OG Review: ஓஜி விமர்சனம்.. பவன் கல்யாண் பக்கா மாஸ்.. ஆனால், அதுமட்டும் போதுமா பாஸ்?
சென்னை: இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'தே கால் ஹிம் OG' திரைப்படம், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் திரைப்படம், ஜப்பானிய பின்னணியுடன் சில தேவையற்ற அம்சங்களை கொண்டிருந்தாலும், பவன் கல்யாணின் மாஸ் காட்சிகளால் தூக்கி நிறுத்தப்படுகிறது.
பவன் கல்யாணின் மாஸ் பர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்க்ரீன் பிரெசன்ஸ் ஓஜி படத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாற்றியுள்ளது. ஆனால், இயக்குநர் சுஜித் சாஹோ படத்தின் தோல்வி மூலம் கற்ற பாடத்தை சரியாக பயன்படுத்தாமல் மீண்டும் அதே தவறை திரையில் செய்து இருப்பது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

பவன் கல்யாண், ஹிம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இங்கே பார்க்கலாம் வாங்க..
ஓஜி கதை: 'தே கால் ஹிம் OG' திரைப்படம் 1940களில் ஜப்பானில் ஒரு சக்திவாய்ந்த சமுராய் கும்பல்களின் கதையுடன் தொடங்குகிறது. ஒரு உள் சண்டையில் பெரும்பாலானவர்கள் அழிக்கப்பட, 'OG' என்ற ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்கிறார். ஓஜாஸ் கம்பீரா (பவன் கல்யாண்) என்ற OG, மும்பையில் துறைமுகம் கட்ட விரும்பும் சத்யா தாதாவுடன் (பிரகாஷ் ராஜ்) ஒரு கப்பலில் பயணிக்கிறார்.
1970களில், சத்யா தாதா மற்றும் கீதா (ஸ்ரேயா ரெட்டி) ஆகியோர் மிராஜ்கர் (தேஜ் சப்ரு) மற்றும் அவரது குடும்பத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான மர்மமான சரக்கு கப்பல் ஒன்றையும், துறைமுகத்தையும் கைப்பற்ற மிராஜ்கர் விரும்புகிறார். இதற்கிடையில், சத்யா மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாவலரான ஓஜாஸ் கம்பீரா (பவன் கல்யாண்), ஒரு எதிர்பாராத சம்பவத்திற்குப் பிறகு மும்பையை விட்டு வெளியேறுகிறார். இது அதிகாரப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
பல ஆண்டுகள் கடந்து, இப்போது மும்பை மற்றும் சத்யாவுக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை ஓஜாஸ் கம்பீராவை நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து மும்பைக்கு மீண்டும் வரவழைக்கிறது. மும்பையை விட்டு வெளியேறிய பிறகு OG எங்கு வாழ்ந்தார்? சத்யாவிற்கு யார் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்? இக்கேள்விகளுக்கான பதிலே இந்த ஓஜி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: இயக்குநர் சுஜீத்தின் 'தே கால் ஹிம் OG' பவன் கல்யாண் மற்றும் அவரது ஈடு இணையற்ற ஆளுமைக்கு ஒரு ட்ரிப்யூட்டாக அமைந்துள்ளது. படம் சற்றும் தாமதிக்காமல் நேரடியாக அதிரடியில் இறங்குகிறது. பவன் கல்யாணின் அதிரடி இன்ட்ரோ காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. படத்தின் முதல் முப்பது நிமிடங்கள் தொடர்ச்சியான பில்டப் காட்சிகளால் நிரம்பி உள்ளன. தமன் இசையில் பவன் கல்யாண் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு மாஸ் விருந்து.
பவன் கல்யாணின் குறைக்கப்பட்ட திரை நேரமும், நீண்ட வசனங்கள் இல்லாததும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளால் ஈடுசெய்யப்படுகின்றன. மசாலா பொழுதுபோக்கு திரைப்படம் தற்போது ஒரு மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், 'தே கால் ஹிம் OG' போன்ற படங்கள், உறுதியுடன் இருந்தால் இன்னும் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்கின்றன. ரத்தம் சிந்தும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருந்தாலும், ஒருவன் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை ரசிகர்கள் ஏற்கின்றனர். இதுவே இதுபோன்ற படங்களை தொடர்ந்து கொடுக்க வைக்கின்றன.
பிளஸ்: 'தே கால் ஹிம் OG' சில அற்புதமான சண்டைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் இருந்தே ரத்தம் தெரிகிறது. கதை முன்னேற முன்னேற, மேலும் பல சண்டைக் காட்சிகள் உள்ளன. ஸ்டைலான ஓஜாஸ் கம்பீராவாக பவன் கல்யாண், கண்கவர் திரை ஆளுமையுடன் திகழ்கிறார். இம்ரான் ஹாஷ்மி, அவரது முக்கிய எதிரியாக வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். பிரகாஷ் ராஜ், தேஜ் சப்ரு, பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பிற துணை கதாபாத்திரங்கள் பவன் கல்யாணுக்கு பக்க பலமாக நடித்துள்ளனர். பவன் கல்யாணை தொடர்ந்து படத்துக்கு பெரிய பலம் என்றால் இசையமைப்பாளர் தமன் தான். எலிவேஷன் காட்சிகளில் பிஜிஎம் தெறிக்குது. ஒளிப்பதிவாளர்கள் ரவி. கே. சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க் தான் படத்தின் கதை பெரிதாக இல்லை என்றாலும் பார்க்க வைக்கிறது. அர்ஜுன் தாஸுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஃபிளாஷ்பேக் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் பாதியை சகித்துக்கொள்ள உதவுகிறது.

மைனஸ்: முதல் பாதி மும்பையின் அண்டர்வேர்ல்ட் மற்றும் ஓமி பாவு (இம்ரான் ஹாஷ்மி) உடனான மோதல் என பயணிக்கிறது. கதை கணிக்கக்கூடியதாக இருந்தாலும், ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓகே ரகம் தான். இருப்பினும், இரண்டாம் பாதி, குறிப்பாக கிளைமாக்ஸை நோக்கிச் செல்லும்போது சறுக்கலை சந்திக்கிறது. இது ஒரு ரசிகர்களுக்கான திரைப்படம் என்பதால், லாஜிக் ஒரு முன்னுரிமையாக இருக்காது. ஆனால், குழந்தை கடத்தல் அல்லது மனைவி கொலை போன்ற பழைய கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம்.
இயக்குநர் சுஜீத், ஓஜாஸ் கம்பீரா கதாபாத்திரத்தில் காட்டிய கவனமும், கிளைமாக்ஸுக்கு முந்தைய ஜானி இணைப்பு, படம் சறுக்கலை சந்தித்த பிறகு மீண்டும் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனால், எமோஷனல் கனெக்ட் சரியாக இல்லாதது, பிரியங்கா மோகனின் காட்சிகள் என படம் நிலை தடுமாறுகிறது. பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ட்ரீட் என்றாலும், அனைவருக்கான ஓஜி படமாக இந்த ஓஜி இல்லாமல் ஓகே படமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











