ஒரிஜினலை ஓரங்கட்டியதா ஓ மணப்பெண்ணே.. ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கரின் புதுப்படம் எப்படி?
சென்னை: டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றே பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் காமிக்ஸ்தான் அபிஷேக், பிளாக் ஷிப் அன்பு மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகி உள்ள படம் தான் ஓ மணப்பெண்ணே
ஒரிஜினல் படமான பெல்லிசூப்புலு படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக்கான இந்த படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
விஜய தேவரகொண்டா படம்
ஒரு கோடி ரூபாயில் தெலுங்கில் உருவாகி 30 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய பெலிசூப்புலு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த ஓ மணப்பெண்ணே. விஜய தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு தருண் பாஸ்கர் இயக்கிய படத்தின் தமிழ் ரீமேக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தியேட்டரில் வெளியாகி இருந்தால்
டாக்டர் படம் மக்களை எப்படி மகிழ்வித்து வருகிறதோ அதே அளவுக்கு காமெடி, ரொமான்ஸ், கதை, நடிப்பு என அனைத்தும் அடங்கிய பக்கா பேக்கேஜாக உள்ள இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகாமல் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன கதை
அட்ரஸ் மாறி ஸ்ருதியை (பிரியா பவானி சங்கர்) பெண் பார்க்க வரும் கார்த்தி (ஹரிஷ் கல்யாண்) டோர் பிரச்சனை காரணமாக அவருடன் லாக் ஆக இருவரும் தங்கள் பழைய காதல் கதைகளையும் லட்சியங்களையும் மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்கின்றனர். அதன் பின்னர் விஷயம் தெரிய வர விலகும் இருவர்களும் பிசினஸ் பார்ட்னர்களாக இணைந்து கடைசியில் காதலில் எப்படி விழுகிறார்கள் என்பது தான் கதை.
ஆபாரமான நடிப்பு
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் மற்றும் பிரியா பவானி சங்கரின் எக்ஸ் பாய் பிரண்ட் ஆக நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். எங்கேயும் ஐ லவ் யூ என கடைசி வரை சொல்லாமல் ஒரு லவ் படத்தை எடுத்து அசத்தி உள்ளனர்.
விடிவி 2021
சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் ஓ மணப்பெண்ணே பாடல் வரிகளையே தலைப்பாக கொண்டு உருவான இந்த படமும் பார்க்க அப்படியே விடிவி 2021 ஃபீலை கொடுப்பதாக பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விடிவியில் சிம்புவின் பெயரும் கார்த்தி என்பதால் அந்த கனெக்ட் நல்லாவே பொருந்துகிறது.
ஹேண்ட்ஸம் ஹரிஷ்
பியார் பிரேமா காதல், தாராள பிரபு, கசட தபற என வெரைட்டி நடிப்பை காட்டி வரும் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் செஃப் கார்த்தி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃப்ரேம் வரைக்கும் பிரியா பவானி சங்கரை விட இவர் ரொம்ப அழகா இருக்கார் என்றே ஏகப்பட்ட ரசிகைகள் ஹரிஷை சைட் அடித்து வருகின்றனர்.
இப்படியொரு கேர்ள் ஃபிரண்ட்
ஓ மணப்பெண்ணே படம் பார்த்துட்டு இப்படியொரு கேர்ள் ஃபிரண்ட் நமக்கு இருந்தா எப்படி இருக்கும்னு தான யோசிக்கிற என ஏகப்பட்ட பசங்க பிரியா பவானி சங்கரின் ஸ்ருதி கேரக்டரை பார்த்து சொக்கிப் போயுள்ளனர். கவர்ச்சி காட்டி, குத்தாட்டம் போட்டு, லூசு ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என்கிற ஸ்டீரியோ டைப்பை எல்லாம் அழகாக உடைத்து அசத்தி வருகிறார் பிரியா பவானி சங்கர்.
10க்கு 10
விஜய தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து கொன்றது போல இந்த படத்தையும் சொதப்பி விடுவார்கள் என நினைத்த ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு உண்மையான ஒரு ரீமேக் படமாக ஓ மணப்பெண்ணே வெளியாகி இருப்பதாகவும் இந்த படத்துக்கு 10க்கு 10 மதிப்பெண்ணே கொடுக்கலாம் என ரசிகர்கர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











