twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நாள் கூத்து விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.0/5
    Star Cast: தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா
    Director: நெல்சன் வெங்கடேசன்

    நடிகர்கள்: தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா, ரமேஷ் திலக், கருணாகரன், பாலசரவணன்

    ஒளிப்பதிவு: கோகுல் பினோய்

    இசை: ஜஸ்டின் பிரபாகரன்

    தயாரிப்பு: கெனயா பிலிம்ஸ்

    இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

    ஒரு நாள் கூத்து... இந்தப் படம் எப்படி இருக்கும்? என்ற எந்த வித யோசனையும் இல்லாமல் போய் உட்கார்ந்தால்... உள்ளே ஏகப்பட்ட 'இறைவிகள்'!

    மூன்று இளம் பெண்கள்... அவர்களின் திருமணங்கள்... இதுதான் களம். அதை சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து உயிரோட்டமுள்ள ஒரு படமாக்கியிருக்கிறார் புது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். வெல்கம் நெல்சன்!

    Oru Naal Koothu Review

    ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பணக்கார நிவேதாவுக்கும் ஏழ்மை ஈகோவை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செட்டிலாகத் துடிக்கும் தினேஷுக்கும் காதல். உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என நிவேதா சொல்லும் போதெல்லாம், கமிட்மெண்ட்ஸ்.. வீட்டின் ஏழ்மைச் சூழலைச் சொல்லி தள்ளிப் போடும் தினேஷ் மீது செம எரிச்சல். தன் அப்பாவைச் சந்தித்து பெண் கேட்கச் சொல்கிறார். ஆனால் அப்பாவோ தினேஷின் ஏழ்மை ஈகோவைக் கீறிவிட, வெளியேறிவிடுகிறார் தினேஷ்.

    அடுத்தது சூரியன் எஃப்எம்மில் பணியாற்றும் ரித்விகா. மேட்ரிமோனியில் வரன் தேடும் இவருக்கு ஒரு மாப்பிள்ளை வருகிறான். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, மீடியாவில் வேலைப் பார்க்கும் பெண் என்பதால் சந்தேகமும், இன்னும் அழகான பெண் வேண்டும் என்ற பேராசையிலும் ரித்விகாவைக் கழட்டிவிடப் பார்க்கிறான் அந்த மாப்பிள்ளை. அவனிடம் நேரில் போய் கெஞ்சுகிறார் ரித்விகா. அவன் இறங்கி வருவதாய் இல்லை.

    Oru Naal Koothu Review

    மூன்றாவதாக குடும்பக் குத்துவிளக்காக, அதிர்ந்து பேசக் கூடத் தெரியாத மியா ஜார்ஜ். எத்தனை நல்ல வரன்கள் வர, எல்லாரையும் 'உங்களத்தான் மனசுல வச்சிருக்கேன்.. சொல்லி அனுப்புகிறேன்' என்று தட்டிக் கழிக்கிறார் பழமைவாத ஆசிரிய அப்பா. வருடங்கள் போகின்றன. கிழட்டுப் பயலெல்லாம் இரண்டாம் தாரமாகக் கேட்கும் நிலை. அப்போதுதான் களையான ஒருத்தன் வருகிறான். ஆனால் அவனைக் கல்யாணம் முடிப்பதிலும் ஏக சிக்கல்...

    [ஒரு நாள் கூத்து படங்கள்]

    கடைசியில் யாரோடு யாருக்கு முடிச்சு என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

    பெரும்பாலும் சினிமா கதைகளில் பெரிதாக வித்தியாசமும் இருப்பதில்லை. சொல்லப்பட்ட கதைகள்தான். ஆனால் சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு படம் வேறுபட்டு நிற்கிறது. ஒரு நாள் கூத்து அந்த லிஸ்டில் இடம்பெறுகிறது.

    Oru Naal Koothu Review

    மூன்று நான்கு கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்து அதை ஒரு கோட்டில் இணைப்பது கிட்டத்த சர்க்கஸ் சாகஸம். அதை செவ்வனே செய்திருக்கிறார் நெல்சன். அவருக்கு ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள்.

    ஆனால் இரண்டு காட்சிகளில் வேண்டுமென்றே இயக்குநர் சொதப்பியிருக்கிறார். ஒன்று மகா சாதுவான மியாவை ஊருக்கே போய் அல்லவா அந்த மாப்பிள்ளை கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்?

