Neelira Review: நீளிரா விமர்சனம்.. ஈழப்போருக்கு நடுவே ஒரு நீண்ட இரவு.. பரபரப்புக்கு பஞ்சமில்லா படம்!
சென்னை: 1988ஆம் ஆண்டு வடக்கு இலங்கையில் நடக்கும் "நீளிரா" திரைப்படம் ஒரே இரவின் கதையைச் சொல்கிறது. இலங்கைத் தமிழரான சோமீதரண் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படம் இது. வாசுகியின் திருமணம் தொடர்பான ஏற்பாடுகளுடன் கதை தொடங்குகிறது, இதில் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) மற்றும் இலங்கை இராணுவத்திடம் அனுமதி பெறுவது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலையில், போராளி குழுக்களும் அட்டாக் செய்ய ஆரம்பிக்க அந்த நீண்ட நெடிய இரவின் முடிவில் நடைபெற விருந்த சாமானியரின் வீட்டுத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
திரைப்படத்தின் முடிவில் ஒரு குறிப்பு தோன்றி, வாசுகி இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் நீண்ட பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது. இந்த வரிகள் ஒரு கணநேரத்திற்கு படத்திற்கு உயிர் கொடுத்தது போல் தோன்றுகிறது, பின்னர் படம் முடிவடைகிறது. அமைதி காக்கும் படை இந்தப் பகுதிக்கு முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதா என பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது.

போரின் மத்தியிலும் மனிதநேயத்தையும், மகிழ்ச்சியையும் தேடும் ஒரு சிறந்த கருப்பொருளை இப்படம் கொண்டுள்ளது. "சிரமமான காலங்களிலும்கூட, நாம் சில வெளிச்சங்களை எதிர்பார்ப்பதற்கான உரிமை உண்டு" என்ற ஹன்னா அரெண்ட்டின் கூற்றை இது நினைவூட்டுகிறது. இது வெறும் நம்பிக்கையல்ல, மாறாக ஓர் உரிமை. நாள்தோறும் நம் வாழ்க்கைக்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களை போர் எப்படி பாதிக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.
நீளிரா கதை: திருமணத்திற்கு முந்தைய இரவில், எதிர்பாராத விதமாக, நவீன் சந்திரா தலைமையில் 8 IPKF (இந்திய அமைதி காக்கும் படை) வீரர்கள் வாசுகியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். இடம் மாறி வந்ததே இதற்குக் காரணம். விடுதலைப் புலிகள் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், அவர்கள் அந்த வீட்டிலேயே இரவைக் கழிக்கின்றனர். வீட்டு உறுப்பினர்கள் பணயக்கைதிகளாக்கப்படுகிறார்கள்.
இந்திய அமைதி காக்கும் படை அந்த திருமண வீட்டில் மறைந்திருப்பது குறித்து விடுதலைப் புலிகள் அறிந்து கொண்டதும், நிலைமை மோசமடைகிறது. வீட்டிலுள்ளவர்கள் மோதலின் நடுவே மாட்டிக்கொள்கிறார்கள். "நீளிரா" என்பது 'போர்ச்சூழலில் வளர்ந்த ஒரு குழந்தையின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைகதை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை படத்தின் இயக்குநர் சோமீதரன் தான் என்பது படத்தை பார்த்தாலே புரிந்து விடும்.
யாழ்ப்பாணத்தில் வளர்ந்த இயக்குநர், கொழும்பு சென்று பிபிசி பத்திரிகையாளராகவும், ஆர்.ஜே. ஆகவும் பணியாற்றினார். பின்னர் சென்னை வந்து பாலு மகேந்திராவிடம் பயிற்சி பெற்றார். யாழ்ப்பாண மத்திய நூலகம் எரிக்கப்பட்டு 97,000 அரிய புத்தகங்கள் சாம்பலானதைப் பற்றிய "Burning Memories" (2008) போன்ற ஆவணப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
படம் எப்படி இருக்கு?: "நீளிரா" திரைப்படம் முரண்பாடுகளை அதிகம் பேசுவதில்லை. மாறாக, வரலாறு சுற்றிலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், அன்றாட வாழ்வின் சாதாரணமாக தருணங்களுக்குள் நுழைய முயற்சிக்கிறது. உதாரணமாக, இந்திய அமைதி காக்கும் படையினர் ஒரு குழந்தையையும் முதியவரையும் நிறுத்தும் காட்சி, "All That's Left of You" (2024) படத்தில் இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீனிய தந்தை மற்றும் மகனை நிறுத்தும் காட்சிக்கு இணையான ஒரு அம்சமாக உள்ளது.
இப்படம் அரசியலால் வெறுமையாக்கப்பட்ட ஒரு உலகத்தை கலாச்சார நுணுக்கங்களால் நிரப்ப முடியும் என்று நம்பி, விவரங்களில் கவனம் செலுத்த விரும்புகிறது. புட்டு அவிப்பது, இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்த சப்பாத்திகள், நாய்களின் சத்தம் ராணுவத்தினர் இருப்புக்கான அச்சுறுத்தும் எச்சரிக்கையாக மாறுவது, கேப்டன் விஜயகாந்த் மீதான அன்பு, இராணுவ வீரர்கள் கதவருகே நிற்கும் போது பெண்கள் தங்கள் உடைகள் மீது கூடுதல் பாதுகாப்புக்காக சட்டைகளை அணிவது போன்ற பல நுணுக்கங்கள் காட்டப்பட்டுள்ளன.
பிளஸ்: இலங்கை யுத்தத்தின் தீவிரமான விளைவுகளை ஏன் இந்த திரைப்படம் மறைமுகமாக மட்டுமே குறிப்பிடுகிறது, நேரடியாகக் காட்டவோ அல்லது சொல்லவோ மறுக்கிறது? என்கிற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால், போர் சூழலில் ஆயுதங்களின் சத்தங்கள் மற்றும் சடலங்களின் குவியல்களை காட்டும் படங்களுக்கு நடுவே அந்த பதற்றமான சூழலில் சாதாரண குடும்பம் அதாவது சாமானிய குடிமகன்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லத் துணிந்தது தான் இயக்குநரின் துணிச்சலையும் வித்தியாசமான கோணத்தையும் காட்டுகிறது. போராளியாக நடித்துள்ள சனந்த் ரெட்டி மற்றும் இந்திய ராணுவ வீரராக நடித்துள்ள நவீன் சந்திரா மற்றும் வாசுகியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
மைனஸ்: ஈழப்போரை பிரம்மாண்டமாக காட்டப்போகிறதா இந்த படம் என நினைத்து பார்க்கச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், போருக்கு அருகே உங்களை உட்கார வைத்துள்ள உணர்வை இந்த படம் கண்டிப்பாக கொடுக்கும். எண்டர்டெயின்மெண்ட் விரும்பிகளுக்கும், ஜாலியாக படங்களை பார்க்கும் ஜென்ஸி கிட்ஸ்களையும் கவருமா என்றால் அது சந்தேகம் தான். கிளைமேக்ஸில் வாசுகியின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை தியேட்டருக்குச் சென்று பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அந்த கிளைமேக்ஸ் உங்களை ஏமாற்றாது.


Click it and Unblock the Notifications











