விஸ்வாசம், வீரம், விவேகத்தின் மறுப்பெயர் தான் 'ராக்கி'... விமர்சனம்!
ஒரு நாய்யின் விஸ்வாசமும், விவேகத்துடன் அது செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படம்.
சென்னை: தனது எஜமான் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசமும், விவேகத்துடன் அது செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார் சந்தோஷ். ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் அவர்.

இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இருந்து பாம் பாண்டியன் எனும் குற்றவாளியை தேடி செல்லும் போது சாயாஜி மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப்படுகிறார் சந்தோஷ். இதையடுத்து, குற்றவாளிகளை ராக்கி எப்படி பழிவாங்குகிறது என்பது தான் மீதிப்படம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாயின் சாகசங்களை திரையில் காண்பது மகிழ்ச்சியை தருகிறது. தனது எஜமான் மீது ராக்கி கொண்டிருக்கும் பாசமும், அவரது மரணத்துக்காக பழிவாங்கும் அதிரடி சாகசமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. படம் முழுவதும் மிரட்டி இருக்கிறது ராக்கி.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் பிட்டாக இருக்கிறார். வேலையில் நல்ல போலீஸ் அதிகாரி, மனைவி மீது அதிக பாசம் காட்டும் கணவன் என நன்றாக நடித்திருக்கிறார். ராக்கியுடன் சேர்ந்து, சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

கொஞ்சம் நிக்கி கல்ராணி சாயலில் தெரிகிறார் நாயகி ஈஷான்யா. அன்பான மனைவியாக நடித்து அப்லாஸ் அள்ளுகிறார். நேரடி தமிழ் படங்களில் ஈஷான்யாவை இனி அடிக்கடி பார்க்க முடியும்.

போலீஸ் கமிஷ்னர் ரோலில் வரும் நாசர், தனது வழக்கமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். வில்லன் சாயாஜி சிண்டேவும், அவரது கூட்டாளிகளான ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் ராக்கியிடம் சிக்கி வதைப்படும் காட்சிகளில் உண்மையிலேயே பயந்து நடுங்குகிறார்கள்.

நாய்கள் பயிற்சியாளர்களாக வரும் ராஜேந்திர பிரசாத்தும், அவரது உதவியாளரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி ராக்கியை மையப்படுத்தி தான் முழுபடமும் நகர்கிறது.
தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் தான் என்றாலும், பெரும்பாலான நடிகர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் டப்பிங் படம் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. குறிப்பாக வசனங்களும், டப்பிங் குரலும் சரியாக பொருந்தி இருக்கின்றன.

அஜ்மல் கானின் ஒளிப்பதிவும், பாப்பி லஹிரியின் இசையும் படம் போரடிக்காமல் நகர்வதற்கு உதவியாக இருக்கின்றன.

ராக்கியின் சாகசங்கள் அனைத்தும் சினிமா தனமாக தெரிவது பெரிய பலவீனம். ராக்கியை வைத்து நிறைய காமெடி செய்திருந்தால் குழந்தைகள் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். கதையோட்டத்தில் நம்பக தன்மை குறைந்துவிடுகிறது.
ஒரு போலீஸ் நாயின் சாகசங்களை பார்க்க ராக்கிக்கு போகலாம்.


Click it and Unblock the Notifications











