Regina Review: அருவி மாறி இருக்கும்னு பார்த்தா அறுவையா இருக்கே.. சுனைனாவின் ரெஜினா பட விமர்சனம்!
நடிகர்கள்: சுனைனா, ஆனந்த் நாக்
இசை: சதீஷ் நாயர்
இயக்கம்: டொமின் டி சில்வா
சென்னை: நடிகை சுனைனா நடுவிரலை காட்டியபடி படுபோல்டாக போஸ் கொடுத்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்ததுமே ஓஹோ அருவி போல வித்தியாசமாக இருக்குமோ இந்த படம் என பலரும் நினைத்தனர்.
படத்தின் டிரெய்லரில் சுனைனாவின் லிப் லாக் காட்சிகளை பார்க்கும் போதே, எதற்கோ மேட்ச் செய்ய முயற்சிக்கின்றனர் என நினைத்த நிலையில், படத்தை பார்த்தாலே அதற்கான அர்த்தம் தெளிவாக புரிந்து விடுகிறது.
மலையாள படங்களை இயக்கிய இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை, ஆனந்த் நாக், ஜூலி, சாய் தீனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தில் எதெல்லாம் பாசிட்டிவ், எதெல்லாம் நெகட்டிவ் என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ரெஜினா கதை: கணவரின் கொலைக்கு கண்ணகியை போல கிளம்பி கொலையாளிகளை பழிவாங்கும் ஒரு மனைவியின் கதை தான் இந்த ரெஜினா. உமன் சென்ட்ரிக் படங்களில் ஹீரோயினாக பல முன்னணி நடிகைகளும் நடித்து வரும் நிலையில், சுனைனாவும் சமீப காலமாக அந்த டிராக்கில் பயணித்து வருகிறார்.
ஆனால், இன்னமும் அவர் எதிர்பார்க்கும் பெரிய ஹிட் அவருக்கு அமையவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று. முடிந்தவரை தனது நடிப்பில் எந்தவொரு குறையும் இல்லாத அளவுக்கு சுனைனா நடித்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிறைந்து அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் தள்ளிப் போகிறது.

படம் எப்படி: ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை பார்த்து வரும் நிலையில், சில கொள்ளையர்களை அவரை கொலை செய்து விடுகின்றனர். தனது காதல் கணவரை இழந்து விடும் ரெஜினா போலீஸ் ஸ்டேஷனை நாடுகிறாள். ஆனால், அந்த கொலையை விசாரிக்கவும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்தவில்லை.
கடைசியில், தனது கணவர் கொலைக்கு காரணமானவர்களை தானே களமிறங்கி கண்டுபிடித்து தண்டிக்க நினைத்து வித விதமான கெட்டப்புகளை போட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முயலும் ரெஜினாவின் மிஷன் கம்ப்ளீட் ஆனதா? என்ன பிரச்சனை வந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.
பிளஸ்: வழக்கம் போல சுனைனா தனது முதுகில் இந்த படத்தை தாங்கிக் கொண்டு எந்தளவுக்கு நடிக்க முடியுமோ நடித்து மிரட்டி இருக்கிறார். அவரது நடிப்பை தவிர படத்தில் ரசிகர்களை கட்டிப் போடும் விஷயம் எதுவும் இல்லாதது பெரிய குறையாக மாறிவிட்டது.
இயக்குநர் டொமின் டி சில்வா த்ரில்லர் கதையாக இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கி கடைசி வரை கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் பக்காவான படத்தை உருவாக்க தன்னால் முயன்ற முயற்சிகளை எடுத்துள்ளது பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. சுனைனாவை தவிர்த்து பாவா செல்லதுரை, அனந்த் நாக் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மைனஸ்: ஆனால், ரெஜினா படத்தின் பெரிய மைனஸ் என்றால் உமன் சென்ட்ரிக் படம் எடுக்கிறேன் என சொல்லி விட்டு, ரெஜினாவுக்குத் துணையாகவே ஒரு ஆண் கதாபாத்திரத்தை போட்டது தான்.
சுனைனாவுக்கு ஒரு பெண் கதாபாத்திரம் அந்த உதவிகளை செய்வது போல வைத்திருந்தாலும், படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். கணவருக்கும் சுனைனாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி காட்சிகள் இடம்பெறாத நிலையில், சுனைனா அவரது கணவரை கொன்றவரை பழிவாங்கினால் என்ன? இல்லை என்றால் என்ன? என்றே தோன்றுகிறது. கிளைமேக்ஸில் வரும் அந்த ட்விஸ்ட்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
மொத்தத்தில் சுனைனாவின் இந்த சுமாரான பழி வாங்கும் படமான ரெஜினாவை ஒருமுறை கொஞ்சம் பொறுமை இருந்தால் பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











