Rana Naidu Review: அப்பாவை கொல்லத் துடிக்கும் மகன்.. அளவில்லா ஆபாசம்.. ராணா நாயுடு விமர்சனம்!
நடிகர்கள்: ராணா டகுபதி, வெங்கடேஷ், சுர்வின் சாவ்லா
இசை: சங்கீத் சித்தார்த்
இயக்கம்: கரண் அன்ஷுமான் மற்றும் சுபர்ன் வர்மா
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
சென்னை: டோலிவுட் நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் அவரது தாய் மாமாவான நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ராணா நாயுடு வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அதிக கெட்ட வார்த்தைகள், ஆபாசக் காட்சிகள், நிர்வாணம், புகையிலை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு உள்ளன என எச்சரிக்கை அறிவிப்பே மிக நீளமாக இந்த வெப்சீரிஸில் நீண்டு இருந்தாலும், இன்னும் கூட எச்சரிக்கையை பெருசா போட்டுருக்கலாம் என இந்த வெப்சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் தோன்றும் வகையில் ஆபாசத்தின் உச்சமாக ராணா நாயுடு உள்ளது.
கிளம்பிய எதிர்ப்புகளுக்கு ராணா டகுபதி அடுத்த படத்திற்கு குடும்ப ரசிகர்கள் வரவே மாட்டாங்க போல என பயந்து தற்போது மன்னிப்பே கேட்டுள்ளார். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ராணா நாயுடு வெப்சீரிஸின் விமர்சனத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..
ரீமேக் வெப்சீரிஸ்
Ray Donovan எனும் வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த ராணா நாயுடு. 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 82 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட இந்த வெப்சீரிஸை தைரியமாக நம்பி ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி இணைந்து நடித்துள்ளனர். ஆனால், இயக்குநர்கள் அதில் உள்ள ஆபாசக் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களுக்கு கொடுத்திருந்தால் ரசிகர்களை நிச்சயம் இந்த வெப்சீரிஸ் வெகுவாக கவர்ந்திருக்கும்.
என்ன கதை
பெரிய ஆட்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நபராக ராணா நாயுடு (ராணா டகுபதி) வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையான நாகா நாயுடு (வெங்கடேஷ்) 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெற்ற நிலையில், நல்லெண்ண அடிப்படையில் 15 ஆண்டுகளிலேயே சிறையில் இருந்து வெளியே வருகிறார். அப்பா மீது சிறு வயது முதலே கோபத்தில் இருக்கும் ராணா நாயுடு அப்பாவை கொல்லத் துடிக்கிறான். ராணா நாயுடு ஏன் நாகா நாயுடுவை கொல்லத் துடிக்கிறான் என்றும் நாகா நாயுடு தப்பித்தாரா? இல்லையா என்கிற கதையாக இந்த ராணா நாயுடு வெப்சீரிஸ் உருவாகி உள்ளது.
ஆரம்பமே ஆபாசம்
வெப்சீரிஸ் தொடங்கும் போதே மோசமான ஆபாசக் காட்சியுடன் ஆரம்பிப்பதை பார்த்த இந்திய சினிமா ரசிகர்கள் அதிர்ந்து போனது தான் இந்த வெப்சீரிஸுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்ட நிலையில், கெட்ட வார்த்தைகள் கடல் போல வந்து காதை கிழிப்பதால் உடனடியாக பலரும் இதுக்கு மேல பார்க்க வேண்டாம் என ஆஃப் செய்து விட்டு போகின்றனர். அதே நேரம் அதிக ஆபாசக் காட்சிகள் இருப்பது இளைஞர்களை எப்படியாவது தனியாக கூட அமர்ந்து இந்த வெப்சீரிஸை பார்க்க வைக்க தூண்டுவதும் நடைபெற்று தான் வருகிறது.
நடிப்பில் மோதல்
ஒரு பக்கம் ராணா நாயுடுவாக ராணா டகுபதி தனது நடிப்பை வெறித்தனமாக வெளிப்படுத்த இன்னொரு பக்கம் சர்தார் படத்தின் வயதான கெட்டப் கார்த்தி போல ஜெயிலில் இருந்து வரும் நாகா நாயுடுவான வெங்கடேஷும் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு எபிசோடும் இவர்களுக்குள் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
பிளஸ்
ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் நடிப்பு மற்றும் ராணாவின் மனைவியாக நடித்துள்ள ஹீரோயின் சுர்வின் சாவ்லாவின் நடிப்பும் படத்திற்கு பலமாக உள்ளது. சங்கீத் சித்தார்த்தின் பின்னணி இசை இந்த வெப்சீரிஸுக்கு பலமாக உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கலாக வெப்சீரிஸ் வெயிட்டு காட்டுகிறது.
மைனஸ்
ஆபாசக் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் இந்த வெப்சீரிஸை ரா வெப்சீரிஸாகவும் கல்ட் கன்டென்ட்டாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல இந்த வெப்சீரிஸுக்கு பெரும் பின்னடைவை அதே விஷயங்கள் தந்துள்ளன என்பதை விடவும் அந்த விஷயங்கள் வெப்சீரிஸையே கெடுத்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநர்கள் இருவரும் படு ஜாலி மூடில் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்துவதிலும், நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிகளை மாற்றி அமைக்காமலும் இந்த வெப்சீரிஸை இயக்கிய நிலையில், அடுத்தடுத்த சீசன்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி உள்ளது. ராணா நாயுடு - வேணாம் போயிடு!


Click it and Unblock the Notifications











