பெரியார் - விமர்சனம்

By Staff

பகுத்தறிவை போதித்த பகலவன் பெரியாரின் வாழ்க்கை சரிதத்தின் சில பக்கங்களைப் புரட்டி, படமாக்கியுள்ளார் இயக்குநர் ஞானராஜசேகரன்.

தமிழர்கள் பற்றிப் பேசும்போது சில விஷயங்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதில் ஒருவர்தான் பெரியார். ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற இயற்பெயரை விட பெரியார் என்றுதான் இந்த வெண்தாடி வேந்தர் தமிழர்களால் அறியப்படுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும், அவர்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், அறியாமை அழிய வேண்டும் என போராடியவர், பாடுபட்டவர்.

சமூகத்தில் நிலவிய அவலங்களையும், முட்டாள்தனமான பழக்க வழக்கங்களையும் கண்டு கோபம் கொண்டு வெகுண்டெழுந்து போராடினார் பெரியார்.

தனது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சமூக சீர்திருத்தத்திற்காக உழைத்தவர் பெரியார். உடல் நலிந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் சமூகத்தில் நலிவடைந்த நிலையில் இருப்பவர்களுக்காக பாடுபட்டார்.

அப்படிப்பட்ட பெரியாரை, இந்தக் காலத்து பீட்சா சமூகத்தினரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது சந்தேகம்தான். அவர்களுக்கு, பெரியாரை அடையாளம் காட்டவும், அறிமுகப்படுத்தும் நோக்கிலும் எடுக்கப்பட்டுள்ள படம்தான் பெரியார்.

பாரதியின் சரிதத்தை மிக அழகாக, ஒரு கவிதை போல சொல்லிய ஞான ராஜசேகரன்தான் பெரியாரையும் படமாக வடித்துள்ளார். பெரியார் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை மிகவும் கவனத்துடன் கோர்த்து தமிழ் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்.

பெரியாருடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பதால் எந்தவித சர்ச்சைக்குள்ளும் சிக்கி விடாதபடி மிகவும் கவனத்துடன் படத்தின் திரைக்கதையை கையாண்டுள்ளார் ஞானராஜசேகரன்.

பெரியாரின் வாழ்க்கை சரிதம் பெரும்பாலானோருக்குத் தெரியும் என்பதால் இந்தப் படத்திற்கு தனிப்பட்ட கதை என்று எதுவும் தேவைப்படவில்லை.

ஈரோட்டைச் சேர்ந்த வர்த்தகர் வெங்கடப்ப நாயக்கர் குடும்பத்தில் பிறந்தவர் பெரியார். 19 வயது முதலே தனது பொது வாழ்க்கையைத் தொடங்கி விட்டவர் பெரியார்.

தாங்கள்தான் உயரந்தவர்கள் என்ற ஆதிக்க மனோபாவத்தை பிராமணர்கள் விட வேண்டும். மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக மதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார்.

தனது உயிர் பிரியும்போது பெரியார் இப்படிச் சொன்னாராம். நிறைவேறாத கனவை விட்டு விட்டு இந்த உலகத்திலிருந்து விடைபெறுகிறேன். யாருடனும் சண்டை போடவோ அல்லது கடவுள் என்ற பெயரில் வடிக்கப்பட்ட கற்களை உடைக்கவோ இந்த உலகுக்கு நான் வரவில்லை.

சூத்திரர்கள், பஞ்சமர்கள் என பெயரிடப்பட்ட எனது மக்களை அப்படியே, அதே நிலையில் விட்டு விட்டு போவதுதான் எனக்கு வேதனையாக உள்ளது.

இது ஒழிய வேண்டும். எனது மக்களும் சமுதாய சுதந்திரத்துடன் வாழ வேண்டும். அனைத்து உரிமைகளையும் அவர்களும் அனுபவிக்க வேண்டும். அந்த நாள்தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்றார் பெரியார்.

