For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  புலி - விமர்சனம்

  By Shankar
  |

  -எஸ் ஷங்கர்

  Rating:
  3.0/5
  Star Cast: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன்
  Director: சிம்பு தேவன்

  நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு

  ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி)

  இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

  தயாரிப்பு: பிடி செல்வகுமார், ஷிபு தமீன்ஸ்

  இயக்கம்: சிம்பு தேவன்

  மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள்.

  இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் பிரபு. அந்தக் குழந்தைதான் விஜய்.

  Puli Review

  அதே ஊரைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் விஜய்க்கும் காதல். ஒரு டூயட் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணமான அன்றே ஸ்ருதியை தூக்கிக் கொண்டு போகின்றன(ர்) வேதாளங்கள். ஸ்ருதியை மீட்க வேதாளக் கோட்டைக்குப் போகிறார் விஜய்.

  சர்வ சக்தி படைத்த வேதாளங்களையும், மாய தந்திரங்கள் தெரிந்த அவர்களின் ராணி ஸ்ரீதேவியையும் எப்படி வெல்கிறார் விஜய்? விஜய் உண்மையில் யார்? என்பதெல்லாம் மீதிக் கதை.

  Puli Review

  ஆதியந்தமில்லாத ஒரு கற்பனை உலகில் கதை நடப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தில் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை வசனங்களாக்கியதில் படத்தின் அழுத்தம் அடிபட்டுப் போகிறது.

  படம் முழுக்க ஆட்டம் பாட்டு அதிரடி சண்டைகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் செட்டுகள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்தாலும், அவற்றை சுவாரஸ்யமாகத் தருவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் சிம்பு தேவன். பெருமளவு காட்சிகள் டல்லடித்தபடி நகர்கின்றன.

  Puli Review

  அந்த ஒற்றைக் கண் மனிதன் காரெக்டர் முழுக்க கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. படம் முழுக்க அத்தனை பாத்திரங்களும், அந்த கிராபிக்ஸ் கரும்புலி உள்பட ஆ என வாயைப் பிளந்து பல்லைக் காட்டியபடியே இருக்கிறார்கள். அல்லது தாவித் தாவி பறக்கிறார்கள். வேதாளங்களின் சக்தியாம் இதெல்லாம்!

  அதியுச்ச கற்பனைக் கதை என்று கூறி விஜய்யிடம் கால்ஷீட் வாங்கியவர்கள், அவரை வித்தியாசமாக தோன்ற, நடிக்க வைத்திருக்க வேண்டாமா? எல்லோரும் சடாமுடியுடன் இருக்க, விஜய்க்கு மட்டும் பக்காவாக சம்மர் கட்டிங். இப்படியெல்லாம் யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், இது லாஜிக்கே இல்லாத கற்பனை உலகம் என்று சொல்லிவிட்டார்கள் போலும்!

  சித்திரக் குள்ளர்கள், பேசும் பறவைகள், பெரும் அரக்கர்கள், மந்திர சக்தி படைத்த ஸ்ரீதேவி என சுவாரஸ்யப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், அவை ஜஸ்ட் லைக் தட் கடந்து போகின்றன.

  மிகப் பிரமாதமான ஆட்டத்துடன் அறிமுகமாகிறார் விஜய். மருதீரனாகவும் புலிவேந்தனாகவும் அவர் தன் பங்கை முழுமையாகச் செய்திருந்தாலும், அவரை இன்னும் சிறப்பாகக் காட்டியிருக்கலாம் இயக்குநர்.

  ஆனால் புலிவேந்தனாக வரும் விஜய் பாத்திரம், தன் மக்களுக்காக விஷம் குடித்து சாகும் தருணத்தில் நடிப்பு அபாரம். அவரது உதடுகள் கூட நடித்துள்ளன.

  ஸ்ருதியுடன் ரொமான்ஸ், ஹன்சிகாவுடன் கற்பனையில் ரொமான்ஸ் என அதில் குறை வைக்கவில்லை.

  Puli Review

  ஆனால் அவரது வசன உச்சரிப்பில் ரொம்பவே செயற்கைத்தனம். படம் முழுக்க தடுமாறித் தடுமாறி அவரைப் பேச வைத்திருப்பது என்ன மாதிரி ஸ்டைல் என்பதை சிம்பு தேவன்தான் விளக்க வேண்டும்.

  இரண்டு நாயகிகளுக்கும் பெரிய வேலையில்லை. ஆரம்பத்தில் 25 நிமிடங்களில் ஒரு டூயட் பாடிவிட்டு காணாமல் போகும் ஸ்ருதி, இடைவேளைக்குப் பின் மயக்க நிலையில் படுத்தவர், க்ளைமாக்ஸின் கடைசி நொடியில்தான் எழுகிறார். அவர் வேலை அவ்வளவுதான்.

  விஜய்யை ஒருதலையாகக் காதலித்து இரண்டு பாடல் பாடும் வேடம் ஹன்சிகாவுக்கு. ஆள் அம்சமாக இருக்கிறார்.. ஆனால் மேக்கப் முகத்தில் அடிக்கிறது!

  சில காட்சிகளில் ஸ்ரீதேவியைப் பார்க்க பயமாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் விஜய்யுடன் அவர் போடும் வாள்சண்டை பிரமிக்க வைக்கிறது.

  சுதீப்பை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். எப்போது பார்த்தாலும் அந்த உயரமான நாற்காலில் கோணலாக சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார். அரை பாடலுக்கு நடனமாடி, இரண்டு சண்டைகள் போட்டு செத்துப் போகிறார்.

  தம்பி ராமய்யாவுக்கு பச்சைத் தவளையை நக்கி வழி கேட்கும் பாத்திரம். பெரிதாக சிரிப்பு வரவில்லை. சத்யனும் அப்படியே. ஆனால் ஒரு காட்சியில் குபீரென சிரிப்பு கிளம்பும்.. படம் முழுக்க விஜய்யுடன் வரும் பேசும் பறவை பாவ விமோசனம் பெற்று எழும்.. அது கருணாஸாம்!

  பிரபு, விஜயகுமார், நரேன், ஜோ மல்லூரி என நடிகர் பட்டாளம் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

  எது செட், எது கிராபிக்ஸ், எது நிஜம் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி சிறப்பான கலையமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் செய்துள்ளனர். இதே அளவு அக்கறையை ஸ்க்ரிப்டில் காட்டியிருக்கலாம் இயக்குநர்.

  Puli Review

  பறவை முட்டையுடன், ஆற்றில் குழந்தை அடித்து வருதல், பெரிய அரண்மனையில் முதலைக் கறியுடன் வைக்கப்படும் பிரமாண்ட விருந்து, அதற்கான பின்னணி இசை, ஆமை துப்புதல் போன்றவையெல்லாம் ஏற்கெனவே வந்த சில படங்களின் காட்சிகளை நினைவூட்டுகின்றன.

  தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை உயிரோட்டமாக இல்லை.

  அத்தனை சுலபத்தில் கிடைக்காத விஜய் கால்ஷீட், முதல் நிலை தொழில்நுட்பக் கலைஞர்கள், கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, 'ச்சும்மா பூந்து விளையாடி' இருக்க வேண்டாமா சிம்பு தேவன்.

  English summary
  Vijay's Puli, a movie based on fantasy world is looking interest in bits and pieces and fails to impress the audience.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more