twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Peranbu Review: “உங்களுக்கு கிடைச்சது எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை தெரியுமா?”... 'பேரன்பு' விமர்சனம்!

    சக மனிதர்களுக்கு இடையிலான அன்பைக் கொண்டாடும் படம் ராமின் 'பேரன்பு'.

    |

    Recommended Video

    பேரன்பு பார்த்து அசந்துபோன ரசிகர்கள்- வீடியோ

    Rating:
    4.5/5
    Star Cast: மம்முட்டி, அஞ்சலி, பேபி சாதனா, சமுத்திரக்கனி, பி எல் தேனப்பன்
    Director: ராம்

    சென்னை : இயற்கையின் கொடூரத்துக்கு சாட்சியாக நிற்கும் ஒரு அப்பா - மகளின் வாழ்வின் வழியே, நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது ராமின் 'பேரன்பு'.

    'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்' எனும் மம்மூட்டியின் வசனத்துடன் தொடங்குகிறது படம். இயற்கையின் வெறுப்பு, அதிசயம், சுதந்திரம் என பத்து அத்தியாயங்களாக விரிகின்றன காட்சிகள்.

    Peranbu movie review

    மனைவி பிரிந்து சென்றுவிட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பதின் வயது மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு மம்மூட்டிக்கு (அமுதவன்) ஏற்படுகிறது. சொந்தபந்தங்கள், அக்கம் பக்கத்து வீட்டாரின் பிடுங்கல்களினால் பாப்பாவை (தங்கமீன்கள் சாதனா) அழைத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஓர் இடத்துக்கு இடம்பெயர்கிறார். அங்கு இயற்கையின் அற்புதங்களைக் காண்கிறார். தன்னை வெறுக்கும் மகளின் பாசம் தந்தைக்கு கிடைக்கிறது. ஆனால் நிறைய சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அதன் வழியே பல உணர்வுகளையும், வாழ்வின் யதார்த்தங்களையும் நம்முள் கடத்தி பயணிக்கிறது படம்.

    இயற்கையின் கொடூரத்திற்கான சாட்சி அமுதவனும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகள் பாப்பாவும். இவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும் போது நாம் எந்தளவுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வை வாழுகின்றோம் என்பதை உணர்த்துகிறது பேரன்பு. ஆனால், பல இடங்களில் அமுதவன் போன்ற பெற்றோர்களை சமுதாயமும் என்ற முகமூடியில் நாமும் எந்தளவுக்கு காயப்படுத்துகிறோம். இதை நினைத்துப் பார்த்து நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி வர வேண்டும். இயற்கையின் கொடூரமான முனையில் ஆரம்பித்து, 'பேரன்பு' எனும் மற்றொரு முனையில் படத்தை இணைத்திருக்கிறார் இயக்குனர் ராம்.

    இப்படிப்பட்ட படத்தை ஒரு அசாத்தியமான இயக்குநரால்தான் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ராம். எல்லோராலும் யோசிக்க முடியாத மிக அரிதான கதை இது. ராமின் படங்கள் அனைத்துமே தனித்துவமானவை. அதன் உச்சம் தான் பேரன்பு. வாழ்வின் கொடூரங்களை இவ்வளவு அழகியலோடு வேறு எந்த படமும் இதுவரை சொன்னதில்லை. கதாபாத்திரங்களின் மீது பார்வையாளர்களுக்கு அதீதி பரிவு ஏற்பட்டுவிடாமல், வாழ்க்கையை நாம் அணுகும் முறையை மாற்ற நிறைத்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

    Peranbu movie review

    ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்துவிட்டு, அனைவரையும் சமமாய் பாவிக்கும் இயற்கையின் முரண் குறித்து அழகாய் பேசுகிறது படம். கோபம், பொறாமை, குரோதம், எரிச்சல், வருத்தம், இயலாமை என நம் வாழ்வை சிதைக்கும் எண்ணற்ற விஷயங்களை கடந்து, நிம்மதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் தருகிறது பேரன்பு.

    தன்னை ஒரு பெண்ணாக, தாயாக உணரும் ஒரு தந்தையின் கதையில் மம்மூட்டி. இவரைத் தவிர வேறு யாராலும் இந்த படத்திற்கு இத்தனை நியாயம் செய்திருக்க முடியாது. வயது வந்த ஒரு நோயாளி மகளை பராமரிப்பதில் ஒரு ஆணுக்கு இருக்கும் சங்கடங்களை, தவிப்புகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார். ப்ளீஸ் மம்முக்கா, அடிக்கடி தமிழ் படம் பண்ணுங்க.

    தங்கமீன்களில் பார்த்த வாயாடி செல்லம்மாவா இது என அசர வைக்கிறார் இந்தக் குட்டி தேவதை சாதனா. உடல்மொழி, கண்ணசைவு, பேச்சு, நடை என எல்லாவற்றிலும் தன்னை வருத்திக்கொண்டு, பாப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த படமும் நிச்சயம் அவருக்கு விருதைப் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    Peranbu movie review

    இயற்கையின் அதிசயமாக வந்து, ஆபத்தாக மாறி, புரியாத புதிராக மாறும் விஜயலட்சுமியாக அஞ்சலி. இதுதாங்க நாங்க பார்க்க நினைக்கிற அஞ்சலி. இத்தனை திறமையான நடிகையை தமிழ் சினிமா இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆசையும். சபாஷ் அஞ்சலி.

