Pachuvum Athbutha Vilakkum: ஃபஹத் பாசிலின் ஃபீல்குட் படம்... பாச்சுவும் அத்புத விளக்கும் விமர்சனம்
நடிகர்கள்: ஃபஹத் பாசில், அஞ்சனா ஜெயபிரகாஷ், வினீத், விஜி வெங்கடேஷ்
இயக்குநர்: அகில் சத்யன்
இசை: ஜஸ்டின் பிராபகர்
சென்னை: ஃபஹத் பாசில் நடித்துள்ள பாச்சுவும் அத்புத விளக்கும் படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அகில் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மலையாள சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் பாச்சுவும் அத்புத விளக்கும் படம் வெளியாகியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
பாச்சுவும் அத்புத விளக்கும் விமர்சனம்
மும்பையில் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையின் பிரான்ஸைஸ் எடுத்து நடத்தி வருகிறான் பிரசாந்த் என்ற பாச்சு. 34 வயதாகியும் திருமணம் ஆகாத பாச்சு, தானுண்டு தன் வேலையுண்டு என சுயநலவாதியாகவே வாழ்ந்து வருகிறான். அப்போது திடீரென சொந்த ஊரான கேரளா செல்லும் பாச்சு, திரும்பவும் மும்பை வரும்போது ஒரு பணக்கார பெண்மணியையும் கூட்டிச் செல்லும் நிர்பந்தம் ஏற்படுகிறது.
இருவரும் ரயிலில் மும்பை திரும்பிக்கொண்டிருக்கும் போது, பாச்சுவுக்கு தெரியாமல் அந்த பெண்மணி கோவாவில் இறங்கிவிடுகிறார். அவரைத் தேடி பாச்சுவும், இன்னொரு சிறுவனும் அங்கே இறங்கிவிட அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை. ஒரு பயணம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என சுமார் 3 மணி திரைக்கதையில் விரிகிறது பாச்சுவும் அத்புத விளக்கும் படம்.
பாச்சுவாக ஃபஹத் பாசில், வயதான பெண்மணியாக விஜி வெங்கடேஷ் இவர்களுடன் வினீத், அஞ்சனா ஜெயபிரகாஷ், முகேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். எதுவுமே தான் நினைத்த மாதிரி நடக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஃபஹத் பாசிலுக்கு, ஒருகட்டத்தில் அவன் தேடிய எல்லாமே தேடி வருகிறது. ஆனால், அதில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும், எதனை நிராகரிக்க வேண்டும் என்ற புரிதலையும் தெளிவையும் அவன் சந்திக்கும் அனுபவங்களே கற்றுக்கொடுக்கிறது.
ஒருவருக்கு உதவி செய்ய நினைக்கும் போதும் அதில் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என மனிதர்கள் நினைப்பது இயல்பு தான். அதிலிருந்து எப்படி மீள வேண்டும், மனிதர்கள் மீதான மதிப்பீடுகள் எதனடிப்படையில் இருக்க வேண்டும் என அடுக்கடுக்காக பல உணர்வுச் சிக்கல்கள் கொண்ட காட்சிகளின் வழியே பிரதிபலிக்கிறது பாச்சுவும் அத்புத விளக்கும். 2 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை ஓடும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபீல்குட்டாக உருவாகியுள்ளது.

கதை என பார்த்தால் பெரிதாக எந்த மேஜிக்கும் இல்லாதது தான். ஆனால், அதனை காட்சிகள், வசனங்கள் வழியாக திரைக்கதையாக மாற்றியதில் தான் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சில இடங்களில் திரைக்கதை கொஞ்சம் அயர்ச்சியை தருவதும் உண்மையே. இந்த குறைகளில் இருந்து ரசிகர்களை மீட்டெடுப்பது ஃபஹத் பாசில் தான். முதல் காட்சியில் இருந்து கிளைமேக்ஸ் வரை மனுஷன் நடிப்பில் அசரடிக்கிறார்.
படம் தொடங்கி முதல் 1 மணி நேரம் ஜெட் வேகத்தில் நகர்கிறது, அதற்கு ஒரே காரணம் ஃபஹத் பாசில் தான். மெடிக்கல் ஓனர், திருமண ஏக்கம், மீன் முள் தொண்டையில் சிக்கும் காட்சி, ஐ-போனுக்காக ஏங்குவது, சொந்தமாக கடை என்றதும் கட்சி மாறுவது, அஞ்சனாவுக்கும் அவரது காதலனுக்கும் பிரேக்-அப் செய்துவிடுவது, பின்னர் அவரே அஞ்சனாவை காதலிப்பது என ஒவ்வொரு காட்சிக்கும் தனது கேரக்டரின் தன்மையை நியாயப்படுத்தியுள்ளார் ஃபஹத். அதேபோல் காமெடி காட்சிகளிலும் ஃபஹத்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
ஃபஹத் பாசிலுக்குப் பிறகு வினீத், அஞ்சனா ஜெயபிரகாஷ், விஜி வெங்கடேஷ், முகேஷ் ஆகியோரது நடிப்பும் கவனம் ஈர்த்துள்ளது. ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள், பின்னணி இசை என ஒரு ஃபீல்குட் படத்துக்கு தேவையான அனைத்தையும் அம்சமாக அள்ளி வந்துள்ளது பாச்சுவும் அத்புத விளக்கும் திரைப்படம். மலையாளத்தில் உருவாகியிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது இந்தப் படம். அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள பாச்சுவும் அத்புத விளக்கும் படம் ஓடிடி ரசிகர்களுக்கான திரை விருந்து.


Click it and Unblock the Notifications











