Raayan Review: ராயன் விமர்சனம்.. ஒய் திஸ் கொலவெறி தனுஷ்?.. 50வது படம் சூப்பரா? சொதப்பலா?
நடிகர்கள்: தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்: தனுஷ்
ரேட்டிங்:
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் அவரது 50வது படமாக வந்துள்ளது. ஹாலிவுட் லெவலுக்கு தனுஷ் சென்று வந்த பின்னரும் இன்னமும் அவர் கத்தியை கையில் இருந்து தூக்கிப் போடுவதாக இல்லை என்றே தெரிகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து தரமான சம்பவத்தை பண்ணியிருப்பார் என்று பார்த்தால், படம் முழுக்க வெறும் சம்பவங்களை மட்டுமே பண்ணிக் கொண்டு இருக்கிறார்.
தியேட்டரில் உள்ள ஆடியன்ஸை மட்டும் தான் தனுஷ் அந்த கம்பி போல இருக்கும் கத்தியால் குத்திக் கொல்லவில்லை அந்த அளவுக்கு ராயன் படம் முழுக்கவே ரத்தக்களறியாகத்தான் இருக்கிறது. ராவான படம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தளவுக்கு ராவான படத்தை தனுஷ் கொடுப்பார் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

புதுப்பேட்டை படத்தில் செல்வராகவன் படத்தை எப்படி செதுக்கியிருப்பார். ஒரு சண்டை வந்தால் எதற்கு வரவேண்டும், ஒரு கொலை விழுந்தால் எதற்கு விழ வேண்டும் என்றெல்லாம் இல்லை. கடைசி வரை அனைவரையும் கொன்றுக் கொண்டே இருக்கும் தனுஷின் ராயன் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ராயன் கதை: இளம் வயது காத்தவராயனின் (தனுஷ்) பெற்றோர்கள் சிறு வயதில் சந்தைக்கு போயிட்டு வருகிறோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திரும்பி வரவே இல்லை. தெரிந்த சாமியாரிடம் இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் அடைக்கலம் அடைகிறார். ஆனால், பெண் குழந்தையை விற்று பணம் பார்க்க அந்த சாமியார் நினைக்க அவரை போட்டுத் தள்ளிவிட்டு செல்வராகவனின் சரக்கு வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து விடுகிறார். மூத்த தம்பி சந்தீப் கிஷன் குடிகாரன், தூங்குமூஞ்சி, உதவாக்கரை அவருக்கு ஒரு காதலி அபர்ணா பாலமுரளி. 2வது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் தேர்தலில் நிற்கிறார் அங்கே அவருக்கும் பிரச்சனை. 3வது தங்கை துர்காவுக்கு (துஷாரா விஜயன்) திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார்.

இதற்கு இடையே துரை (சரவணன்), சேது (எஸ்.ஜே. சூர்யா) இடையே கேங் வார் ஏற்படுத்தி தனது பழிவாங்கும் படலத்தை போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜ் சைலன்ட்டாக செய்கிறார். தம்பிக்காக துரையை போட்டுத் தள்ளும் தனுஷ் சேதுவிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த ராயன் படத்தின் கதை.

கொலை, கொலை, கொலை: தனுஷை அமைதியாக ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை செய்யும் நபராக காட்டுகின்றனர். ஆனால், தனது குடும்பத்திற்கு ஏதாவது வந்தால் கொலை செய்யத் தயங்க மாட்டார். அவர் கையில் கத்தியை எடுத்தால் ஒவ்வொரு தலையாக உருண்டுக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரே தனுஷுக்கு எதிராக மாற படம் அய்யோ சாமி முடியலைப்பா என்கிற நிலைக்கு சென்று விடுகிறது.

பிளஸ்: ஏ.ஆர். ரஹ்மான் இசை மட்டுமே இந்த படத்திற்கு பெரிய ஆறுதல். அனைத்து பாடல்களும் பின்னணி இசையும் தான் படத்தை காப்பாற்றினால் காப்பாற்றும். தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் என யாருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளனர். கிளைமேக்ஸ் பாடல் அல்டிமேட். மற்ற கதாபாத்திரங்களை விட அண்ணன் செல்வராகவனுக்கு தனுஷ் செலுத்திய கவனம் படத்தில் ஹைலைட்டாக தெரிகிறது. செல்வராகவனின் நடிப்பு ஆரம்பத்தில் அடைக்கலம் கொடுப்பதில் இருந்து கடைசி வரை கைதட்டல்களை அள்ளுகிறது.

மைனஸ்: இயக்குநர் தனுஷ் மேக்கிங்கில் எடுத்துக் கொண்ட முனைப்பை கதை மற்றும் திரைக்கதை அமைக்க எடுத்துக்கொள்ளவே இல்லையா? என்கிற கேள்வி தான் எழுகிறது. தனுஷின் நடிப்பைக் கூட பெரிதாக பார்க்க முடியாத அளவுக்கு அவர் படம் முழுக்கவே சைலன்ட் கில்லராகவே நடித்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். மற்றபடி படத்தில் சண்டை மற்றும் கொடூரமாக நடக்கும் கொலைகள் மட்டுமே உள்ளன. தனுஷிடம் ரசிகர்கள் 50வது படத்தில் வித்தியசமான கதையை எதிர்பார்த்து போயிருந்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் அடைவார்கள்.
கடைசி வரை இந்த ராயனுக்கு நிம்மதி என்பதே கிடையாதா? அவருக்கான வாழ்க்கை என்பதே குடும்பம் என்று இருந்த நிலையில், அங்கேயும் பிரச்சனைகள் என துரோகத்தால் நிறைந்தது இந்த உலகம் என்பதை மட்டுமே சொல்ல வருகிறாரா தனுஷ்? என்பது தெரியவில்லை. ராயன் படத்தை மேக்கிங்கிற்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம். வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரம் எல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்டை வேஸ்ட் பண்ணி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எஸ்.ஜே. சூர்யா வடசென்னை ஸ்லாங் பேசுவதே காமெடியாகத்தான் உள்ளது. மொத்தத்தில் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்களா? என்று தெரியவில்லை. ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த படம் ட்ரீட்டாக இருக்கும்!


Click it and Unblock the Notifications











