Nirangal Moondru Review: அதர்வாவுக்கு இந்தமுறையும் வாஸ்து சரியில்லை.. நிறங்கள் மூன்று விமர்சனம்!
ரேட்டிங்:
நடிகர்கள்: அதர்வா, சரத்குமார், ரகுமான்
இசை: ஜேக்ஸ் பிஜோய்
இயக்கம்: கார்த்திக் நரேன்
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்த நிலையில், அதன் பின்னர் அவர் இயக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான முயற்சிகளாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதத்தில் இல்லை என்று தான் சொல்லத்தூண்டுகிறது.
அருண் விஜய் நடித்த மாஃபியா மற்றும் தனுஷ் நடித்த மாறன் படங்களுக்குப் பிறகு அதர்வா, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் மற்றும் அம்மு அபிராமியை வைத்து கார்த்திக் நரேன் இயக்கிய நிறங்கள் மூன்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

அதர்வா ரொம்ப நாள் கழித்து கம்பேக் கொடுப்பாரோ என்கிற நம்பிக்கையில் படத்தைச் சென்று பார்த்த பலருக்கும் இந்த முறையும் அதர்வாவுக்கு ஒரு சரியான படம் அமையவில்லையே என்கிற ஃபீலிங் தான் வருகிறது. படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
நிறங்கள் மூன்று கதை: இயக்குநராக வேண்டும் என ஆசைப்படும் நபராக அதர்வா வருகிறார். அவருடைய கதை காணாமல் போகிறது. அதே நாளில் பள்ளி மாணவியான அம்மு அபிராமி கடத்தப்படுகிறார். அதர்வா எடுக்கும் குறும்படத்தில் இளம் பெண்ணை கடத்தும் காட்சி எடுக்கப்படும் நிலையில், அதை தவறாக புரிந்துக் கொள்ளும் துஷ்யந்த் தனது கிரஷ்ஷான அம்மு அபிராமியை தேட முயல்கிறார். ரகுமான் மற்றும் சரத்குமாரின் போர்ஷன் என பல கிளைக் கதைகள் ஒன்றோடு ஒன்று ஓவர்லேப் ஆகி கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த நிறங்கள் மூன்று படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: படம் முழுவதுமே ஸ்மோக்கிங் இஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த், போதைப் பொருள் பயன்படுத்தக் கூடாது என்கிற அறிவிப்பு வந்துக் கொண்டே இருப்பது போல அந்தளவுக்கு கஞ்சா போதைக்கு அடிமையானவராக சுற்றி வருகிறார் இயக்குநராக ஆசைப்படும் அதர்வா. அவரது கதாபாத்திரத்தை பார்த்தாலே இவர் சாதிக்க வேண்டும், மேலே வரவேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு எழவில்லை. அதர்வா நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் படத்துடன் பெரிதாக ஒட்டவில்லை.
துருவங்கள் பதினாறு படத்தில் நடந்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த ரகுமானை களமிறக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். அவருடைய போர்ஷனும் பெரிதாக கைகொடுக்கவில்லை. படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்வதே சரத்குமாரின் கேரக்டர் தான். தனது எக்ஸ்பீரியன்ஸை திரையில் அசால்ட்டாக கடத்தி கைதட்டல்களை அள்ளுகிறார். சில ட்விஸ்ட்டான காட்சிகள், புதிய முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளன.
பிளஸ்: சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சாட்டர்டே படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர். பின்னணி இசை மற்றும் பாடல்கள் தரமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி பட்ஜெட் படமாக இருந்தாலும் புரொடக்ஷன் குவாலிட்டியை நன்றாகவே கொடுத்திருக்கிறார். சரத்குமார், ரகுமான் மற்றும் அதர்வா தங்களின் நடிப்பால் தியேட்டரில் ரசிகர்களை உட்கார வைக்கின்றனர்.
மைனஸ்: ஆனால், வழக்கம் போல திரைக்கதையில் கார்த்திக் நரேன் பல சொதப்பல்களை செய்து சூப்பராக வரவேண்டிய படத்தை தனது மேக்கிங் மூலம் சுமாரான படமாகவே கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் கனெக்ட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் அதற்கான காரணத்தை சொல்லும் போது வாவ் சொல்ல தோன்றாமல் இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நல்ல முயற்சி தான். ஆனால், அதர்வாவுக்கு இதைவிட இன்னும் பெட்டரான படம் கிடைக்க வேண்டும் என படம் பார்க்கும் போதே ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