    அடுத்து, ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் தன்னுடன் அவுட்டிங் வரும் காதலியிடம் மனக் குமுறல்களைக் கொட்டும் தினேஷ், அதற்கு முன்பே இந்தக் காரணங்களை நிவேதாவிடம் சொல்லியிருக்கலாமே..

    இந்த இரண்டு உறுத்தல்களையும் கதையின் போக்குக்காக அனுமதித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

    'இவ்வளவுதானா... நல்லாதானே இருக்கு.. இதுக்கா இவ்வளவு கெஞ்சல்' என்று ரமேஷ் திலக்குடன் படுக்கையில் ரித்விகா சொல்லும் காட்சி 'போல்ட்'தான் என்றாலும், இன்றைய சூழலில் ரொம்பவே ஆபத்துப்பா!

    இவர்தான் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருக்குமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குநர்.

    பெரிதாக ஸ்கோர் செய்பவர் ரமேஷ் திலக். படு ஜாலியான பையனாகக் கலக்குகிறார். அரசியல்வாதிகளின் எடுபிடி, டிரைவர் போன்ற வேடங்களிலிருந்து ஒரு ஜம்ப் அடித்து ஆர்ஜேவாகியிருக்கிறார். அடுத்து என்ன... ஹீரோதானே!

    தினேஷை ஆரம்பக் காட்சிகளில் பிடிக்காமல் போகிறது. காரணம் எப்போதும் தூங்கி எழுந்த மாதிரி முகம், உடல் மொழி, வசன உச்சரிப்பு. ஆனால் மெல்ல மெல்ல அவரை ரசிக்க ஆரம்பிக்கிறோம். அதிலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் காதலியிடம் தன் ஆற்றாமையைச் சொல்லுமிடத்தில் அப்ளாசை அள்ளுகிறார் மனிதர்.

    Oru Naal Koothu Review

    நாயகிகளில் மூவரின் நடிப்புமே முதல் தரம்தான். அதிலும் ரித்விகாவின் அந்தக் கண்களும், என்னை மறுத்துவிடாதே என்று பேசாமல் பேசும் முக பாவமும் படம முடிந்த பிறகும் மனசில் நிற்கின்றன.

    ஒரு பக்கா காதல் படம் எடுத்தால் அதில் முழு நாயகியாக நிவேதாவைப் பரிந்துரைக்கலாம். அபாரம். நமக்கு இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என ஏங்குவார்கள் படம் பார்க்கும், 'கமிட்' ஆகாத பையன்கள்!

    மியா ஜார்ஜ்.. இப்படியும் கூட பெண்கள், அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்தக் காலத்தில். அந்த கடைசி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்ததுமே, 'அப்பாடி.. இந்தப் பெண்ணுக்கு இவனையே கட்டி வைத்துத் தொலய்யா..' என்று நமக்குள்ளேயே சத்தமாகச் சொல்லிக் கொள்வதை உணர்கிறோம்.

    நான்கு காட்சிகள்தான் என்றாலும் கருணாகரனின் பண்பட்ட நடிப்பு பாராட்ட வைக்கிறது. ஐம்பதுகளைக் கடந்த பேச்சுலர் சார்லி, நிவேதாவின் தந்தையாக வரும் ராஜா செந்தில், மியாவின் தந்தை நாகிநீடு, பாலசரவணன் என யாரும் குறை வைக்கவில்லை நடிப்பில்.

    டெக்னிக்கலாக படத்தின் எடிட்டருக்குதான் (சாபு ஜோசப்) முதல் மதிப்பெண். ரொம்ப ஷார்ப். அப்படியே அந்த எஃப் எம் ஸ்டேஷன் காட்சிகளை கணிசமாகக் குறைத்திருக்கலாம். கல்யாண மாலை காட்சிகளையும் கூட.

    அந்த ஆக்சிடென்ட் காட்சியைக் கையாண்ட விதம் அருமை.

    ஜஸ்டின் பிரபாகரன் இசை பிரமாதம். அதிலும் அடியே அழகே.. மனசில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுகிறது. நல்ல மெலடி. பாட்ட போடுங்க ஜி...யில் அப்படி ஒரு உற்சாகம்.

    கே பாலச்சந்தரின் அந்தக் கால கதை ஒன்றிற்கு மாடர்னாக ஒரு திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும், அது தான் இந்த ஒரு நாள் கூத்து.

    English summary
    Debutant director Nelson Venkatesan’s Oru Naal Koothu is depicting the life and love of three women who are from different background interestingly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X