Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
சென்னை: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அதிகளவு எண்ணிக்கையிலான ஸ்க்ரீன்களில் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் மட்டும் சுமார் 1400 ஸ்க்ரீன்கள், தமிழ்நாட்டில் 450, கர்நாடகாவில் 550, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 450க்கும் அதிகமான திரைகளில் ஆடுஜீவிதம் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே சிறப்புக் காட்சியை பார்த்து விட்டு படம் மலையாளத்தில் இருந்து ஒரு உலக சினிமா என கொண்டாடி தீர்த்துள்ளனர். இந்நிலையில், அந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொடுத்து வரும் விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..
16 ஆண்டுகால உழைப்பு: பிரபல எழுத்தாளர் பென்யாமின் கடந்த 2008ம் ஆண்டு எழுதிய 'Goat Days'நாவலை தழுவி 2010ம் ஆண்டு படத்தை உருவாக்க இயக்குநர் பிளெஸ்ஸி மற்றும் பிருத்விராஜ் திட்டமிட்டு பல ஆண்டுகள் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து, 16 வருட போராட்டத்திற்கு பிறகு ஆடுஜீவிதம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
என்ன கதை: நஜீப் எனும் மலையாளி வேலைக்காக சவுதி அரேபியா செல்கிறார். அவர் எதிர்பார்த்து சென்றது வேறு வேலை. ஆனால், அங்கே அவரது விருப்பத்திற்கு மாறாக பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி ஜீவித்து தப்பித்து வந்தார் என்பது தான் அந்த நாவலின் கதை. வலி நிறைந்த கதைகளை கொண்ட அந்த நாவலை அப்படியே தத்ரூபமாக படமாக்க பிளெஸ்ஸி மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் போராடியுள்ளனர்.
மலையாளத்தில் அடுத்து ஒரு தரமான படம்: இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு பொன்னான ஆண்டாகவே மாறியிருக்கிறது. பிரேமலு, பிரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படங்கள் அடுத்தடுத்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்று வரும் நிலையில், உலகத்தரமான படைப்பாக மலையாளிகள் உருவாக்கிய ஆடுஜீவிதம் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள நிலையில், கேரள மக்கள் காலையில் இருந்தே இந்த படத்தை கொண்டாடி படம் சூப்பர் என பதிவிட்டு வருகின்றனர்.
பிருத்விராஜ் மிரட்டல்: சியான் விக்ரம், சூர்யா உள்ளிட்ட திறமையான நடிகர்களே இந்த படத்தை கால்ஷீட் காரணமாக தவறவிட்ட நிலையில், அந்த படத்தை ஒப்புக் கொண்டு பல வருடங்கள் அதனுடன் பயணித்த பிருத்விராஜ் இந்த படத்துக்காக ஓடாக தேய்ந்த காட்சிகளை எல்லாம் பார்த்தால் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என ரசிகர்கள் பிருத்விராஜின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











