RJ Balaji: பூஸ்ட் கேட்ட செல்வராகவன்.. மேடையில் எல்லாத்தையும் கொட்டிய ஆர்.ஜே. பாலாஜி!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். படத்தினை லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். படத்திற்கு திரைக்கதை வடிவமைப்பில் சித்தார்த் விஸ்வநாத்துடன் எழுத்தாளரும் தங்கலான் படத்தின் திரைக்கதை ஆசிரியருமான தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணிபுரிந்துள்ளனர். படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று அதாவது நவம்பர் 23ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரால் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஆர்.ஜே. பாலாஜியின் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கூறியதைப்போல் சொர்க்க வாசல் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி ஒரு படத்தில் நாயகனாக நடிக்கின்றார் என்றால், அதனைக் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார். குறிப்பாக இவரது எல்.கே.ஜி, மூக்குத்து அம்மன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சொர்க்கவாசல். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி சில சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக ரசிகர்கள் விமர்சனம் செய்வதைத் தடுக்க முடியாது என்றும், நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்வதுதான் சரியானது என்றும் பேசினார்.
சொர்க்கவாசல்: அவரது பேச்சில், " சொர்க்கவாசல் படத்தினை நான் இதுவரை பார்க்கவில்லை. படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படக்குழுவினரை நான் நம்புகின்றேன். அதேபோல் படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் தீவிர ரசிகன். படத்தின் விமர்சனம் குறித்து நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கூறியதைத்தான் இப்போதும் கூறுகின்றேன். விமர்சனங்களைத் தடுக்க முடியாது. இப்படித்தான் விமர்சிக்க வேண்டும் எனவும் கூறமுடியாது.

செல்வராகவன்: படத்தில் நடித்த செல்வராகவன் சார், அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவான கதாபாத்திரம். படப்பிடிப்புத் தளத்தில் அவர் என்னிடம் அதிகம் பேசவே மாட்டார். பேசினாலும், பூஸ்ட் இருக்கின்றதா எனக் கேட்பார், இல்லை என்றால் ப்ளாக் காஃபி கேட்பார். படத்தினை வெளியிடும் ட்ரீம் வாரியர்ஸ் மிகவும் உசாரான ஆட்கள். படத்தினைப் பார்த்துவிட்டு படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார்கள்.
அனிருத், லோகேஷ்: அதேபோல், ட்ரைலரை வெளியிட வந்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் அவர்களின் திரைவாழ்க்கையினைத் தொடங்கிய முதல் நாளில் இருந்து எனக்குத் தெரியும். அப்போது எப்படி இருந்தார்களோ அதேபோல்தான் இன்றைக்கு இவ்வளவு உயரத்திற்கு வந்த பின்னரும் உள்ளனர். சொர்க்கவாசல் படம் வாழை, லப்பர் பந்து போன்ற நல்ல படமாக இருக்கும். மக்கள் இதனைக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனப் பேசினார்.


Click it and Unblock the Notifications