twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'படைவீரன்' - விமர்சனம் #PadaiVeeranReview

    By Vignesh Selvaraj
    |

    மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இயக்கத்தில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'படைவீரன்'. புதுமுகம் அம்ரிதா இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிதா பாரதி, அகில் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய, இந்தப் படத்திற்கு புவன் ஶ்ரீனிவாசன் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். 'படைவீரன்' படம் எப்படி?

    படைவீரன்

    படைவீரன்

    தேனி மாவட்டம் சின்னமனூர் பக்கம் இருக்கும் அய்யனார்பட்டியில் சாதி, சனம் என வாழும் முனீஸ்வரனாக விஜய் யேசுதாஸ். நல்ல மழை, காற்றோடு வளமான மண்கொண்ட அந்த ஊரில் மனிதர்களின் மனம் மட்டும் வறண்ட பாலையாக விஷம்கொண்டு இருக்கிறது. தலைமுறைகள் கடந்தும் சாதிக்காக வெட்டும், குத்துமாக குரோதம் தாங்கித் திரியும் ஊர். அந்த ஊரில் யதார்த்தமாக நிகழும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்த்தப்படும் சாதிக் கலவரங்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தான் 'படைவீரன்' படத்தின் கதை. 'அருவா, கம்ப தூக்கித் தூரப்போட்டுட்டு புள்ள குட்டிகள படிக்கை வைங்க' என்பதையே இன்னொரு முறை காட்டமாகச் சொல்லியிருக்கிறான் இந்தப் 'படைவீரன்'. 'படிச்சிட்டு அமெரிக்காவுல வேலை பார்த்தாலும் 'ஆண்ட பரம்பரை' என ஸ்டேட்டஸ் தட்டும் சாதி வன்மத்தை விட்டொழியுங்கள்' என காலத்திற்கேற்ற கருத்துச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தனா.

    முனீஸ்வரன்

    முனீஸ்வரன்

    வேலைவெட்டி இல்லாமல், நண்பர்களோடு ஆட்டமும் பாட்டமுமாக ஊரில் சண்டியராக வலம் வரும் முனீஸ்வரனுக்கு எதிர்பாராக் காதல் ஏற்படுகிறது. போலீஸ் ஆனால் நிறைய சலுகைகள் கிடைக்கும், கூடவே காதலிக்கும் பெண்ணும் கிடைப்பாள் என போலீஸாக ஆசைப்பட்டு தகிடுதத்தங்கள் செய்து போலீஸ் ட்ரெய்னிங் வரை சென்று விடுகிறார். இதற்கிடையே, ஊரில் எதிர்பாராத ஒரு மரணம் நிகழ்கிறது. அதனைக் காரணமாக வைத்து பெரும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் அருகருகே இரண்டு ஊர்களில் இருக்கும் லோக்கல் சாதித் தலைவர்கள். ஊரில் இருக்கும் இளைஞர்களுக்கெல்லாம் கொம்பு சீவப்பட, ஊரே வன்முறைக் களமாய் வெகுண்டு நிற்கிறது. இரு ஊர்க்காரர்களும் மாற்றி மாற்றி மோதிக் கொள்கிறார்கள்.

    சாதிக் கலவரம்

    சாதிக் கலவரம்

    ட்ரெய்னிங் முடித்ததும் சாதிக் கலவரத்தைக் கட்டுப்படுத்த அவரது ஊருக்கே பணிக்கு வருகிறார் முனீஸ்வரன். பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளி எனப் பழகியவர்கள் சாதி வெறிகொண்டு திரிவதைப் பார்த்துப் பதை பதைக்கிறார். சாதி சார்ந்த சூழலிலேயே வளர்ந்ததால் அவருக்குள்ளும் இருக்கும் சாதிவெறி தனது சாதிக்காரர்களை எதிர்க்கும் துணிவைத் தரவில்லை. போலீஸ் நண்பன் ஒருவனை ஊர்க்கார நண்பன் வெட்ட, ஊரையே எதிர்த்துக்கொண்டு தனது படையினரோடு எல்லோரையும் கைது செய்கிறார் முனீஸ்வரன். வன்முறையாளர்களுடன் நடக்கும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறந்தும் போகிறார்கள்.

    சாதி வெறி

    சாதி வெறி

    ஜாமீனில் இரண்டு ஊர்க்காரர்களும் வெளியே வர, சாதிக் கலவரம் எல்லை மீறிக் கொண்டே செல்கிறது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், ஒருவரை ஒருவர் கொல்ல சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள். சாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்த முயல்கிறார்கள் காவல் துறையினர். ஆனால், தங்கள் சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறார்கள் இரு ஊர்க்காரர்களும். சாதிவெறி ஊறிப்போயிருக்கும் தனது சொந்தக்காரர்களையும், ஊர்க்காரர்களையும் முனீஸ்வரன் திருத்தினாரா, சாதிக் கலவரம் முடிவுக்கு வந்ததா என்பதையெல்லாம் ரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறான் 'படைவீரன்'.

