twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா? ஓடாதா? விமர்சனம்!

    குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஓடு ராஜா ஓடு.

    |

    Rating:
    3.0/5
    Star Cast: நாசர், குரு சோமசுந்தரம், சாருஹாசன்
    Director: நிஷாந்த் ரவீந்திரன்
    சென்னை: கணவன் - மனணவிக்கு இடையேயான குடும்பப் பிரச்சினையை, செட்டாப் பாக்ஸ் துணையோடு டார்க் ஹியூமர் பாணியில் சொல்கிறது ஓடு ராஜா ஓடு.

    வீட்டோடு கணவர் உத்தியோகம் பார்க்கும் வருங்கால எழுத்தாளர் மனோகரை (குரு சோமசுந்தரம்), அவரது மனைவி மீரா (லட்சுமி பிரியா) விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக செட்டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறார். தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் மனோகர், நண்பனின் பாஸ் கஜபதியிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார். இருவரையும் நம்பி லம்பாக ஒரு தொகையை கொடுத்து, போதை மாமி (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க) மங்களத்திடம் சரக்கு வாங்கி வர அனுப்புகிறார்கள் கஜபதியும் அவரது சுப்பீரியர் பாஸ் வீரபத்ரனும். பணத்தை அவர்கள் தொலைக்க நேரிட, இருவரும் தப்பித்தால் போதும் என ஓட ஆரம்பிக்கிறார்கள்.

    Odu Raja Odu review

    இதற்கிடையே பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையே குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), மனோகரிடம் இருந்து பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இப்படி தனித்தனியே நடக்கும் சம்பவங்கள் ஓரு கட்டகத்தில் ஓரே இடத்திற்கு வந்து நிற்கிறது. இதுதான் கதை.

    ஒரு சின்ன துண்டு பேப்பரில் விரிவாக எழுதிவிடலாம் இப்படத்தின் கதையை. ஆனால் படத்தில் வரும் கதாபத்திரங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு நோட்டு பத்தாது. அவ்வளவு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, சீட்டாகை, அன்புள்ள அரிப்பு, போதை மாமி, துணை மாப்பிள்ளை, ஒப்புக்கு சப்பான்ஸ் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி, தனித்தனி ப்ளாஷ்பேக் காட்சிகள். கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் முடியும் போது இடைவேளை வந்துவிடுகிறது.

    Odu Raja Odu review

    ஆனால் இதற்காக இயக்குனர்களை ஒட்டுமொத்தமாக குறைசொல்லிவிட முடியாது. டார்க் ஹியூமர் கதை என்பதால் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும்.

    படத்தின் இரண்டாம் பாதியில் இருந்து தொடங்கும் நகைச்சுவையும், கதையும் படம் முடியும் வரை அலுப்பில்லாமல் கொண்டு செல்கிறது. மணைவியின் ஆசைக்காக செட்டாப் பாக்ஸ் வாங்க வெளியே சென்று, ஏடாகூடமாக மாட்டிக்கொள்ளும் குரு சோமசுந்தரம் தனக்கென உரித்தான எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். 'மீராவிடம் சொன்னா புரிஞ்சிக்குவா' என கெத்துகாட்டி பள்ப்பு வாங்குவது, வில்லனை அடிக்க திட்டமிட்டு மாட்டிக்கொள்வது என ஒரு பிளாக் காமெடி படத்துக்கு தேவையானதை தந்திருக்கிறார்.

    குரு சோமசுந்தரம் மட்டுமல்ல அவரது மணைவியாக வரும் லட்சுமி பிரியா, நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை கச்சிதமாக தந்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த கால பைரவி லயன் கேரக்டர் செம சர்ப்ரைஸ். கிஸ்சுக்காக தாடையை உடைத்துக்கொண்டதாக லட்சுமி பிரியா செய்யும் டெமோ ஆக்ஷன் ரசிக்க வைக்கிறது. அதேபோல நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னுதான் என ஆகிஷா சொல்லும் அந்த இடம், தியேட்டரே சிரிக்கிறது.

    ஆனால் படத்தில் பல இடங்களில் நகைச்சுவை காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது துரித்திக்கொண்டு தெரிகிறது. அதுவும் பெண்களை செக்ஸ் பொருளாக காட்டியிருப்பது அவசியமற்றது. எப்போது பார்த்தாலும் கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ் உணர்வோடு அழையும் பக்கத்து வீட்டுக்காரன், கணவனையும் அவனது நண்பனையும் ஒன்றாக பாக்கும் ஆகிஷா, பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என பல தேவையற்ற விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதுவும் அந்த பவர் ஸ்டார் சேசிங் சீனெல்லாம் ஐயோயோயோ என புலம்ப வைக்குது.

    அறுந்தவாலாக வரும் பேபி ஹரினியும், ரோட்சைட் ரோமியோ மாஸ்டர் ராகுலும் கவனம் ஈர்க்கிறார்கள். அதுபோல வில்லன் ரவிந்திர விஜய்யும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    Odu Raja Odu review

    தோஷ் நந்தா இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அதேபோல பின்னணி இசையும் பிளாக் காமெடி உணர்வை தர மறுக்கிறது. திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த். இத்தனை கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்க்க படாதபாடு பட்டிருக்கிறார்.

    காலையில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம். காட்சிகளை உன்னிப்பாக கவனித்தால், படம் நிச்சயம் புரியம். இருப்பினும், சூதுகவ்வும், மூடர்கூடம் போல இல்லாமல் டார்க் ஹியூமரை கையாள்வதில் சிரமம் தெரிகிறது. ஒரு சாதாரண பார்வையாளனுக்கு இப்படம் கொஞ்சம் தூரம் தான் என்றாலும், டார்க் காமெடி ரசிகர்களுக்காக ஓடும் இந்த 'ஓடு ராஜா ஓடு'.

    English summary
    The tamil movie Odu Raja Odu is a black comedy film, which has Guru Somasundaram, Nassar, Lakshmi priya and so many in the lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X