பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்: என்ன இந்த பிரபலம் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே.. நம்பலாமா?
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அந்த படம் குறித்த முதல் விமர்சனத்தை ட்விட்டர் பிரபலம் ஒருவர் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புனைவு நாவலை படமாக்க பல பிரபலங்களும் முயற்சித்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அந்த கனவை நனவாக்கி உள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் கதை என்ன?: சுந்தரச் சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன் இருவரும் வெவ்வேறு இடங்களில் போர் புரிந்து வரும் நிலையில், ஆட்சிக்குள் நடக்கும் வஞ்சக அரசியல் மற்றும் நந்தினியின் பழிவாங்கும் படலங்கள் காரணமாக ஆதித்த கரிகாலன் கொல்லப்பட அருள்மொழி வர்மன் வசம் செல்லும் மணிமகுடத்தை அவர் ஏற்றாரா? இல்லையா? என்பது தான் இந்த பொன்னியின் செல்வன் நாவலின் பிரம்மாண்ட கதை.
இந்த கதையில் நண்பனாக வரும் வானர குல வீரர் வந்தியத்தேவன், அருள்மொழியின் அக்கா குந்தவையின் அரசியல் அறிவியல், பூங்குழலியின் உதவி, நந்தினி போன்ற உருவம் கொண்ட ஊமை ராணி என ஏகப்பட்ட திருப்புமுனைகளுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பொன்னியின் செல்வன் கதை அமைந்திருக்கும். 5 புத்தகத்தில் இருந்த கதையை 2 பாகங்களாக சுருக்கி எடுப்பதே சவாலான விஷயமாக இருந்து வந்த நிலையில், அதனை மணிரத்னம் முடிந்தவரை முதல் பாகத்தில் சாதித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் அந்த கதையை நிறைவு செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

500 கோடி வசூல்: பொன்னியின் செல்வன் முதல் பாகம் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆர்வத்துடன் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் தியேட்டருக்கு வந்த அந்த படத்தை கண்டு ரசித்தனர். சோழர்களின் கதை என்பதால் மற்ற மாநிலங்களில் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஓவர்சீஸில் வசூல் சக்கைப்போடு போட்டதாகவும் 500 கோடி வசூல் வந்ததாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பொன்னியின் செல்வன் படம் பாகுபலி அளவுக்கு இல்லை என ஏகப்பட்ட விமர்சனங்களும், பொன்னியின் செல்வன் கதை அளவுக்கு கூட அந்த படம் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்கள் மூலம் படத்தை விளாசித் தள்ளினர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழே இல்லை என்றும் எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே வெறுமனே பிரம்மாண்ட அரங்கிற்குள் நடந்த நாடகத்தை போலத்தான் படம் இருந்தது என்றும் விமர்சிக்கப்பட்டன.
First Review #PS2 :
— Umair Sandhu (@UmairSandu) April 25, 2023
Boring & Torture for Cinegoers ! Everything is so Fake in this movie. Skip it 🤮
⭐⭐ pic.twitter.com/s4vuR0G59P
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்: இந்நிலையில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் கூட ரசிகர்களை வெகுவாக கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வரும் நிலையில், ட்விட்டர் பிரபலம் உமைர் சந்து தான் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்து விட்டதாகவும் ரொம்ப போராகவும் டார்ச்சராகவும் இருக்கு.. எல்லாமே ஃபேக்கா இருக்கு.. படத்தை பார்க்காமல் தவிர்த்து விடுங்கள் என்றே கடுமையாக விமர்சித்து வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவும் இதே போன்ற நெகட்டிவ் விமர்சனத்தை உமைர் சந்து பதிவிட்டு இருந்தார். அப்போது இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் எந்த தியேட்டரில் படத்தை பார்த்தீங்க.. படம் இன்னும் சென்சாருக்கே அனுப்பவில்லையே என விளாசி இருந்தார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் என உமைர் சந்து படுமோசமாக விமர்சித்து பதிவிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் சுஹாசினி மேடம் இவர் மீது நடவடிக்கை எடுங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் உண்மையான ரிசல்ட் தெரிந்து விடும்!


Click it and Unblock the Notifications











