம் தேவதை. இந்த அமுதாவை நம் வீட்டு தெருக்களில் தினந்தோறும் நாம் பார்த்திருப்போம். மிகையில்லாத நடிப்பில், மிகவும் பிடித்துபோக வைக்கிறார் இந்த குட்டி அஞ்சலி.

    வெறுப்பை மட்டுமே உமிழும் அண்ணனாக மைம்கோபி, கணவனை பிரிந்து வாழாவெட்டியாக தந்தை வீட்டில் தஞ்சமடைந்து வாழ்க்கை நடத்தும் செந்தி, சித்தப்பா ஐந்துகோவிலான், நாயகியின் முரட்டு அண்ணன் மருதுபாண்டி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் உறவுகளை ஞாபகப்படுத்துகிறது. படத்திலும் அப்படியே உலவுகிறார்கள்.

    Nedunalvadai review: A film with lots of emotional

    வைரமுத்து வரிகளில் ஜோஸ் பிராங்க்ளின் இசையில், மனதை உருக்குகிறது கருவா தேவா பாடல். ஏதோ ஆகி போச்சு, ஒரே ஒரு கண்பார்வை, தங்க காவடி என படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையையும் சிறப்பாக கோர்த்திருக்கிறார் ஜோஸ்.

    எந்தவித உபரி சாதனங்களுமின்றி, சூரிய ஒளியை மட்டுமே வைத்து நெல்லை சுற்றுவட்டார கிராமங்களை அள்ளிக்கொண்டு வந்து திரையில் ஒளிரச் செய்திருக்கிறார் கேமராமேன் வினோத் ரத்தினசாமி. நடிகர்கள் இத்தனை யதார்த்தமாகவும், அழகாகவும் தெரிவதற்கு வினோத்தின் கேமராவும் ஒரு முக்கிய காரணம். காசிவிஸ்வநாத்தின் எடிட்டிங், முதல் பாதியில் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி கொண்டு செல்லுகிறது. இரண்டாம் பாதியையும் அதேபோல் வெட்டி ஒட்டியிருக்கலாம்.

    சதா முறுக்கிகொண்டே திரியும் கொம்மையா கதாபாத்திரம், ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறது. மகன் இருக்கும் போது, பேரன் எப்படி கொள்ளிபோட முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸ்க்கு முன்னும் பின்னுமான காட்சிகள் படத்தை நீண்ட நல் வாடையாக இழுத்துவிடுகிறது. ரசிக்கும் படியாகவே இருந்தாலும், தங்க காவடி பாடலும், அதற்கு பிறகான சண்டை காட்சியும் சினிமாதனமாக தெரிகிறது. இப்படி படத்தில் நிறைய குறைகளும் இருக்கதான் செய்கின்றன.

    ஆனால் 90 எம்எல் போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தெளிய வைக்க, நெடுநல்வாடை போன்ற படங்கள் மிகவும் அவசியமானவை. மண்ணும், மண் மனம் சார்ந்த பதிவுகளும் தான், காலம் கடந்து நிற்கக் கூடியவை. அந்த வகையில், இந்த நெடுநல்வாடை, தவிர்க்கக் கூடாத சினிமா.

    English summary
    The tamil movie Nedunalvadai, directed by Selvakannan is a family drama with lots of emotions and nativity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X