    விஜய் யேசுதாஸ்

    விஜய் யேசுதாஸ்

    'மாரி' படத்தின் மூலம் தமிழில் நெகட்டிவ் ரோலில் அறிமுகமான விஜய் யேசுதாஸ் சல்லித்தனமும், சவடாலும் நிறைந்த கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார். அதிகமான டயலாக் பேசத் தேவையில்லாமல் பாடி லாங்வேஜ் காட்டுவதற்கான கேரக்டர் என்பதால் மிகையில்லாத நடிப்பு. போலீஸ் உடையணிந்து மிடுக்கு காட்டியிருக்கிறார் இந்த முனீஸ்வரன். கிராமத்து கேரக்டருக்கு இப்படியொரு தேர்வா என அதிருப்தியோடு பார்க்கத் தொடங்கினாலும் ரசிகர்களின் எண்ணத்தை மாற்றிவிடுகிற மாதிரியான நடிப்பு. கதாநாயகி அம்ரிதா புதுமுகம் தான் என்றாலும் நடிப்பில் உறுத்தல் இல்லை. பாவாடை சட்டை அணிந்த கிராமத்து பெண்ணாக யதார்த்தமான அழகு.

    பாரதிராஜா

    பாரதிராஜா

    பாரதிராஜா இப்படத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரராக வருகிறார். கட்டிலில் அமர்ந்து கதை அளப்பது, ஊர்ப் பெண்களை ஒரண்டையிழுப்பது, பாசத்தில் கதறி அழுவது, கோபத்தில் கொந்தளிப்பது என இயக்குநர் இமயம் இப்போது முழுநேர நடிகராகியிருக்கிறார். சாதி நெடி பரவியிருக்கும் நெஞ்சங்களை எல்லாம் அசைத்துப் பார்க்கும் விதமாக இருக்கின்றன அவரது குரலில் ஒலிக்கும் வசனங்கள். சாதிவெறியுடன் முகத்திலும், ஏன் புன்னகையிலும் கூட குரூரம் காட்டும் வில்லனாக கவிதா பாரதி. முனீஸ்வரனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கேரக்டருக்கு ஏற்றபடி சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். நண்பனுக்காக மோட்டார் திருடி அவனை வழியனுப்பி ஊர்க்காரர்களிடம் அடிவாங்குவதாகட்டும், பின்பு அதையே சொல்லிக் காட்டி சாதிவெறியைக் காட்டுவதாகட்டும் நடிப்பில் சோடை போகவில்லை.

    படைவீரன்

    படைவீரன்

    மனிதர்களின் தேவைக்காக இனக்குழுவாக உருவாக்கப்பட்ட சாதி, மனித இனத்தையே கொன்றொழிப்பதன் அவலத்தைச் சாடியிருக்கிறார்கள் படத்தில். ஆண்டாண்டு காலமாக ஆண்ட பரம்பரை என அரற்றித் திரியும் மனிதர்களை கொஞ்சமேனும் யோசிக்க வைக்கும் படமாகவே வந்திருக்கிறது 'படைவீரன்'. சிந்தனைகளை மழுங்கடித்து சாதிக்கொடியைத் தூக்கிப் பிடிக்கிற வேலைகளை இந்தச் சமூகமும், சாதிக் கடவுளின் தூதுவர்களாக இருக்கும் சுயநலவாதிகளும் எப்படி காலங்காலமாகச் செய்து வருகிறார்கள் என்பதற்கான எளிமையான பதிவாகவும் இருக்கிறது இப்படம். சாதியக் கட்டமைப்பு வலிமையாக இருக்கும் தேனி பகுதிகளைக் கொண்ட கதைக் களத்தை வைத்து துணிச்சலான சாதி எதிர்ப்பு படத்தை எடுத்ததற்காக அறிமுக இயக்குநர் தனாவுக்கு பாராட்டுகள்!

    மைனஸ்

    மைனஸ்

    கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவில் குறையில்லை. முற்பாதியில் வரும் காட்சிகள் கொஞ்சம் போரிங். எடிட்டர் அந்தப் பகுதிகளைக் கொஞ்சம் அழுத்திக் கத்தரித்திருக்கலாம். தேனி பகுதிக்கு உரிய வட்டார மொழிநடையை எப்படியோ கஷ்டப்பட்டு பேசியிருக்கிறார் விஜய் யேசுதாஸ். இன்டர்வெல்லின்போது தான் கதை சொல்லவரும் விஷயத்தை நோக்கியே ஷார்ப்பாக திரும்புகிறது. அதுவரை எந்த அழுத்தமும் இல்லாமல் செல்லும் கதை கொஞ்சம் அயர்ச்சியூட்டுகிறது. இடைவேளைக்குப் பிறகு படம் சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென வசனங்களின் மூலம் சொல்லி, கிளைமாக்ஸையும் கனமான காட்சிகளாக வைத்ததற்கு நிச்சயம் பாராட்டலாம். 'படைவீரன்' - சாதி வெறியர்களுக்கான சாட்டையடி!

    English summary
    'Padaiveeran' is an emoytional drama film about casteism. 'Padaiveeran' movie is lead by Vijay yesudas, Amrita and bharathiraja directed by Dhana. Rad Padaiveeran review here..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X