twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதித்திமிருக்கு சாட்டையடி கொடுக்கும் 'பரியேறும் பெருமாள்'! விமர்சனம்

    ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பரியேறும் பெருமாள்.

    |

    Recommended Video

    சாதித்திமிருக்கு சாட்டையடி பரியேறும் பெருமாள் விமர்சனம்- வீடியோ

    Rating:
    4.0/5

    சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலை, ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்திருதுக்கிறது பரியேறும் பெருமாள் திரைப்படம்.

    ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்), எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் சேருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஆங்கிலம். இதனால், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரிடமும் அசிங்கப்படுகிறார். சக மாணவியான ஜோ... ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி) கதிருக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார். இருவருக்குள்ளும் நட்பு மலர, நெருக்கம் அதிகமாகிறது. ஆனந்தியின் தந்தை மாரிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட, அவரின் குடும்பத்தாரால் கடுமையாக தாக்கப்படுகிறார் கதிர். ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்களை தாண்டி, அவரால் சட்டப்படிப்பை முடிக்க முடிந்ததா? ஆனந்தியுடனான உறவு என்ன ஆனது என்பது தான் படம்.

    Pariyerum perumal movie review

    படத்தின் முதல் காட்சியே நெஞ்சை உறைய வைக்கிறது. ஓடுக்கப்பட்ட மக்களின் வலியை கருப்பியின் (வேட்டை நாய்) கொடூரக் கொலையை வைத்தே பார்கையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர். கல்லூரிக்கு சென்று உயர் கல்வி கற்க நினைக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆதிக்க சாதி மாணவர்களால் என்ன பாடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

    ஆனந்தியின் குடும்பத்தினர் கதிர் மீது சிறுநீர் கழிக்கும் காட்சியும்... கதிரின் தந்தைக்கு நேரும் கொடுமையும்.... நம் ஈறக்குலையை நடுங்கச் செய்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினால் தான் இந்த மாணவனால் படிப்பை தொடர முடியும் என காட்டியிருப்பதும் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு.

    "நாங்க நாயாக இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவும் மாறாது", "ரூம்ல போய் தூக்கு மாட்டிக்கிட்டு சாகுரதவிட, சண்ட போட்டு சாகலாம்", போன்ற நச் வசனங்கள் சாதிவெறிக்கு எதிரான சாட்டையடி. இந்த படத்தை மாரி செல்வராஜ் கையாண்டிருக்கும் விதம், மிகவும் பாராட்டத்தக்கது. சாதி என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    Pariyerum perumal movie review

    எந்தவிதத்திலும் வன்முறையை தூண்ட வேண்டும் என நினைக்காமல், உண்மையின் அடிப்படையில் யதார்த்தமாக காட்சிபடுத்தி இருக்கிறார் இயக்குனர். சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறைக்கு தனி கைதட்டல்கள். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

    பரியேறும் பெருமாளாகவே வாழ்ந்திருக்கிறார் கதிர். பரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல ஒரு கோடு என சட்டக்கல்லூரிக்குள் கம்பீரமாக நுழைந்து, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, திமிறி எழந்து, திருப்பி அடித்து என மிரட்டியிருக்கிறார். காடு மேடுகளில் ஓடி, வெயிலில் காய்ந்து, அடி வாங்கி, உதை வாங்கி, உருண்டு, புரண்டு உயிரை துச்சமென கருதி நடித்திருக்கிறார் கதிர். தமிழ் சினிமாவில் மற்றொரு சிறந்த நடிகன் நான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார். சபாஷ் கதிர்.

    Pariyerum perumal movie review

    அரக்கர்களை பற்றி நாம் கதையில் தான் படித்திருப்போம். முதல்முறையாக ஒரு உண்மையான அரக்கனை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். சாதுவான உருவில், குற்ற உணர்ச்சியே இல்லாமல் கொடூரக் கொலைகாரனாக நடுங்கச் செய்திகிறார் கராத்தே வெங்கடேஷ். 'அந்த ஆள அடிச்சு கொல்லுங்கடா' என பார்வையாளர்கள் மத்தியில் குரல் எழும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பு.

    கதிரின் தந்தையாக வரும் தங்கராஜ் பரிதாபத்தின் உச்சம். ஒரு காட்சி என்றாலும், அப்பாவி அப்பா வந்து மனதில் பதிகிறார்.

    இவ்வளவு சீரியசான படத்தின் மிகப்பெரிய ரிலாக்சேஷன் யோகி பாபு. சும்மா காமெடியனாக மட்டும் இல்லாமல், மிக அழுத்தமான கதாபாத்திரம். நெல்லை பாஷை வாயில் நுழையவில்லை என்றாலும், ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். அதுவும் அந்த சின்ன சியா பெரிய சியா காமெடிக்கு திரையரங்கில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகிறது.

    Pariyerum perumal movie review

    ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார் ஆனந்தி. அவரது கண்களும், அடுக்குப்பல்லும் ஜோவை ஞாபகப்படுத்துகின்றன. கண்களை மூடிக்கொண்டு கதிரிடம் காதலை சொல்லும் காட்சியில் குழந்தையாகவே தெரிகிறார்.

    சாதித்திமிர் பிடித்த மாணவனாக வரும் லிஜிஷ் மிகவும் பொருத்தமான தேர்வு. சிறப்பாக செய்திருக்கிறார். ஆனந்தியின் அப்பாவாக வரும் மாரிமுத்து, ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் கலக்கிவிட்டு போகும் சண்முகராஜா, ஆசிரியர்கள், ஊர்காரர்கள், குடும்ப உறவினர்கள் என அனைவருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

    படத்தின் மிகப் பெரிய பலம், இசையும் ஒளிப்பதிவும் தான். படத்தின் உணர்வு எந்தவிதத்திலும் சிதைந்துவிடாமல், பின்னணி இசையை கோர்த்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 'கருப்பி', 'நான் யார்' பாடல்கள் வெஸ்டர்ன் வைப்ரேஷன் என்றால், 'எங்க புகழ் துவங்க', 'வணக்கம் வணக்கமுங்க' பாடல்கள் நாட்டுப்புற மெட்டுகளாக தாளம்போட வைக்கின்றன. 'வா ரயில் விட போலாமா' பாட்டு, குழந்தை பருவத்துக்கு அழைத்து செல்கிறது.

    Pariyerum perumal movie review

    படத்தின் உயிரோட்டத்தை அத்தனை அழகாக தாங்கிப்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். தாமிரபரணி ஆற்றில் நடக்கும் கொலைக்காட்சியில் படபடக்க வைத்திருக்கிறார். கருப்பியை இத்தனை அழகாகவும் கம்பீரமாகவும் காட்டியதற்காகவே பாராட்டுகிறோம். க்ளைமாக்ஸில் வரும் இரண்டு கண்ணாடி டீ கிளாஸ்கள் சமத்துவத்தின் குறியீடு. செல்வாவின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

    கருப்பியை ஒரு துணை பொருளாக இல்லாமல், மனிதத்தை சிதைக்கும் மிருகங்களின் கொடூரத்தை உணர்த்துவதற்காக பயன்படுத்தி இருப்பது அருமை. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பல கதைகள் சொல்கின்றன. சீரழிந்துவிட்ட மனிதத்தை தட்டி எழுப்ப செய்கின்றன.

    குறைகளை தேடி ஆராய்ந்து எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் பரியேறும் பெருமாளுக்கு எழவில்லை. இன்றைய சூழலில் மிக அவசியமான பதிவு இந்த பெரியேறும் பெருமாள். சாதியும் மதமும் மனித இனத்திற்கே எதிரானது என அழுத்தம், திருத்தமாக சொன்னவிதத்தை மனதாரப் பாராட்டுகிறோம்.

    English summary
    The tamil movie Pariyerum perumal, directed by debutant Mari Selvaraj, starring Kathir, Ananthi in the lead roles has a strong message against honor killing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X