Obsession Review: அப்செஷன் விமர்சனம்.. 1000 கோடி வசூலித்த பேய் படம்.. உண்மையாவே வொர்த்தா? இல்லையா?
சென்னை: 26 வயதான யூடியூபர் வெறும் 7 கோடி ரூபாயில் எடுத்த ஹாரர் படமான 'Obsession' உலக ரசிகர்களையே பேய் பிடித்து ஆட்டுவது போல ஆட்டிப்படைத்து 2 வாரங்களில் சுமார் 1000 கோடி வசூலை நெருங்கி விட்டது. 1 மில்லியன் டாலருக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமான அப்செஷன் 100 மில்லியன் டாலர் ரூபாயை ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்துள்ளது.
வெள்ளிக்கிழமையான நேற்று இந்தியாவில் இந்த படம் வெளியான நிலையில், அப்படி என்ன இந்த படத்தில் உள்ளது நாம பார்க்காத காஞ்சனாவா? சந்திரமுகியா? என போய் பார்த்தால் அந்த படத்தின் நாயகி நிக்கி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இன்டி நவரட்டாவின் (Inde Navarette) நடிப்பு தான் உலகளவில் ரசிகர்களை இந்த படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது.

வரம் என்றாலே வரமல்ல அது ஒரு சாபம் தான் என்கிற மையப்புள்ளி கதையை வைத்து இப்படியொரு ஹாரர் படத்தை கர்ரி பார்கர் உருவாக்கியுள்ளார். படத்தில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
அப்செஷன் கதை: Obsession என்றால் பேய் பிடித்து ஆட்டுவது என்று பொருள். கர்ரி பார்க்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பியர் எனும் ஹீரோ கதாபாத்திரத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் நடித்துள்ளார். நிக்கியாக இன்டி நவரட்டா மிரட்டியுள்ளார். தன்னுடன் பணியாற்றும் நெருங்கிய தோழி மீது பியருக்கு காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவித்து வருகிறார். சில முறை முயற்சித்தும் அவரால் சொல்ல முடியவில்லை. மாந்திரீக பொருட்கள் விற்பனை செய்யும் இடத்துக்கு செல்லும் பியர் அங்கே 'ஒன் விஷ் வில்லோ' (One Wish Willow) எனும் ஸ்டிக் போன்ற பொருளை வாங்குகிறார்.
ஜிகினா கவர் சுற்றிய பெரிய புல்லட் பட்டாஸ் போல இருக்கும் அந்த பொருளை உடைத்து என்ன வரம் கேட்டாலும் கொடுக்குமாம். ஆனால், ஒரே ஒரு முறை தான் வரம் கேட்க வேண்டும். நிக்கியை ரொம்பவே காதலித்து வந்த பியர் "எப்போதுமே நிக்கி என்னை மட்டுமே காதலிக்க வேண்டும்" என இந்த பொருளின் மீது பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும், ஒருவேளை நடந்து விடாதா என்கிற நப்பாசையால் கேட்க, அந்த வரம் அவருக்கு எப்படி சாபமாக மாறியது என்பது தான் இந்த அப்செஷன் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ரொம்பவே கூச்ச சுபாவம் மற்றும் உள்ளுக்குள் அதீத பயம் கொண்ட நபராக பியர் கதாபாத்திரத்தில் கடைசியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகக் கூட பயப்படும் கதாபாத்திரத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் யதார்த்தமாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் செம க்யூட்டான பெண்ணாக வரும் நிக்கி, பியர் அந்த ஒன் விஷ் வில்லோவை உடைத்து வரம் கேட்ட பிறகு உடனடியாக அவனை ரொம்பவே விரும்பும் காதலியாக மாறும் இடத்திலிருந்து கான்ஜூரிங் பேய்க்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மாறிவிடுகிறார்.
பியர் வீட்டுக்கே வரும் நிக்கி, பியரை விட்டு ஒரு கணம் கூட பிரிய மாட்டேன் என்பது போல நடந்துக் கொள்வதை பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷ் தான் நிக்கியை இப்படி மாற்றிவிட்டதா? என்பதை அறிந்து அப்செட் ஆகிறார் பியர். எழுந்து பாத்ரூம் கூட போக விடாமல் எங்கே டார்லிங் போற என தூக்கத்தில் இருந்து சட்டென எழுந்து கேட்பது முதல் என்னை விட்டு எங்கடா போற என சந்திரமுகியாக மாறும் இடமெல்லாம் தியேட்டரில் ஒரு சிரிப்பு சத்தம் தான்.
