Peddi Review: பெத்தி விமர்சனம்.. கிளைமேக்ஸில் கண்கலங்க வைக்கும் ராம்சரண்.. படம் எப்படி இருக்கு?
சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்துக்கு தனது பின்னணி இசையால் ஏ.ஆர். ரஹ்மான் உயிர் கொடுத்துள்ளார்.
லப்பர் பந்து, பைசன் என 2 படங்களை சேர்த்து பார்த்தது போல ஒரு அனுபவத்தை பெத்தி படம் கொடுத்துள்ளது. மலைகிராமத்தில் பிறந்த ஆட்டக்கூலியான பெத்தி தனது ஊருக்கான அடையாளத்தையும் ரயிலையும் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதை கடைசி வரை பரபரப்பாக கொண்டு சென்று ராம் சரணின் நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
18 ஆயிரம் கிராமங்கள் இந்தியாவில் அடையாளம் இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்தும் வசனம் தான் படத்தின் ஒட்டுமொத்த உயிர்நாடியாக உள்ளது.

பெத்தி கதை: விஜயநகரம் எனும் ஊரை தாண்டி மலை கிராமத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சுமர் 1800க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அந்த மலையை தாண்டி ரயில் சென்றாலும் அந்த ஊரில் அது நிற்காத நிலையில், ஒத்தையடி பாதையில் பல கிலோ மீட்டர் நடந்தே மக்கள் வேலைக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது. கூலி கொடுத்தால் யாருக்காகவும் ஆடக்கூடிய ஆட்டக் கூலியாக அறிமுகமாகிறார் பெத்தி (ராம் சரண்).
கிரிக்கெட் ஆட்டத்தில் அசைக்க முடியாத நபராக விளங்கினாலும் சாதிய பிரச்னை அவரது அடையாளத்தை அசிங்கப்படுத்த அங்கிருந்து குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் அவரை வரவழைக்கிறது. அதற்கு காரணமாக அப்பளசூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெகபதி பாபுவிற்கு நேரும் சம்பவமும் வழிகாட்டுகிறது. எப்படியாவது குஸ்தியில் தேசிய சாம்பியனாக மாறி தனது ஊருக்கு அடையாளத்தை பெற்றுத் தர போராடும் பெத்திக்கு கிளைமேக்ஸ் நெருக்கத்தில் என்ன நடக்கிறது. இனிமேல் விளையாடவே முடியாத சூழல் உருவாக அதன் பின்னர் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பது தான் பெத்தி படத்தின் கதை.

பிளஸ்: ராம்சரண் இந்த படத்துக்காக தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் போட்டுள்ளார் என்பது முதல் சீனில் இருந்து கடைசி ஃபிரேம் வரை தெளிவாக தெரிகிறது. ராம் சரணை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு பெரிய பிளஸ் ஆக உள்ளது. ரத்னவேலு மலை கிராமத்தையும், அந்த ரயில் காட்சிகளையும் ராம் சரண் கிரிக்கெட் விளையாடுவது, குஸ்தி போடுவது, கிளைமேக்ஸில் ஓடும் காட்சிகள் என தனது கேமராவில் படம் பிடித்த விதம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. எடிட்டர் நவீன் நூலி மல்யுத்தத்தில் கிரிக்கெட்டை ராம் சரண் மிக்ஸ் செய்து ஆடும் காட்சிகளை எடிட் செய்த விதம் பாராட்ட வைக்கிறது. கிளைமேக்ஸில் டைரக்டர் எடுத்துக் கொண்ட ஸ்போர்ட்ஸ் மற்றும் ராம் சரண் அதற்காக மெனக்கெட்டது தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது.
மைனஸ்: படத்தின் கதை ரொம்பவே வலிமையானதாக இருந்தாலும், முதல் பாதியில் ஹீரோயின் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகளும், அவரது அனுமதி இல்லாமல் உதட்டில் முத்தம் கொடுக்கும் இடமும் படத்திற்கு சற்றே பின்னடைவை தருகிறது. காதல் காட்சிகளுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காமல், ராம் சரணின் விளையாட்டையும் அவரது போராட்டத்தையும் அதன் பின்னர் முழுக்க முழுக்க கவனம் செலுத்திய இடத்தில் படம் தப்பித்துக் கொள்கிறது. கஷ்டப்பட்டு வரும் நபர்கள் தான் வாழ்வில் சாதனைகளை படைக்க முடியும் என்பதை படம் ரத்தமும் சதையுமாக சொல்லியுள்ள நிலையில், கண்டிப்பாக ராம் சரணுக்கு இதுவொரு பிளாக்பஸ்டர் படமாகவே மாறும்.


Click it and Unblock the Notifications