One Piece Web Series Review: முட்டாபீஸா.. மாஸ்டர்பீஸா.. ”ஒன் பீஸ்” வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!
இசை: கோஹெய் டனாகா, ஷிரோ ஹமாகுச்சி
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் டப்பிங் உடன் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஒன் பீஸ் வெப்சீரிஸ் தான் தற்போது உலகளவில் டாப் டிரெண்டிங்காக அமைந்துள்ளது.
ஜப்பானில் வெளியான பிரபலமான சூப்பர் ஹிட் அனிமேஷன் தொடரான ஒன்பீஸ் தற்போது வெப்சீரிஸாக ஆட்களை வைத்து அட்டகாசமாக உருவாக்கி ஒன்பீஸ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

பைரேட்ஸ் படங்கள் என்றதுமே பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படமும் கேப்டன் ஜேக்ஸ்பேரோ தான் நினைவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு டீப்பாக போகாமல் ஜாலியாக ஆனால், ஏகப்பட்ட சூப்பர் வில்லன்களையும் சூப்பர் ஹீரோக்களையும் அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளனர். ஜாலியாக ஒரு பைரேட்ஸ் ஃபேண்டஸி வெப்சீரிஸை அதுவும் தமிழில் பார்க்க வேண்டும் என்றால் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள ஒன்பீஸ் வெப்சீரிஸை தாராளமாக பார்க்கலாம். இதில், உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே காண்போம்.

ஒன்பீஸ் கதை: ஆரம்பத்திலேயே ஒரு பெரிய கடற்கொள்ளையனுக்கு மரண தண்டனை வழங்கும் பிரம்மாண்ட காட்சியில் தான் ஒன்பீஸ் கதை தொடங்குகிறது. அந்த பைரேட் இறப்பதற்கு முன்பாக நான் கொள்ளையடித்த புதையல்கள் கடலில் இருக்கின்றன. ஒன்பீஸ் என்கிற ஒன்று உள்ளது என சொல்லிவிட்டு சாக, பல பேர் கடற் கொள்ளையர்களாக மாறுகின்றனர்.
சிறு வயதிலேயே கடற்கொள்ளையர்களுடன் வாழ்ந்து வரும் மங்கி டி லூஃபி எனும் சிறுவன் டெவில் பழத்தை சாப்பிட்டு விட அவனுக்கு ரப்பர் போல மாறும் சக்தி கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அந்த ஒன்பீஸை கண்டுபிடித்து பைரேட்களின் ராஜாவாக போகிறேன் என்கிற லட்சியத்துடன் கிளம்பும் லூஃபி தனது டீமுக்கு ஜோரோ எனும் வாள்வீச்சு வீரனையும் நாமி எனும் திருடியையும் மற்றும் சிலரையும் சேர்த்துக்கொள்ள ஒவ்வொரு இடத்துக்கு போகும் போதெல்லாம் ஒரு பஞ்சாயத்தும் புதுப்புது வில்லன்களும் முளைக்கின்றனர்.

ஃபேண்டஸி கலாட்டா: லூஃபிக்கு மட்டும் இதில் அற்புத சக்தி இல்லை. ஒவ்வொரு வில்லனுக்கும் சூப்பர் பவர்கள் உள்ளன. ஜோக்கர் பாபி என்பவனை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும் திரும்ப வந்து ஒட்டிக் கொள்வான், கப்பல் கம்பெனி ஓனர் பெண்ணின் சொத்தை அபகரிக்க இன்னொரு இரும்புக் கை மாயாவி போன்ற வில்லன், மூக்கு நீண்ட மீன் முள் வில்லன் என ஒவ்வொருவரையும் துவம்சம் செய்து விட்டு லூஃபி எப்படி கிராண்ட் லைனை நோக்கி ஒன்பீஸை தேடி நகர்கிறான் என்பதைத் தான் 8 எபிசோடுகளில் சொல்லி உள்ளனர்.

பிளஸ்: அனிமேஷனில் இஷ்டத்துக்கு காட்சிகளை வைக்கலாம். அதையெல்லாம் ஆட்களை வைத்து எடுப்பது சிரமம் என நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும், அதெல்லாம் இந்த சிஜி காலத்தில் அல்வா சாப்பிடுற வேலை என பிரம்மாண்டமாக செலவு செய்து ஒன்பீஸ் அனிமேஷனை இப்படி ஆட்கள் நடித்துள்ள படமாக காட்டியதும் படத்தில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே தூள் கிளப்புகின்றன. பைரேட்ஸை பிடிக்கும் மரைன் படை மற்றும் அதன் தலைவரே ஹீரோவோட தாத்தா என ஒவ்வொருத்தருக்கும் முன் கதை, பின் கதை வைத்து ரசிக்கும் படி செய்துள்ளனர்.

மைனஸ்: ஆரம்பத்தில் வியக்க வைக்கும் இந்த வெப்சீரிஸ், சில எபிசோடுகளில் ஜவ்வு போல இழுத்து ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பது போன்ற ஃபீலிங்கை கொடுத்து விடுகிறது. ஆரம்பத்தில் சொல்லப்படும் அந்த ஒன்பீஸை கடைசி 8வது எபிசோடு வரை கண்ணுலயே காட்டலையே என பரவை முனியம்மா போலத்தான் வெறும் வெப்சீரிஸை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆகி விடுகிறது. அடுத்த சீசனில் தான் மெயின் பிக்சர் வரும், இதுவெறும் டிரெய்லர் தான் என்கின்றனர். சீரியஸாக இல்லாமல் ஜாலியாக எப்படியும் லூஃபி எந்த மாதிரியான வில்லனையும் வீழ்த்திவிடுவான் என தெரிய வரும் நிலையில், சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. ஆனால், ஃபேண்டஸி பிரியர்கள் தாராளமாக இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். நிர்வாண காட்சி என்றால் ஒரே ஒரு சீனில் அந்த காமெடி மரைனின் பின்னாடி போர்ஷன் மட்டும் ஆடையில்லாமல் முழுசா காட்டுகின்றனர். அதை எடிட் செய்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications











