Pathonpatham Noottandu Review: நங்கேலி மார்பை அறுக்கும் காட்சிகள் உறைய வைக்கிறது.. ஓடிடியில் காணலாம்!
நடிகர்கள்: சிஜு வில்சன், கயாடு லோஹர், பூனம் பஜ்வா
இயக்கம்: வினயம்
ஓடிடி: அமேசான் பிரைம்
சென்னை: என் மன வானில், காசி உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குநர் வினயன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
மார்பை மறைக்கும் ஆடைக்கு வரி கொடுக்க முடியாது என மார்பையே அறுத்து புரட்சியை வெடிக்க வைத்த நங்கேலியின் கதையை கூறுகிறது. வெறும் நங்கேலி கதையை மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் என புறக்கணிக்கப்படும் மக்களுக்கு பாதுகாவலனாக திகழ்ந்த வேலாயுத பணிக்கரின் கதையையும் சேர்த்தே சொல்கிறது இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு.
எளிய மக்கள் மீசை வைத்தால் வரி, பெண்கள் மார்பில் ஆடை அணிந்தால் வரி என இருந்த கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து பேசியிருக்கும் இந்த படம் 18 பிளஸ் படமாகவே வெளியாகி உள்ளது.
நங்கேலியின் கதை
கேரளத்தில் தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் மார்பை மறைக்கும் கச்சையை கூட அணியக் கூடாது என அந்த ஊரை ஆட்சி செய்து வரும் சிற்றரசர்கள் செய்யும் அட்டூழியங்களும், அந்த ஊர் பெண்களுக்கு பாதுகாவலனாக விளங்கி வந்த வேலாயுத பனிக்கரை சூழ்ச்சியால் கொன்று விடும் நிலையில், நங்கேலியிடம் வரி வசூலிக்க வர, அவர் தனது மார்பகங்களையே அறுத்து வரியாக எடுத்துப் போ என உயிர்த் தியாகம் செய்ய அடிமையாக இருந்த மக்கள் வெகுண்டு எழுந்து ஊரையே தீக்கிரையாக்கி அப்படியொரு வரிச் சட்டத்தையே இல்லாமல் ஆக்கிய கதை தான் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தின் கதை. நங்கேலியாக நடித்துள்ள காயடு லோஹர் நடிப்பு அபாரம்.
வேலாயுத பணிக்கர்
ஆங்கிலேயர்கள் மற்றும் சிற்றரசர்கள் ஏழை மக்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளை கண்டித்து வரும் போராளியாகவும் அரசுக்கு முறையாக வரி செலுத்தி கெளரவமாக வாழும் செல்வந்தராகவும் வேலாயுத பணிக்கர் கதாபாத்திரத்தில் நாயகன் சிஜு வில்சன் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவு எல்லாம் செய்யவில்லை என்றாலும், நாயகனின் உடல் மொழியும் நடிப்பும், துடிப்பும் ஒரு நிஜ போராளியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
காயங்குளம் கொச்சுன்னி
பத்மநபா சாமி கோயிலின் திருவாபரண பெட்டியை காயங்குளம் கொச்சுன்னி களவாடி சென்று விட்டான் என்றும், அரச வீரர்கள் அவனை சிறை பிடிக்க முடியவில்லை என்றும் அந்த பணியை செய்து தர மன்னரே வேலாயுத பணிக்கரை அழைக்க மன்னருக்காக காயங்குளம் கொச்சுன்னியையும் அரசவையில் இருக்கும் துரோகிகளையும் அடையாளம் காட்டுகிறார்.
மானம் காத்த மாவீரன்
ஆடை அணியக் கூடாது என பெண்களின் கச்சைகளை அவிழ்த்து எரியும் காட்சிகளில் நங்கேலி போராட்டம் செய்ய, அவளது ஆடையை அவிழ்த்து எரியும் போது அங்கே வந்து சிற்றரசர்களின் ஆட்களை அடித்து விரட்டும் காட்சிகளும், பெண்கள் மார்பை மறைக்க வரி செலுத்த தேவையில்லை என போராட்டத்தை எழுப்பும் காட்சிகள், தாழ்த்தப்பட்டவர்கள் கதகளி பார்க்க கூடாது என சதி செய்யும் போது, அந்த கோயிலுக்கே தேவையானதை செய்கிறேன் எனக் கூறி தம்முடைய ஆட்களை கதகளியை பார்க்கச் செய்யும் காட்சிகள் என மானம் காத்த மாவீரனாகவே சிஜு வில்சன் நடித்திருக்கிறார்.
மார்பை வெட்டி வைக்கும் காட்சி
படம் முழுக்க பல இடங்களில் பெண்களின் அரை நிர்வாண காட்சிகள் அப்படியே இடம்பெற்றுள்ளன. சில பிளர்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வந்த இந்த படத்தை நெட்டிசன்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வேலாயுத பனிக்கருக்கு இளநீரில் விஷம் கலந்து கொடுத்து சூழ்ச்சியால் கொன்று விட, நங்கேலியிடம் வரி வசூலிக்க வருகின்றனர். அப்போது தான் தனது மார்பகங்களை வெட்டி இலையில் போட்டு இதோ வரி என உயிரிழக்கும் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டு இருப்பதற்காகவே இயக்குநரை பாராட்டலாம். தீண்டாமைக்கு எதிராக எளிய மக்கள் நடத்திய போராட்டங்கள் இந்த படத்தில் காட்டப்பட்டு இருந்தாலும், படத்தின் நீளம் மற்றும் நங்கேலியின் கதையை குறைத்து விட்டு வேலாயுத பணிக்கரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது படத்திற்கு மைனஸ் ஆக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











