Pambattam Review: பாம்பாட்டம் விமர்சனம்.. காக்க காக்க ஜீவன், கலாசலா மல்லிகா ஷெராவத்.. படம் தேறுமா?
நடிகர்கள்: ஜீவன், மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த்
இசை: அம்ரிஷ்
நேரம்: 2 மணி நேரம் 10 நிமிடங்கள்
இயக்கம்: வி.சி. வடிவுடையான்
சென்னை: சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் ஹாரர் படமாக இந்த படத்தை இயக்குநர் வி.சி. வடிவுடையான் இயக்கி உள்ளார். சிம்புவின் ஒஸ்தி படத்தில் "கலாசலா" பாட்டுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திலும் நடித்துள்ளார்.
பாலிவுட்டிலேயே பட வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீவன் படத்தில் நடித்திருக்கிறார். சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் கொடூர வில்லனாக நடித்து மிரட்டிய ஜீவன் நான் அவன் இல்லை படத்தில் நடித்து பிரபலமான ஹீரோவாக மாறினார். நான் அவன் இல்லை, திருட்டுப் பயலே ஓடியதை போல நான் அவன் இல்லை 2 ஓடவில்லை. அதன் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போன அவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த இருவருக்குமே இந்த படம் கம்பேக்காக அமைந்ததா? இல்லையா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

பாம்பாட்டம் கதை: ஒரு பெரிய சமாஸ்தானத்தையே ஆட்சி செய்து வரும் மல்லிகா ஷெராவத் சரியாக சாப்பிடுகிறாரே என்றே தெரியாத அளவுக்கு ஓடு போல இருந்துக் கொண்டு ராஜமாதா சிவகாமி தேவி ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார். தூய தமிழில் படம் எடுக்கிறேன் என டப்பிங் பட அனுபவத்தையே கொடுத்திருக்கின்றனர். பாம்பு கடித்து மல்லிகா ஷெராவத் இறப்பார் என ஜோஷியர் சொல்ல ஊரில் உள்ள பாம்புகளை கொல்ல உத்தரவிடுகிறார். ஒவ்வொரு பாம்பும் கொல்லப் படுகிறது. ஒரே ஒரு பாம்பு மட்டும் தப்பித்து வந்து மல்லிகா ஷெராவத்தை கொன்று விடுகிறது. அதன் பின்னர் பேயாக மாறி அந்த அரண்மனையில் சுற்றி வரும் அவரால் நிகழும் பிரச்சனைகளை கண்டறிய போலீஸ் அதிகாரியாக வரும் ஜீவன் என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசம்: சுட்டி டிவியில் கூட இதை விட நல்ல கிராபிக்ஸ் இருக்கும் என குழந்தைகளே கலாய்க்கும் அளவுக்கு பாம்பாட்டம் படத்தில் கிராபிக்ஸ் காட்சியில் ஏகப்பட்ட பாம்புகளை வித விதமாக காட்டி ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர். முழுக்க முழுக்க கிராபிக்ஸை நம்பி குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்தால் எப்படி சிக்கல் ஆகுமோ அதே போன்ற சிக்கலை இந்த படம் சந்தித்து இருக்கிறது.

பிளஸ்: ஜீவன் மற்றும் மல்லிகா ஷெராவத் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கூடுமானவரை நடித்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களை தவிர மற்றவர்கள் யாருமே படத்திற்கு தங்கள் உழைப்பை போட்டது போல தெரியவே இல்லை. அம்ரிஷ் அளவான இசையை கொடுத்திருக்கிறார்.
மைனஸ்: முதல் காட்சியில் இருந்து கடைசி வரை படம் மைனஸாகத்தான் தெரிகிறது. திரைக்கதை புதிதாக இல்லை. படத்தின் காட்சிகள், பீரியட் போர்ஷனுக்கான மெனக்கெடல், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரின் நடிப்பு என அனைத்துமே மைனஸ் ஆகத்தான் உள்ளது. ஜீவனுக்கு இந்த படம் கம்பேக்காக இருக்கும் என்று பார்த்தால், இந்த படமும் அவருக்கு இன்னொரு ஃபிளாப் படமாகவே இணைந்து விட்டது.


Click it and Unblock the Notifications











