»   »  பாபநாசம் விமர்சனம்

பாபநாசம் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: கமல் ஹாஸன், கவுதமி, நிவேதா தாமஸ், அருள்தாஸ், கலாபவன் மணி, இளவரசு, ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன்

ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்


இசை: ஜிப்ரான்


தயாரிப்பு: சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா


இயக்கம்: ஜீத்து ஜோசப்


மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.


பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் ஹாஸன், மனைவி கவுதமி, இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகள் ஒரு முறை அகஸ்தியர் மலைக்கு பள்ளிக் கூடம் மூலம் இயற்கை சுற்றுலா செல்கிறார். அப்போது அவரையும் அறியாமல் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அது ஒரு கொலையில் போய் முடிகிறது.


Papanasam Review

படிக்காத கமல், இந்த பெரும் சிக்கலிலிருந்து மகளையும் குடும்பத்தையும் எப்படி புத்திசாலித்தனமாகக் காப்பாற்றுகிறார்.. அதுவும் தான் பார்த்த சினிமாக்களின் துணையுடன் என்பதெல்லாம் திரையில் போய்ப் பார்த்து ரசிக்க வேண்டியவை!


கதையும் திரைக்கதையும் மிக அசாதாரணமானது. ரொம்பப் பக்குவமாக காட்சிப்படுத்த வேண்டியது. அதைப் புரிந்து அழகாக ஒத்துழைத்திருக்கிறார் கமல் ஹாஸன்.


பொதுவாக கமல் ஹாஸன் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரத்தை மீறி, ஒரு நடிகர் என்பது தனித்துத் தெரியும். அதை ஒரு விமர்சனமாகவும் அவர் மீது வைப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அவரது நெல்லை வட்டார வழக்கு தவிர்த்துப் பார்த்தால், எங்கும் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. சுயம்புலிங்கம்தான் தெரிகிறார். அவர் இத்தனை 'ஸ்ட்ரிக்டாக' நெல்லைத் தமிழைப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.


ஒவ்வொரு காட்சியிலும் கமலின் உடல் மொழி அசர வைக்கிறது. குறிப்பாக டிஐஜி அலுவலகத்தில் கமலை அடித்து துவைக்க, வேறு பாத்திரங்கள் பிரதானமாய் வரும்போதும், கமல் தரையில் விழுந்தபடியே கிடப்பார்.


Papanasam Review

அதே காட்சியில் மகள் உண்மையைச் சொல்லிவிடுவாளோ என பதட்டத்தில் பார்வையைத் திருப்ப முயற்சிப்பவர், போலீஸ் கவனிப்பதை உணர்ந்து கண நேரத்தில் சட்டென்று மீண்டும் அப்பாவியாக ஒரு பார்வை பார்ப்பார்.


தழுதழுக்கும் குரலில் உண்மையை நேரடியாகவும் சொல்லாமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிற மாதிரியும் சொல்லும் அந்த க்ளைமாக்ஸில் கமலுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் இயக்குநர்.


கவுதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இயல்பாக நடித்திருந்தாலும், அவரது தோற்றத்தில் தெரியும் தளர்ச்சி, மிக முக்கியமான ஒரு காட்சயில் நெருடலைத் தருகிறது.


காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளாக வரும் அத்தனை பேரும் உண்மையான போலீசாகவே தெரிகிறார்கள். குறிப்பாக அருள்தாஸ். கமலை விசாரிக்க வீட்டுக்கு வரும் அவர், விசாரணை செய்யும் விதம், நிஜ போலீசே தோற்றுவிடும். கலாபவன் மணியும் அபாரம்.


Papanasam Review

டிஐஜியாக வரும் ஆஷா சரத்தும், அவர் கணவராக வரும் ஆனந்த் மகாதேவனும் படத்துக்கு பெரிய பக்கபலம். அருமையான நடிப்பு.


இளவரசு, எம்எஸ் பாஸ்கர், மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அத்தனை பேருமே மனதில் நிற்கிறார்கள்.


இந்தப் படத்தை எதற்காக மூன்று மணி நேரமாகத் தந்தார்கள் என்பது ஒரு பெரிய குறை. படத்தை ரொம்ப நேரம் பார்ப்பது போன்ற உணர்வு வர முக்கிய காரணம் அந்த ஆரம்ப காட்சிகள்தான். படத்தில் முக்கிய நெருடல்.. சாமர்த்தியமாக தடயங்களை மறைத்துவிட்டால் சரியாகிவிடுமா என்பது. அதற்கு கடைசி காட்சியில் கமல் - கவுதமி உரையாடல் மூலம் பதில் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.


ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுஜித் வாசுதேவ். பாபநாசமும் மேற்குத் தொடர்ச்சி அடிவார குளிர்காற்றும் உடலையும் மனசையும் தழுவிச் செல்லும் உணர்வைத் தருகின்றன காட்சிகள்.


Papanasam Review

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் சரிகட்டிவிடுகிறார். முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு கத்தரி போடுவதில் பிடிவாதம் காட்டியிருக்கலாம் எடிட்டர்.


இந்த காலகட்டத்துக்கு நிச்சயம் இப்படிப்பட்ட படங்கள் அவசியம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

English summary
Kamal Hassan starrer Jeethu Joseph's directorial Papanasam is a perfect remake of its original Dhrishyam and a must watch movie.
Please Wait while comments are loading...