Retro Review: ரெட்ரோ விமர்சனம்.. கிளாடியேட்டர் பாதி.. கிருஷ்ணர் கதை பாதி.. ஜெயித்ததா? சொதப்பியதா?
சென்னை: ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தங்களது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு வளர்ப்பு அம்மாவாக லப்பர் பந்து ஸ்வாசிகா, வளர்ப்பு அப்பாவாக ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். கங்குவா தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதை அவர் முழுமையாக செய்யவில்லை என்பது தான் வருத்தமான விஷயமாக மாறியுள்ளது.

இந்த படமாவது சூர்யா ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக அமைந்துள்ளதா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
ரெட்ரோ கதை: கிருஷ்ணர் கோயிலில் பேச முடியாத பூசாரி கொல்லப்பட்டுக் கிடக்க அங்கே இருக்கும் சிறுவனை தனது மகனாக வளர்க்க முடிவு செய்கிறார் ஸ்வாசிகா. ஆனால், அவரது கணவரும் கேங்ஸ்டருமான ஜோஜு ஜார்ஜுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நோய் வாய்ப்பட்டு ஸ்வாசிகா உயிரிழக்க ஜோஜு ஜார்ஜை கொல்ல வருபவர்களை ரயிலில் புரட்டி எடுக்கிறார் இளம் வயது பாரிவேல் (சூர்யா). அதன் பின்னர் சூர்யாவை தனது மகனாக ஏற்றுக் கொள்கிறார் ஜோஜு ஜார்ஜ்.
சிறு வயதில் இருந்தே சூர்யாவுக்கு சிரிக்கத் தெரியாது என்கிற வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. ருக்மணி (பூஜா) உடனான காதல் காரணமாக தனது தந்தைக்கு இரும்பு கரமாக செயல்பட்டு எதிரிகளை பந்தாடி வந்த சூர்யா அதையெல்லாம் விட்டு விட்டு பூஜா ஹெக்டேவுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழப்போகிறேன் என்கிறார்.
ஆனால், கடைசியாக தனது தந்தை செய்ய சொன்ன தங்க மீனை கடத்தும் வேலையை சூர்யா தன் இஷ்டத்துக்கு செய்த பிரச்சனை காரணமாக கல்யாணத்தில் 'கனிமா' பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு பூஜா ஹெக்டேவை கொல்லப் பார்க்கிறார் ஜோஜு ஜார்ஜ், அவருடைய கையை வெட்டி விட்டு ஜெயிலுக்கு சூர்யா போக, மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுத்துவிட்டதற்காக சூர்யாவை பிரிந்து அந்தமானுக்கு சென்று விடுகிறார் பூஜா ஹெக்டே.
தனது காதலி இருக்கும் இடம் தெரியாமல், சிறைச்சாலையில் தாடியுடன் "கண்ணாடிப்பூவே" பாடலுக்கு சோக கீதம் பாடி வந்த சூர்யாவுக்கு அந்தமானில் அவர் இருப்பது தெரிய, சிரிப்பு டாக்டர் ஜெயராமை கடத்தி அவரை கம்பவுண்டராகவும் இவர் தான் டாக்டர் என்றும் பொய் சொல்லி அந்தமானுக்கு செல்கிறார்.
அங்கே கல்ட் எனப்படும் கிளாடியேட்டர் போன்ற சண்டையை நடத்தி வரும் நாசர் மற்றும் அவரது மகன்களிடம் அடிமையாகக் கிடக்கும் அந்த மக்களை காப்பாற்றினாரா? தங்க கை பொறுத்திக் கொண்டு சூர்யாவை பழி தீர்க்க வரும் ஜோஜு ஜார்ஜை என்ன செய்தார் என்பது தான் இந்த ரெட்ரோ படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் படம் தொடங்கியதில் இருந்து கனிமா பாடல் மற்றும் அதை தொடர்ந்து வரும் சண்டைக் காட்சி என வரும் அந்த சிங்கிள் ஷாட் சீன் சிறப்பான சம்பவம். சூர்யாவுக்கு சூப்பரான படத்தைக் கொடுத்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என ரசிகர்கள் Love போர்ஷனில் காலரை தூக்கிவிட Laugh பகுதியில் தான் படம் பலமாக அடிவாங்குகிறது.
