twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.5/5
    Star Cast: உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், ரா பார்த்திபன்
    Director: தளபதி பிரபு
    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், ரா பார்த்திபன், சூரி

    ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்

    இசை: டி இமான்

    தயாரிப்பு: தேனாண்டாள் பிலிம்ஸ்

    இயக்கம்: தளபதி பிரபு

    இயக்குநர்: சார்... வணக்கம்... நான் பொன்ராம சாரோட அஸிஸ்டன்ட். உங்களுக்காக ஒரு நல்ல கதை வச்சிருக்கேன்...

    உதயநிதி: அப்டியா... இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி ஒரு கதை இருந்தா பண்ணலாங்க...

    இயக்குநர்: அதுக்கென்ன... அதையே பண்ணிட்டாப் போச்சு...!

     Pothuvaaga Emmanasu Thangam review

    இந்தப் படம் தொடங்குவதற்கு முன் இயக்குநருக்கும் உதயநிதிக்கும் நடந்த உரையாடல் அநேகமாக இப்படித்தான் இருந்திருக்கும் போல!

    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நகலாக இந்தப் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தளபதி பிரபு. சிவகார்த்திகேயன், சத்யராஜ், திவ்யா மட்டும்தான் இல்லை... மற்ற அனைத்தும் அப்படியே வவாச!

    உதயநிதியும் சூரியும் நகமும் சதையும் போல நண்பர்கள். ஊருக்கு நல்லது செய்வதாகக் கூறிக் கொண்டு இவர்கள் செய்யும் அத்தனையும் வம்பில் முடிய, இவர்களை ஊரைவிட்டே துரத்த கிராமத்தினர் நாளை எதிர்ப்பார்க்கின்றனர். இந்த ஊர் விளங்கவே கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் செயல்படும் பெரும் பணக்காரர் பார்த்திபன். புகழ் போதைக்கு அடிமை. தங்கையைத் திருமணம் செய்துகொடுத்த ஊருக்காக அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்பவர். அவர் மகள் நிவேதா பெத்துராஜ். தங்கை வாழப் போன ஊருக்கே இவ்வளவு செய்கிறாரே... இவர் மகளைக் காதலித்து திருமணம் செய்தால், நம்ம ஊருக்கு எவ்வளவு செய்வார்? என யோசித்து நிவேதாவைக் காதலிக்கும் முயற்சியில் இறங்குகிறார் உதயநிதி. அது எளிதில் கைகூடியும் விடுகிறது. ஆனால் தன் கிரிமினல் மூளையால், உதயநிதியை ஊரை விட்டே துரத்துகிறார் பார்த்திபன். மகளின் காதலையும் உடைக்கிறார். உதயநிதி திரும்ப வந்தாரா... காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்.

     Pothuvaaga Emmanasu Thangam review

    காமெடி, ஆக்ஷனில் இன்னும் பல படிகள் உயர்ந்து வந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் மனிதன் மாதிரி ஒரு படம் பண்ணிவிட்டு, மீண்டும் இன்ட்ரோ பாட்டு, இரண்டு டூயட், காமெடி குத்தாட்டம் நாலு வருஷத்துக்கு முந்தைய ட்ரெண்டுக்கு திரும்பியிருப்பது தேவையா... வேறு ரூட் பிடிக்கலாமே!

    நிவேதா பெத்துராஜ் அழகிலும், இயல்பான நடிப்பிலும் மனசை அள்ளுகிறார்.

    பரோட்டா சூரிதான் படத்தின் முக்கிய ப்ளஸ். வேறு எதுவும் பெரிதாக இல்லாததால், சூரியின் நகைச்சுவையை மட்டுமே பெரிதாக சார்ந்திருக்கிறது திரைக்கதை. அவரும் ஏமாற்றவில்லை.

    கடைசியில் நல்லவனாகிவிடும் வில்லன் பார்த்திபன். அவருக்கே உரிய குறும்புகள், நக்கல் வசனங்களுடன் படம் முழுக்க. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர் செய்வதெல்லாம் எரிச்சலைக் கிளப்புகிறது. 'இந்தாளு எப்பய்யா நல்லவனா மாறப் போறாரு?' என பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு அந்த கேரக்டர் ஜவ்வாகிவிடுகிறது.

     Pothuvaaga Emmanasu Thangam review

    நிறைய துணைப் பாத்திரங்கள். அவர்களில் மயில்சாமி மட்டும் பளிச். அந்த ஊர்த் தலைவர் பாத்திரமும், பல் விளக்காத உதயநிதியின் எடுப்பு கேரக்டரும் சிரிக்க வைக்கிறார்கள்.

    பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு இது போதும் என்ற அளவுக்கு உள்ளது. இமானின் இசையில் பாடல்கள் ஒன்றும் பெரிதாக நிற்கவில்லை, பின்னணி இசைக்காக மெனக்கெடும் அளவுக்கு காட்சிகளும் இல்லை.

    எரிச்சலூட்டும் அளவுக்கு எந்தக் காட்சியும் இல்லை என்பதே ஒரு ஆறுதல்தான். அதற்காக ஒரு முறைப் பார்க்கலாம்.

    English summary
    Review of Udhayanidhi Stalin's Pothuvaaga Emmanasu Thangam movie..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X