Romancham Tamil Review: ஓடிடி ரசிகர்களுக்கான தரமான காமெடி ட்ரீட்... ரோமாஞ்சம் தமிழ் விமர்சனம்
ரோமாஞ்சம்
நடிகர்கள்: செளபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத்
இயக்கம்: ஜீது மாதவன்
தயாரிப்பு : ஜான்பால் ஜார்ஜ், கிரீஷ் கங்காதரன்
இசை: சுஷின் ஷ்யாம்
எடிட்டிங் : கிரண் தாஸ்
ரன்னிங் டைம் : 2 மணி 10 நிமிடங்கள்
ஜானர் : ஹாரர் ப்ளஸ் காமெடி
ஓடிடி : டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
சென்னை: செளபின் சாஹிர், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரோமாஞ்சம்.
ஜீது மாதவன் இயக்கியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மினிமம் பட்ஜெட்டில் உருவான ரோமாஞ்சம் திரையரங்குகளில் 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
ஓடிடி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் ஒரு முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம்.

Romancham Tamil Review
2007 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவம் தான் 'ரோமாஞ்சம்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதன்படி, கேரளாவைச் சேர்ந்த 7 நண்பர்கள் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். பேச்சுலர்களான அவர்களில் ஓரிருவர் மட்டுமே வேலைக்குப் போகின்றனர். ஒருவர் சொந்தமாக பிஸினஸ் செய்து வருகிறார். மற்றவர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
குடி, கும்மாளம், விளையாட்டு என பேச்சுலர் வாழ்க்கையை என்ஜாய் செய்துவரும் அவர்களுக்கு விபரீதமான ஒரு ஆசை துளிர்விடுகிறது. அதன்படி, ஓஜோ போர்டு மூலம் ஒரு பேயை வரவழைத்து அதனுடன் பேசி பொழுதைப் போக்கலாம் என்கிறான் ஜிபி. ஆனால், அதனை யாரும் நம்பாததால் ஓஜோ பலகையில் உள்ள டம்ளரை தானே நகர்த்தி மற்ற நண்பர்களை ஏமாற்றுகிறான். இதற்கு இன்னொரு நண்பனும் உடந்தையாக இருக்க, ஒருநாள் உண்மையாகவே பேய் வந்துவிடுகிறது.
அதன்பிறகு அந்த வீட்டிலும், அங்கு இருக்கும் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான அனுபவங்களும் சம்பவங்களும் நடக்கிறது என்பது தான் ரோமாஞ்சம் படத்தின் கதை. ஒரு வீடு, ஒரு கேரம் போர்டு, 7 நண்பர்கள், இன்னும் சில துணை பாத்திரங்கள், இப்படியொரு சவாலான கதைக்களத்தை வைத்துக்கொண்டு அடிபொளி சினிமாவாக படைத்திருக்கிறார் இயக்குநர் ஜீது மாதவன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டுக்குள் தான் படமாக்கப்பட்டுள்ளது என்பதை நம்பவே முடியாது.

கதையின் நாயகன் செளபின் சாஹிர் தான் என்றில்லாமல், அவரது நண்பர்களாக நடித்துள்ளவர்களும் நடிப்பில் ரகளை செய்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு குணாதிசயம், ஆனால், அவர்களுக்கான காட்சிகளில் விதவிதமான ரியாக்ஷன்கள் கொடுத்து மிரள வைத்துள்ளனர். குறிப்பிட்டு இந்த காட்சி தான் என பாகுபாடே பார்க்க முடியாதபடி அமர்க்களமாக நடித்துள்ளனர். பெரிதாக கதையும் திரைக்கதையும் இல்லாத இந்தப் படத்தில் இவர்களின் ரியாக்ஷன்ஸ் மட்டுமே ரசிகர்களை வெடித்து சிரிக்க வைக்கிறது.
படத்தில் பாதிக்கும் மேல் தான் வருகிறார் அர்ஜுன் அசோகன். வீட்டில் இருக்கும் நண்பர்களை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவர் தலையாட்டும் காட்சி, திடீரென அப்படியே உறைந்து நின்று ஜெர்க் கொடுக்கும் காட்சி, இரவில் தனியாக யாருடனோ பேசிக் கொண்டிருப்பது, செளபின் சாஹிரையும் இன்னொரு நண்பரையும் நடு இரவில் ஓட ஓட விரட்டுவது என எல்லாம் ரசிகர்களால் சிரிப்பை அடக்கவே முடியாத காட்சிகள்.
அதேபோல், ஒரேயொரு காட்சியில் மட்டும் வரும் செம்பன் வினோத், பேயிடம் தனது தந்தை பெயரைக் கேட்பதும், அதற்கு ஓஜோ போர்டில் பேய் சொல்லும் பதிலும் தான் இந்தப் படத்தின் ஹைலைட் காமெடி ட்ரீட். இன்னொரு பக்கம் நிரூப் என்ற கேரக்டரை மளிகைக் கடைக்காரர் 'நிரோத்' என்றே அழைக்கும் காட்சிகள் குபீர் ரகம். செளபின் சாஹிர் உட்பட அனைவருமே சின்ன சின்ன ரியாக்ஷன்களில் கூட வியக்க வைக்கிறார்கள்.

கதை மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களை எந்த இடத்திலும் அயர்ச்சியாகவிடாமல் பயணிக்கிறது திரைக்கதை. நாயகிகள் கிடையாது, தேவையில்லாமல் பாடல்களும் வருவதில்லை. மொத்தமாக பேச்சுலர்களின் அட்ராசிட்டியை ஹாரர் ப்ளஸ் காமெடியாக ட்ரீட்டாக கொடுத்துள்ளனர் ரோமாஞ்சம் படக்குழுவினர். சானு தாஹிரின் ஒளிப்பதிவு, கிரன் தாஸின் எடிட்டிங் இரண்டுமே இரட்டை குதிரை சவாரி செய்துள்ளது.
பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் வெரைட்டி காட்டியுள்ளார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். கேரம் போர்ட்டில் கண்ணாடி டம்ளர் நகரும் இடத்தில் கூட ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது பின்னணி இசை. 100 விழுக்காடு ஹாரர் ஜானர் படத்தில் 200% காமெடி கலாட்டா செய்திருப்பது நிச்சயமாக ரசிகர்களுக்கு புதுவிதமான திரை அனுவபம் தான். இறுதிக் காட்சியில் ரசிகர்களே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டை கொடுத்துள்ளார் இயக்குநர். அதன்படி, ரோமாஞ்சம் படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ரோமாஞ்சம் தான் தரமான ட்ரீட் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