பேய் படங்களுக்கே உரித்தான ஜம்ப் ஸ்கேர் திகிலூட்டும் காட்சியும் ஒன்று இந்த படத்தில் தரமான சம்பவமாக நொடிப்பொழுதில் நடந்து பார்வையாளர்களை பயமுறுத்துகிறது. ஆனால், அதே சமயம் ரிப்பீட்டான விஷயங்கள் மற்றும் ஒன் விஷ் வில்லோ போன்ற அமானுஷ்ய பொருளை நம்ப வைக்கக் கூடிய அளவுக்கான காட்சி அமைப்புகள் இல்லாதது என்னன்ன சொல்றான் பாருங்க, கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க என்றே சொல்ல வைக்கிறது.
பிளஸ்: கர்ரி பார்கர் குறைந்த பட்ஜெட்டில் ஒரு பாக்ஸ் ஆபீஸ் பிளாஸ்ட் ஹாரர் படத்தை கொடுக்கிறேன் பாருங்க என இந்த கதையின் மீது வைத்த நம்பிக்கையும் அதற்கு கடைசி வரை நேர்த்தியாக உழைத்ததும் தான் படம் பாக்ஸ் ஆபீஸில் பந்தயம் அடிக்க முக்கிய காரணம். ஹீரோவை விட ஹீரோயின் இன்டி நவரெட்டாவின் கொஞ்சல், கோபம், பயமுறுத்தும் ஆக்ஷன், ஹீரோ ஏதாவது பேய் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டால், தன்னைத் தானே தாக்கிக் கொண்டு ரத்தக் காயங்களுடன் இருப்பது, ஹீரோவின் நண்பர்கள் தலையிட்டால் போட்டு தள்ளுவது என மிரட்டி விடும் காட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக உள்ளது.
ராக் பர்வலின் பின்னணி இசை ரசிகர்களை ஒரு வித பதட்டம் மற்றும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் கிளைமேக்ஸ் வரை வைத்திருப்பது சிறப்பான விஷயம். டெய்லர் கிளெமன்ஸ் பெரிய சிஜி எல்லாம் பயன்படுத்தாமல் வெறும் லைட் இல்லாத இருட்டான இடத்தில் நின்றுக் கொண்டு ஹீரோயினை பேச விட்டே ஹீரோவையும் ரசிகர்களையும் சேர்த்தே பயமுறுத்தும் இடத்தில் எல்லாம் வேறலெவலில் ஸ்கோர் செய்திருக்கிறார். எடிட்டரும் இயக்குநர் கர்ரி பார்கர் தான் என்பதால் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே தேவையான காட்சிகளை மட்டும் வைத்து கிரிஸ்ப்பாக கட் செய்துள்ளார். சில இடங்களில் ஜம்ப் கட்ஸ் தெரிகிறது.
மைனஸ்: பெரிய திரையில் படத்தை பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்ற நிலையில், படம் முழுவதும் பட்ஜெட் காரணமாக குட்டி பாக்ஸ் வடிவத்தில் உருவாக்கியுள்ளார்களா? என்கிற உணர்வு கடுப்பை கிளப்பியது. 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1000 கோடி வசூல் வந்துள்ளதே அந்த அளவுக்கு பயங்கரமான பேய் படமா என்றால் அப்படியெல்லாம் இல்லை. இதை விட தமிழில் அந்நியன், சந்திரமுகி, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களை பார்த்து விட்ட நிலையில், அந்த விஷயத்தில் சற்று ஏமாற்றம் தான்.
ஈவில் டெட் படங்களின் கான்செப்ட்டும் கிட்டத்தட்ட இந்த படத்தை போலத்தான் இருக்கும். பேய் பிடித்த பெண்கள் சட்டென பேய் பிடிக்காதவர்கள் போல பேசி அதன் பின்னர் சுயரூபத்தை காட்டியிருப்பார்கள். பெரிதாக ஆபாச காட்சிகள் இல்லை என்றாலும், இன்டர்வெல் விடுவதற்கு முன்பாக ஹீரோயின் டிரெஸ்ஸிலேயே இன்டர்வெல் போவது எல்லாம் அருவருப்பாகவே இருந்தது. குழந்தைகளுடன் படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications