Peddi Public Review: ராம்சரணுக்கு ராஜயோகம்.. கவர்ச்சி குயின் ஜான்வி.. ’பெத்தி’ பப்ளிக் விமர்சனம்!
ஹைதராபாத்: இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம், 2026 ஜூன் 3 அன்று தெலுங்கில் ப்ரீமியர் காட்சி வெளியான நிலையில், டோலிவுட் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். வெங்கட சதிஷ் கிலாரு தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில், ஆர். ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் 3.5/5 நட்சத்திர மதிப்பளித்துள்ளனர். ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், திவ்யேந்து சர்மா, ஜெகபதி பாபு, உபேந்திர லிமாயே, கிருத்தி ஷெட்டி, ஜான் விஜய், ஸ்ருதி ஹாசன், ரவி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள உலகத் தொடர்பு அற்ற ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன் பெத்தி (ராம் சரண்). அங்கே வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலியாக வேலை செய்யும் அவனுக்கு, உயர் வகுப்பினர் காட்டும் சமூக, பொருளாதார பாகுபாடுகள் பெரும் வலியைத் தருகின்றன. ஆனால், அதைவிட, தனது ஊருக்கும், மக்களுக்கும் அங்கீகாரம் கிடையாது என்பது அவனை இன்னும் அதிகமாகப் பாதிக்கிறது.

அந்தப் பகுதியில் பணக்காரர்கள் நடத்தும் கிரிக்கெட் பந்தயங்களில் கூலியாகக் களமிறங்கும் பெத்தி, விரைவில் அசாத்திய திறமைகொண்ட கிரிக்கெட் வீரனாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இச்சூழலில், அப்பலசூரி (ஜெகபதி பாபு) என்ற தன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தன் ஊரின் நன்மைக்காகப் போராடி, தனது வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்.
அப்பலசூரிக்கு நேரும் அநீதி, பெத்தியின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைகிறது. கிரிக்கெட் விளையாட்டைக் கைவிட்ட அவன், கோழி ராம்மூர்த்தி நாயுடுவின் சீடரான கௌரி நாயுடுவிடம் (சிவராஜ் குமார்) குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்கிறான். ஆனால், விதியின் வழியால் குத்துச்சண்டையையும் கைவிட்டு, இறுதியில் தடகள வீரனாக மாறுகிறான். ராம்பூஜி (திவ்யேந்து) உடனான அவனது மோதலும் படத்தின் கதையாக உள்ளது என டோலிவுட்டில் படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் ஒலிம்பிக்கில் வெறும் இரண்டு பதக்கங்கள் மட்டுமே பெற்றது குறித்த மத்திய அமைச்சரின் அதிருப்தியுடன் படம் தொடங்குகிறது. விஜயநகரத்தில் நடக்கும் விளையாட்டு வீரர்கள் தேர்வும், உணர்வுபூர்வமான காட்சியுடன் வெளிப்படுகிறது. விளையாட்டுத் துறை அதிகாரி (போமன் இரானி) விஜயநகரம் வரும்போது பெத்தியின் சாதனைகள் அவர் கவனத்திற்கு வருகின்றன. பெத்தியின் வாழ்க்கைப் பின்னணியை ஃபிளாஷ்பேக்காக இயக்குநர் வழங்கியது பாராட்டத்தக்கது. முதல் பாதி திரைக்கதை சற்றே வழக்கமான வணிக அம்சங்களுடன் நகர்கிறது என்கின்றனர்.
ஜான்வி கபூரின் கவர்ச்சி நடிப்பும், கதாபாத்திர அறிமுகங்களும் முதல் பாதியின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்தாலும், அப்பலசூரி சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான இடைவேளைக் காட்சி பார்வையாளர்களை ஆழ்ந்த நெகிழ்ச்சிக்குள் ஆழ்த்துகிறது. முதல் பாதியில் இன்னும் கூடுதலான உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்திருந்தால், அது மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
இடைவேளைக்குப் பிந்தைய கதை மாற்றம், இயக்குநர் புச்சி பாபுவின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. பெத்தி கதாபாத்திரத்தை அவர் செதுக்கிய விதம், அதில் ராம் சரண் வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன. இரண்டாம் பாதியில் பெத்திக்கும், கௌரி நாயுடுவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. கடைசி 30 நிமிடங்கள் கதை மற்றும் காட்சிகளைக் கையாண்ட விதம் படத்தின் சிறப்பம்சமாக உள்ளது என படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தை போல பெத்தி உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ராம் சரண் தனது அப்பாவுடன் நடித்த ஆச்சார்யா மற்றும் ஷங்கர் இயக்கத்தில் நடித்த கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், பெத்தி படத்துக்கு ராம் சரண் போட்ட கடுமையான உழைப்புக்கு தக்க பலன் கிடைத்துள்ளது என ப்ரீமியர் காட்சிகள் மூலமாகவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பெத்தி படத்தின் முழு விமர்சனம் விரைவில் தமிழ் பிலிமிபீட்டில் வரவுள்ளது தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி.


Click it and Unblock the Notifications