பெரியார் படத்தைப் பார்க்க வந்தவர்கள், முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அப்படியே இருக்கையில் உறைந்து போய் அந்த உன்னத மனிதரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உணர்வால் புரிந்து உள்ளம் நெகிழ்ந்து போய் நிற்பதைக் காண முடிந்தது.

பெரியாராக நடித்தார் என்பதை விட அப்படியே பெரியாராக மாறிப் போய் விட்டார் என்றுதான் சத்யராஜை சொல்ல வேண்டும்.

ஆரம்பக் காட்சிகளில் பெரியாராக சத்யராஜை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் வெண்தாடியும், கையில் தடியுமாக சத்யராஜ் வருகையில், பெரியாரை நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெரியார் வேடத்துக்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளார் சத்யராஜ்.

மேலும், சத்யராஜும் கொங்கு மண்டலத்துக்காரர் என்பதால் வசனங்களைப் பேசுவதிலும் பெரியார் வேடத்துக்குப் படு பொருத்தமாக உள்ளது. பெரியாரே நேரில் அமர்ந்து பேசுவது போல அப்படியே தத்ரூபமாக பேசியுள்ளார் சத்யராஜ். அவருக்கு நன்கு மிமிக்ரி பேச வரும் என்பதால் இது அவருக்கு உதவியுள்ளது.

வேதம் புதிது படத்துக்குப் பிறகு சத்யராஜ் நடித்துள்ள நல்ல படம் பெரியார் என்று தாராளமாக சொல்லலாம். இந்த வேடத்துக்காக சத்யராஜுக்கு தேசிய விருது கிடைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெரியாரின் முதல் மனைவி நாகம்மையாக வருகிறார் ஜோதிர்மயி. அவரை இப்படி ஒரு வித்தியாசமான வேடத்தில் பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. சிறப்பாக செய்துள்ளார் ஜோதிர்மயி. மணியம்மையாக வரும் குஷ்பு அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறார்.

அண்ணாவாக வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேண்லி, ராஜாஜியாக வரும் அரிதிக் குமார் ஆகியோரும் நிறைவாக செய்துள்ளனர். ராஜாஜிக்கும், பெரியாருக்கும் இடையிலான நட்பை படு அழகாக சொல்லியுள்ளனர்.

பெரியார் மீது மகாத்மா காந்தி கொண்டிருந்த மரியாதையயும் படு நிறைவாக காட்டியுள்ளனர். படத்தில் பல காட்சிகள் நம்மை பெரியார் காலத்துக்குக் கூட்டிச் செல்வதாக உள்ளது.

வித்யாசாகரின் இசையில் பெரிதாக விசேஷம் இல்லை. இசையில் இன்னும் கொஞ்சம் உயிர்ப்பு இருந்திருந்தால் ஈர்ப்பும் கூடிப் போயிருக்கும். தங்கர் பச்சானின் கேமரா கதையுடன் கூடவே ஒட்டி உறவாடி, நம்மைக் கவர்ந்துள்ளது.

வைரமுத்துவின் பாடல் வரிகளில் பெரியாரிடம் பீரிட்டு ஓடுகிறது. பெரியார் கொள்கைகளை அப்படியே தனது வரிகளில் கொண்டு வந்து அசத்தியுள்ளார் வைரமுத்து.

அணில் முதுகில் ராமன் போட்டது கோடுகள் என்றால்சீதையின் முதுகிலும் கோடுகள் இல்லையா அப்படி இல்லைன்னா சீதையை ராமன் தொடவே இல்லையா என்ற வரிகளில் சர்ச்சைக் கருத்துக்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பகுத்தறிவு பட்டுத் தெறிக்கிறது.

இது வழக்கமான சினிமா கிடையாது, காலங்கள் கடந்தும் இன்னும் தனது கொள்கைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும், இன்றும் தேவைப்படும் ஒரு மகத்தான மனிதரின் ஒரு பக்கத்தைக் காட்டும் உணர்ச்சிக் காவியம் பெரியார்.

பெரியார் - மகாப் பெரியவர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X