Rail Review: ரயில் விமர்சனம்.. வடக்கர்களுக்கும் வயிறு இருக்கிறது.. அழுத்தமான கதை.. ஆனால்?
நடிகர்கள்: குங்குமராஜ் முத்துசாமி, பர்வைஸ் மெஹ்ரூ, வைரமாலா
இசை: எஸ்.ஜே. ஜனனி
இயக்கம்: பாஸ்கர் சக்தி
சென்னை: 'வடக்கன்' என்கிற தலைப்பில் உருவாக்கப்பட்ட படத்திற்கு கடைசி நேரத்தில் சென்சாரில் டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், பெரிய மன வலியுடன் தனது படத்தின் டைட்டிலை 'ரயில்' என இயக்குநர் பாஸ்கர் சக்தி மாற்றிக் கொண்டார். இன்று வெளியாகி உள்ள 'ரயில்' படம் கதை ரீதியாகவும் வசனங்கள் வாயிலாகவும் ரசிகர்களுக்கு வலுவான கதையை சொன்னாலும், மேக்கிங் ரீதியாகவும், சில லாஜிக் மிஸ்டேக்குகளும் பல இடங்களில் சோதித்து விடுகிறது.
மெட்டி ஒலி சீரியல் மற்றும் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு வசனம் எழுதிய பிரபல வசனகர்த்தாவான பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் இந்த 'ரயில்'.

அறிமுக நடிகர்களை கொண்டு நல்ல தரமான படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் பாதி கிணற்றை தாண்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு சில தடைகளால் பெரிய வெற்றியை படம் பெறுமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
'ரயில்' கதை: தமிழ்நாடு முழுவதும் வடமாநில தொழிலாளிகள் பல இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தேனியில் இந்த கதை நடக்கிறது. எலக்ட்ரீஷியன் முத்தையாவாக ஹீரோ குங்குமராஜ் நடித்துள்ளார். அவரது மனைவி செல்லம்மா கதாபாத்திரத்தில் வைரமாலா நடித்துள்ளார். ஹீரோவின் எதிர்வீட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர் சுனில் கதாபாத்திரத்தில் பர்வேஸ் மெஹ்ரூ நடித்துள்ளார். குடிபோதை தமிழ்நாட்டை எந்தளவுக்கு கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படத்தின் ஹீரோவே உதாரணமாக உள்ளார். குடி போதையால் இருக்கும் அவருக்கு வேலை கிடைக்காமல் போகிறது. ஆனால், வட மாநிலத்தவர் இங்கே வந்து வேலை செய்து சம்பாதிக்கிறார்களே என்கிற பொறாமை ஹீரோவுக்கும் வடமாநிலத்தவரான சுனில் கதாபாத்திரத்துக்கும் இடையே எந்தளவுக்கு விரோதத்தை வளர்க்கிறது. வடமாநிலத்தவரை கொல்லவே முயற்சிக்கும் கதையின் நாயகன் கடைசியில் என்ன ஆகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஹீரோ குங்குமராஜா தனது நண்பர் ரமேஷ் வைத்தியாவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் எல்லாம் ரசிக்கும் படியாக இருக்கிறது. அதே சமயம் வட மாநிலத்தவர்களை அவர் எதிர்க்கும் நோக்கம், வடமாநிலத்தவரான சுனிலுக்கும் செல்லம்மாவுக்கும் ஏற்படும் நட்பு ரீதியான உறவு என பல விஷயங்களை இயக்குநர் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆடுஜீவிதம் படத்தில் கேரளாவில் இருந்து சவுதிக்கு சம்பாதிக்க சென்று போராடி சொந்த ஊருக்கு வரும் புலம் பெயர்ந்த தொழிலாளரின் கதை பலரையும் உருக்கிய நிலையில், வயிற்று பிழைப்புக்காக ரயிலில் ஈசல் கூட்டமாக தினமும் படையெடுத்து வந்து குறைந்த கூலிக்கு எந்த வேலை வேண்டுமானால் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என போராடும் வடமாநிலத்தவர்களை ஏளனமாகவோ எதிரியாகவோ பார்க்கக் கூடாது என்பதை இயக்குநர் படத்தின் மூலம் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.
பிளஸ்: ரயில் படத்தின் வசனங்கள் மற்றும் கதை என அனைத்தும் கச்சிதமாகவே உள்ளன. பெரிதாக ரசிகர்களுக்கு பரீட்சையமில்லாத முகங்கள் என்றாலும் நடிகர்கள் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தி உள்ளனர். தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. ரமேஷ் வைத்தியா வரிகளில் "பூ பூக்குது" பாடல் ரசிக்கும்படி உள்ளது.
மைனஸ்: ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் ஒரே விஷயத்தில் சுற்றிக் கொண்டிருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிடுகிறது. குறைந்த சம்பளத்துக்கு வட மாநில ஆட்களை கொண்டு வரும் சூழலும் நிலவி வரும் நிலையில், குடிகாரர்களுக்கு மட்டுமில்லை, இங்கே தினமும் கடுமையாக உழைத்து வரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் வேலை பாதிக்கிறது என்பதை மறக்கடிக்கும் விதமாக காட்சிகள் உள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை எந்த வகையிலும் கவராது என்றே தெரிகிறது. அந்த விஷயத்தையும் இயக்குநர் சரி செய்திருந்தால் இந்த 'ரயில்' பயணம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றிருக்கும்.


Click it and Unblock the Notifications











