twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரங்கஸ்தலம்' - விமர்சனம் #RangasthalamReview

    By Vignesh Selvaraj
    |

    ராம்சரண், ஆதி, சமந்தா, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா? எப்படி இருக்கிறது ரங்கஸ்தலம்' திரைப்படம்?

    'சிட்டி பாபு' ராம்சரண், 'குமார பாபு' ஆதி இருவரும் சகோதரர்கள். ராம்சரண், ரங்கஸ்தலம் கிராமத்தின் படிக்காத மெக்கானிக்கல் இன்ஜினியர். ஊரில் இருக்கும் விவசாய நிலங்களில் தனது மோட்டார் செட்டின் மூலம் வாடகைக்கு தண்ணீர் உறிஞ்சிக் கொடுப்பவர். ராம்சரணுக்கு காது கேட்கும் திறன் குறைவு. கத்திப் பேசினால் தான் லேசாகவாவது அவரது காதில் விழும். இதனால், ஊராரின் கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும், கெத்தாக வலம் வருகிறார்.

    Rangasthalam movie review

    ராம்சரணின் அண்ணன் ஆதி, படித்தவர். துபாய்க்குச் சென்று திரும்பிய அவர் அந்த ஊரில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அந்த ஊரின் பிரஸிடெண்ட் ஜெகபதிபாபு செய்து வரும் தில்லுமுல்லு வேலைகளை அறிந்துகொள்கிறார். விவசாயம் பொய்த்துப்போன அந்த ஊரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களிடம் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து தனது அதிகாரத்தால் அசல் தொகையையும் ஒன்றுக்கு இரண்டாக மாற்றி வசூல் செய்து நோகடிக்கிறார்.

    இதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை யாரும் அறியாமல் கொலை செய்து தனது அதிகார பலத்தின் மூலம் தற்கொலையைப் போலவே ஜோடிக்கிறார். இதை அறியாமல் வாழும் மக்களை அன்னப்போஸ்ட் பிரஸிடெண்ட் ஜெகபதிபாபுவுக்கு எதிராக கிளர்த்தெழச் செய்கிறார் ஆதி. 30 ஆண்டுகளாக போட்டியிட ஆளே இல்லாமல் பிரஸிடெண்டாக இருக்கும் ஜெகபதிபாபுவை எதிர்த்துக் களம் இறங்குகிறார் ஆதி. அவருக்கு உறுதுணையாக உடன் நிற்கிறார் ராம்சரண்.

    ஜெகபதிபாபுவுக்கு எதிராக மக்களைத் திருப்புகிறார்கள் ஆதியும் ராம்சரணும். ஆதிக்கு எதிராக சதி செய்து மக்களின் நம்பிக்கையைக் குலைக்க முயற்சிக்கிறார்கள் ஜெகபதிபாபு தரப்பினர். ஒருகட்டத்தில் ஆதி கொல்லப்பட, எழுந்த மாபெரும் கிளர்ச்சியில் பிரஸிடெண்டின் வீடு மக்களால் தாக்கப்படுகிறது. ஜெகபதிபாபு தப்பியோடி விடுகிறார். தங்கள் சார்பாக ஒருவரை பிரஸிடெண்டாக தேர்ந்தெடுக்கிறார்கள் மக்கள். அதன்பிறகு, ராம்சரண் ஜெகபதிபாபுவை தேடிக் கண்டுபிடித்தாரா, தனது அண்ணன் இறப்பிற்கு பழிவாங்கினாரா என்பதையெல்லாம் ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கிறது ரங்கஸ்தலம் திரைப்படம்.

    கிராமத்துப் பெண்ணாக சமந்தா கலக்கியிருக்கிறார். பாவாடை தாவணி, எண்ணெய் வழியும் முகம் என அசல் கிராமத்து விவசாயப் பெண்ணின் தோற்றத்தில் வருகிறார். ராம்சரணைக் காதலிக்கும் காட்சிகள், 'ரங்கம்மா' பாடல் காட்சிகளில் கிளாமரிலும் பட்டையைக் கிளப்புகிறார் சமந்தா. காது கேட்கும் திறன் குறைந்த இளைஞராக, 80-களின் பூப்போட்ட சட்டை, கைலி, தாடி என கவரும் லுக்கில் ராம்சரண். கோபம் வந்தால் பத்துப் பேரைப் புரட்டி எடுக்கும் முரட்டு இளைஞர் தோற்றத்தில் செம ஃபிட்.

    Rangasthalam movie review

    படித்த இளைஞருக்கேயான ஸ்டைலில் பேன்ட், முழுக்கைச் சட்டை, கண்ணாடி தோற்றத்தில் கேரக்டரின் முக்கியத்துவம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் 'ஈரம்' ஆதி. அரசியல்வாதியாக முதுமையான தோற்றத்தில் பிரகாஷ்ராஜ், அதிகாரம் மிக்க வில்லனாக ஜெகபதிபாபு இருவருமே மிரட்டியிருக்கிறார்கள். கிராமத்துச் செம்மண்ணை தனது கலர் டோனில் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. சோளக்காட்டுக்குள் இரவில் நடக்கும் சண்டைக்காட்சியைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதில் தெரிகிறது உழைப்பு.

    தேவிஶ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது. மானஸியின் குரலில் 'ரங்கம்மா.. மங்கம்மா' பாடல் தியேட்டர் விட்டு வெளியேவந்தும் முணுமுணுக்க வைக்கிறது. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்பது குறை. அதிகாரத்திற்கும், சாமானிய மக்களுக்குமான போரில் அதிகாரம் வீழ்த்தப்படும் வழக்கமான கதையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். 'ரங்கஸ்தலம்' - ரசிக்க வைக்கும்!

    English summary
    Ramcharan, Aadhi, Samantha starred 'Rangasthalam' telugu movie is an period film directed by Sukumar. Read 'Rangasthalam' review here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X