ஒரு பக்கம் கிளாடியேட்டர் கதை ஓட, இன்னொரு பக்கம் பகவான் கிருஷ்ணர் பிறந்து, மறைத்து வைக்கப்பட்டு கொடூர கம்சனை வதம் செய்யும் கதையையும் தளபதி பட ஸ்டைலில் உல்டா பண்ணி கார்த்திக் சுப்புராஜ் கொடுத்துள்ளார். அந்த போர்ஷனில் சில இடங்கள் சூப்பராக இருந்தாலும், ஒட்டுமொத்த கதையாக இடைவேளைக்கு முன்பாக சூர்யா சிரிக்க ஆரம்பித்ததும் ரசிகர்களின் சிரிப்பு அடங்கி போய் விடுகிறது.
பிளஸ்: சூர்யாவின் நடிப்புக்காகவே இந்த படத்தை கடைசி வரை பார்க்கலாம். கங்குவா படம் போரடித்த அளவுக்கு இந்த படம் பெரிதாக போரடிக்கவில்லை. சூர்யாவை தாண்டி ஜோஜு ஜார்ஜின் நடிப்பு மற்றும் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணன் தன்னால் முடிந்த வரை கடைசி வரை கூஸ்பம்ப்ஸ் கொடுத்து தூக்கி நிறுத்துகிறார். அந்தமானின் அழகை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ள ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு வேறலெவல்.
சிரிப்பு விஷயத்தை திரைக்கதையில் ஒரு விஷயமாக கொண்டு வந்து கடைசி வரை அதை அழகாக கொண்டு போய் வித்தியாசமான கிளைமேக்ஸ் உடன் படத்தை முடித்திருப்பது நல்ல விஷயம் தான். ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிடும் சூர்யா, எமோஷனல் காட்சிகளிலும் நடிப்பின் நாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

மைனஸ்: Love, Laugh and War என ஏற்கனவே 3 பிரிவுகளாக படம் போகும் என்று பார்த்தால் அதையும் தாண்டி தம்மம், தி ஒன் என நீண்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையில் பல இடங்களில் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகிறார். படம் ஆரம்பத்தில் சென்ற வேகத்திற்கு அப்படியே ஒரு கதையை செய்திருந்தால் கூட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். அதை விட்டு விட்டு டேக் டைவர்ஸன் என்பது போல பல கிளை கதைகளாகவும் ஜகமே தந்திரம் படத்தில் வைத்தது போல குறியீடுகளாக வைத்து எடுத்த விதத்தில் பயங்கரமாக சொதப்பி விட்டார். எடிட்டர் ஷாபிக் முகமது அலி கருணை காட்டாமல் கட் அண்ட் ரைட்டாக சில காட்சிகளை வெட்டியே வீசி இருக்கலாம். பிரகாஷ் ராஜ் போர்ஷன் எல்லாமே ரொம்பவே சுமாராக எழுதப்பட்டு ரசிகர்களை சோதிக்கிறது. ஸ்ரேயா பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. நட்பு என சொல்லிக் கொண்டு அராஜகம் செய்யும் நாசர் மகனாக வரும் விதுவின் வில்லத்தனம் சில இடங்களில் வொர்க்கவுட் ஆனாலும், கடைசியில் பல்பு வாங்குகிறது.
அதிலும், அந்த ஜடாமுனி கதை எல்லாம் கங்குவா படத்தின் பாதிப்பில் இருந்து இன்னமும் சூர்யா வெளியே வரவில்லைய என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆன் அண்ட் ஆஃப் ஆகவே கதை நகர்ந்தாலும் கண்டிப்பாக சூர்யாவின் நடிப்புக்காகவும் கார்த்திக் சுப்புராஜின் ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்காகவும் ஒருமுறை இந்த ரெட்ரோ படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம். ஆனால், பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வேண்டிய படத்தை கொஞ்சம் வேற விதமாக கையாண்டு கெடுத்துவிட்டாரே கார்த்திக் சுப்புராஜ் என்கிற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











