Now You See Me 3 Review: இப்படியொரு மேஜிக் படத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க.. ’நவ் யூ சீ மி 3’ விமர்சனம்!
சென்னை: மேஜிக் படங்களை விரும்பி யார் தான் பார்க்கமாட்டார்கள். இந்தியில் வெளியான தூம் 3 படத்தில் அமீர்கான் செய்யும் மேஜிக் சேட்டைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. மெர்சல் படத்தில் தளபதி விஜய் மேஜிக் செய்யும் காட்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்த்தனர்.
மேஜிக் படங்கள் என்று வந்துவிட்டாலே ஹாலிவுட் படங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அனிமேஷன் படங்களுக்கே பெரிய பொருட்செலவில் எடுத்து உலகையே பார்க்க வைத்து விடும் அவர்கள் Now You See Me சீரிஸ் படங்கள் மூலம் ஏகப்பட்ட மேஜிக் விரும்பிகளை மெர்சலாக்கி வருகின்றனர்.

ரூபன் ஃப்ளெயிஸர் (Ruben Fleischer) இயக்கத்தில், ஜெஸ்ஸி ஹெய்சன்பெர்க், ஹூடி ஹாரல்ஸன், டேவ் ஃபிராங்கோ, இஸ்லா ஃபிஷர், ரோசமுண்ட் மேரி எலன் பைக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் தியேட்டரில் வெளியான Now You See Me: Now You Don't திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் நம்மூர் ரசிகர்கள் பார்த்து கொண்டாடும் விதமாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
நவ் யூ சீ மி 3 கதை: Now You See Me: Now You Don't என வைக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்ப படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ரூபன். முந்தைய 2 பாகங்களை பார்த்தவர்களுக்கு தி ஐ அமைப்பு என்றால் என்ன என்பதும் ஹார்ஸ்மேன் என்றால் யார் என்றும் தெரிந்திருக்கும். இதுவரை இந்த சீரிஸ் படங்களை பார்க்காதவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், உலகில் மோசடி செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெரும் பணக்காரர்களிடம் இருந்து மேஜிக் மூலமாக ஹார்ஸ்மேன்களை வைத்து தி ஐ அமைப்பு ராபின்ஹுட் ஸ்டைலில் கொள்ளையடித்து மக்களுக்கு கொடுக்கும் கதை தான். 3ம் பாகத்திலும் ஒரு வைரத்தை வைத்து அப்படியொரு கதையையே மேஜிக் காட்சிகளை அதிகம் தூவி கடைசி வரை கண்கட்டி வித்தையை காட்டியுள்ளனர்.

படம் எப்படி இருக்கு?: ஜேம்ஸ் பாண்ட் படமான Die Another Day படத்தில் வில்லியாக நடித்த ரோசமுண்ட் மேரி எலன் பைக் தான் இந்த படத்திலும் வில்லி. டாம் க்ரூஸ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். அரிய வகை வைரத்தை கண்காட்சிக்காக அவர் கொண்டு வர அங்கே இருந்து அந்த வைரத்தைக் கொள்ளையடிக்க தங்களை போலவே இமிடேட் செய்து ஏமாற்றும் இளம் மேஜிக் டீமை கொண்டு ஜெஸ்ஸி ஹெய்சன்பெர்க் ஒரு பிளான் போடுகிறார்.
வைரத்தை இளைஞர்கள் துணையுடன் பக்காவாக திருட அதன் பின்னர், வில்லியின் வலையில் ஒருவர் பின் ஒருவராக சிக்க பழைய ஹார்ஸ்மேன் டீமில் உள்ள சூப்பர் மேஜிக்மேன்கள் எல்லாம் மாட்டிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அனைத்து மேஜிக்மேன்களையும் ஒரு கண்ணாடி பெட்டியில் அடைத்து மண்ணைப் போட்டு மூடி சாகடிக்க வில்லி பக்காவாக பிளான் செய்துவிட்டு சென்றாலே எப்படியாவது மேஜிக் மேன்கள் அந்த இடத்தை விட்டு தப்பித்து விடுவார்கள் என எதிர்பார்த்ததை போலவே நடக்கிறது. ஆனால், அதன் பின்னர் கிளைமேக்ஸில் தான் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் நடப்பது அட போட வைக்கிறது.
இடைவேளை காட்சிக்கு முன்பாக அந்த மேஜிக் வீட்டிற்குள் நடக்கும் மாயாஜால காட்சி கண்டிப்பாகவே இந்த படத்தை பார்க்க வைத்துவிடும். கிளைமேக்ஸில் ரிவீல் ஆகும் அந்த நபரும் ஒரு சர்ப்ரைஸ் ஈஸ்டர் எக் என்றே சொல்லலாம். சிலருக்கு இந்த கிளைமேக்ஸ் மீது அதிருப்தி கூட ஏற்படலாம். ஆனால், படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஒரு கதையை உருவாக்கி அதை கடைசி வரை போர் அடிக்காமல் கொடுத்த விதத்தில் படம் நின்னு பேசுகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். ஆபாச காட்சிகள் இல்லாததால் குழந்தைகளுடன் தாராளமாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications










