Thaai Kizhavi Bayilwan Review: அறிவுரை சொல்ல தகுதியே இல்லாத ‘தாய்கிழவி‘.. பயில்வான் விமர்சனம்!
சென்னை: அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். மேலும், அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மக்கள் மனதில் நல்லவிமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது. இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
தாய்கிழவி: ராதிகா சரத்குமார் இந்த படத்தில் தாய் கிழவியாக பவுனு தாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 75 வயது கிழவியான இவர் வட்டிக்கு பணத்தை கொடுத்து சம்பாதித்து வருகிறார். சுருட்டு பிடிப்பது, சேட்டைகள் செய்வது என ஒரு ஜாலியான கிழவியாக இருக்கிறார். இவர், திடீரென மரண படுக்கையில் விழுந்து விடுவதால் அவரது 3 மகன்களும் கிழவி எப்போது சாவும் என்கிற எண்ணத்தில் இருக்கின்றனர். அப்போது தான் நகை வியாபாரி இளவரசு மூலமாக, பவுனுதாய் 160 சவரன் தங்க நகை வாங்கி சேர்த்து வைத்து இருக்கும் விஷயம் தெரியவருகிறது.

படத்தின் கதை: கோமா நிலையில் மரணப்படுக்கையில் இருக்கும் பவுனுதாயிடம் இதுபற்றி கேட்டால், அவரால் பதில் சொல்ல முடியதால், நகையை கண்டுபிடிக்க மகன்களும், மகள்களும் கடனை வாங்கி பவுனுதாயை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றுகின்றனர். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பவுனுதாய் நகை எங்கு இருக்கும் இடத்தை சொன்னாரா? நகையை யாருக்கு கொடுத்தார் என்பது தான் தாய் கிழவி படத்தின் மீதி கதை.
தகுதியானவரா?: கதை ஆரம்பிக்கும் போதும், கிளைமாக்ஸ் காட்சி வரை ராதிகா சரத்குமார் பவுனு தாயாக ஆட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் நடந்து வருவது, பாவனை செய்வது என அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கணவனால் நிராகரிக்கப்பட்ட மகளுக்கு மறுமணம் செய்து வைத்துவிட்டு தனது மூன்று மகன்களுக்கும் அறிவுரை கூறுகிறார். அதாவது பெண்கள் எப்பொழுதும் கணவனை நம்பி இருக்கக்கூடாது சுயமாக சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரையை சொல்வதற்கு ராதிகா சரத்குமார் தகுதியானவரா? அதாவது தாய்கிழவி படத்தில் நடித்த பவுனுதாய் தகுதியானவரா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தாய் கிழவி படத்தில் ராதிகா தனது மூன்று மகன்களையும் ஊதாரி மகன்களாக வளர்த்திருக்கிறார்.
ஆபாசமான பேச்சு: அதேபோல படத்தில் பல இடங்களில் ஆபாசமாக பேசுகிறார் பவுனு தாய். மருமகளிடம் அடிவாங்குகிறார். அதோடு மட்டுமல்லாமல் கணவனையும், மகன்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகிறார். எந்த கிழவியும் தன்னுடைய கணவனை தரக்குறைவாக பேச மாட்டார்கள். ஒரு சாதாரண பெண்ணை விட மோசமான தாய் கிழவியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. நடிப்பில் அசத்தி இருக்கிறார் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அறிவுரை சொல்வதற்கு தகுதி இல்லாதவர் இந்த தாய்க்கிழவி என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் தாய்க்கிழவி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