    இயற்கையின் முடிவற்ற வினோதங்களில் ஒன்றாக திருநங்கை அஞ்சலி அமீர். மீரா பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி போகிறார். ஒரு நடிகர் திருநங்கையாக நடித்து, அவர்களின் வலியையும், உணர்வுகளையும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதை காட்டிலும், ஒரு நிஜ திருநங்கையே தான் அனுபவிக்கும் வலியையும், தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்? அதைச் சரியாகச் செய்திருக்கிறார் அஞ்சலி அமீர். துணிந்து இப்படி ஒரு விசயத்தை செய்து காட்டியதற்காக ராமை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

    Peranbu movie review

    ஒரு காட்சியில் கூட முகம் காட்டாவிட்டாலும், நம் மனதில் தனது நியாயத்தை தெளிவாக விட்டுச் செல்கிறார் பாப்பாவின் அம்மா. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை 11 வருடங்கள் கணவரின் நேரடி துணை இல்லாமல் வளர்த்தவர், ஒரு கட்டத்தில் மனதால் விரக்தியடைந்து மீதி வாழ்க்கையைத் தனக்காக வாழ வேண்டும் என முடிவெடுக்கிறார். இதை தன் கணவருக்கு தரும் தண்டனையாகவோ, மகளைப் பராமரிக்கத் தவறும் தாயாகவோ பார்க்காமல் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக பார்க்கலாம். இப்படிப்பட்ட புரிதல் ஆண்களுக்கு இருந்தாலே நிச்சயம் சமுதாயத்தில் அபிராமிகள் உருவாக மாட்டார்கள் என நம்பலாம். இதை திரைக்கதையில் தெளிவாக காட்டியிருப்பதற்காக நிச்சயம் பாராட்டலாம்.

    இப்படியாக படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் பாரா பாராவாக எழுதலாம். அந்தளவிற்கு அவர்கள் நம்மை ஆட்கொள்கிறார்கள். இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மனவளர்ச்சி குன்றிய பையனின் அப்பா கதாபாத்திரமும், அவர் பேசும் கருத்துக்களும் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.

    ராம் படம் என்றாலே யுவனுக்கு ஸ்பெஷல் தான் போலும். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டு ஆத்மார்த்தமாக இருக்கிறது. 'அன்பே அன்பின் அத்தனையும் நீயே' பாடல் இன்னொரு ஆனந்த யாழை. படம் வெளியானதும் அனைவரது வாயிலும் இப்பாடல் தான் முணுமுணுக்கப்பட போகிறது.

    Peranbu movie review

    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை படத்தைப் போலவே, இப்படத்திலும் இயற்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும், அழகோவியமாக திரையில் தீட்டியிருக்கிறார். பனி படர்ந்த கொடைக்கானல் மலையாகட்டும், சின்னஞ்சிறிய லாட்ஜ் அறையாகட்டும், படம் முழுவதுமே விஷூவல் ட்ரீட்டாக இருக்கிறது. எந்த அவசரமும் இல்லாமல், நிறுத்தி நிதானித்து எடிட் செய்திருக்கிறார் சூர்ய பிரதாபன். அதேசமயம் கலைப்படம் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்திவிடாமல் சாமர்த்தியமாக கத்தரித்திருக்கிறார்.

    இந்த படத்தை தயாரித்ததற்காக ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிமிஸ் பி.எல்.தேனப்பனுக்கு தனி பாராட்டுகள். இதுபோன்ற படங்கள் தமிழில் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போது தான் உலக அரங்கில் தமிழ் சினிமா ஒளிரும்.

    படத்தில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் குறித்து விவாதங்கள் எழலாம். சில கலாச்சார காப்பாளர்கள் சண்டைக்கு வரலாம். படத்திற்கு எதிராக போர் தொடங்கலாம். ஆனால் வாழ்வின் யதார்த்தம் இது தான் என்பதை புரிந்துகொண்டவர்கள் நிச்சயம் பேரன்பை கொண்டாடுவார்கள்.

    பெண் துணை இல்லாமல் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் ஒரு மனிதன், இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. தன் குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை என்பதை சரியாக உணர்ந்து செயல்படுவது தான் தந்தையின் கடமை என்பதை சரியாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ராம். படத்தில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களை, 'இப்படியும் ஒரு அப்பாவா' என சற்று அதிர்ச்சியாக்கலாம், ஆச்சர்யப் படுத்தலாம், ஏக்கப்பட வைக்கலாம்.

    ஆனால் இயக்குநர் இப்படத்தின் மூலம் நமக்கு சொல்ல வருவதெல்லாம், 'மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என்பது தான். அவர்களுக்காக சில நிமிடங்கள் பரிதாபப்படுவதோடு நமது வேலை முடிந்து விடுவதில்லை, அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த அடிகளுக்கு உறுதுணையாக இருப்பது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி.

    அதோடு, முக்கியமாக இப்படிப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றோ, நாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றோ யாரும் கருத வேண்டியதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் மனதிலும் ஏகப்பட்ட சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்களின் கஷ்டங்களுக்கு முன்னால் இருகோடுகள் தத்துவத்தில் நமது கஷ்டங்களை சிறியதாக்கிக் கொண்டு நமது வாழ்வைக் கொண்டாட வேண்டும் என்பதைத் தான் அழுத்தமாகச் சொல்கிறது இந்தப் படம்.

    படத்தின் எந்தவொரு காட்சியிலும் ரசிகர்களை கண் கலங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் முன்னிறுத்தாமல், இப்படிப்பட்ட குழந்தை மற்றும் அவர்களின் பெற்றோர் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் தெளிவாக திரைக்கதையாக்கி இருக்கிறார் ராம். இது குழந்தைகளுக்கான படம் அல்ல, குழந்தைகள் பற்றிய பெற்றவர்களுக்கான பாடம்.

    நிச்சயம் நாமும், 'பேரன்பை'க் கொண்டாடலாம்!

    English summary
    Ram's Peranbu starring Mamooty, Anjali, Sadhana is lead roles is a movie celebrating the love amoung humans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X