twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமியா பூதமா போலீசா பொறுக்கியா... யார் இந்த ’சாமி 2’! விமர்சனம்

    விக்ரம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக அமைந்திருக்கிறது சாமி 2.

    |

    Recommended Video

    Saamy Square Review | சாமி ஸ்கொயர் பட விமர்சனம்.

    Rating:
    3.0/5
    Star Cast: விக்ரம், கீர்த்திசுரேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா
    Director: ஹரி
    சென்னை: முதல் பாகத்தின் வில்லன் பெருமாள்பிச்சையின் மகன்களுக்கும், ஆறுச்சாமியின் மகன் ராம்சாமிக்கும் நடக்கும் பழி வாங்கும் படலம் தான் சாமி 2.

    முதல் பாகத்தில் இருந்தே படம் ஆரம்பமாகிறது. பாஸ்ட் பார்வர்ட் செய்தது போல், டைட்டில் கார்டிலேயே முன்கதைச் சுருக்கம் முடிந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. விவரமாக இந்த முன்கதைச் சுருக்கத்திலேயே திரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ரீப்ளேஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.

    Saamy 2 movie review

    பெருமாள்பிச்சையை முடித்துக்கட்டியக் கையோடு, திண்டுகல்லுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறார் ஆறுச்சாமி. அங்கு மனைவியோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மூன்று மகன்கள் தெய்வேந்திர பிச்சை ( ஜான் விஜய் ), மகேந்திர பிச்சை ( ஓ.ஏ.கே.சுந்தர் ) மற்றும் ராவணப்பிச்சை ( பாபி சிம்ஹா ) அப்பாவை தேடி இலங்கையில் நெல்லை வருகிறார்கள்.

    ராவணப்பிச்சையால் திருநெல்வேலியில் மீண்டும் ரவுடியிசம் தலைத்தூக்க, மீண்டும் நெல்லைக்கு குடும்பத்தோடு பறக்கிறார் ஆறுச்சாமி. ஓகே இது தான் கதை, இனி ஆறுச்சாமிக்கும், பெருமாள்பிச்சையின் மகன்களுக்கும் நடக்கும் மோதல்கள் தான் மீதிக்கதை என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். இங்கே நாம் கூறியதும் ஒரு முன்கதைச் சுருக்கம் தான்.

    ஆறுச்சாமியின் மகன் ராம்சாமி தான் கதையின் நாயகன். அவருக்கும் ராவணப்பிச்சைக்கும் நடக்கும் மோதல்கள் தான் சாமி 2. முன்பாகத்தில் திரிஷா கதாபாத்திரம் தந்த தாக்கத்தை கீர்த்திசுரேஷ் ஏற்படுத்தவில்லை. இன்னும் சாமியின் மாமி என்றால் திரிஷா தான் மனதில் தோன்றுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகட்டும், கீர்த்திசுரேஷாக இருக்கட்டும் திரிஷா கேரக்டர் போல் இல்லை.

    Saamy 2 movie review

    ஆக்ஷன், ரொமான்ஸ் என வழக்கமான ஹரியின் படம் தான் சாமி 2. ஹரி படத்தின் டெம்பிளேட்களான சுமோ, ஹெலிகாப்டர், கார் சேஸிங், ஒரு குத்துப்பாட்டு, ஆங்காங்கே காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட், அதிரடி வசனங்கள், ஹீரோவும், வில்லனும் மாற்றி மாற்றி சவுண்டு விடுவது என எல்லாமே தவறாமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.

    முக்கியமாக ஹரி படத்தில் எதிர்பார்க்கவே கூடாத ஒன்று லாஜிக். சாமி 2வும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷ்னர் எப்படி கலெக்டரைக் கேள்வி கேட்பார், தமிழக போலீஸ் அதிகாரி எப்படி எல்லா மாநிலங்களுக்கும் சட்சட்டென போகிறார் என்பது போன்ற கேள்விகளை நாம் தப்பித்தவறிக்கூட கேட்கக் கூடாது. அதிலும் டிரான்ஸ்பர் விசயத்தை எல்லாம் ஜனாதிபதி கவனிக்கிறார் என்பது டூ டூ டூ மச்.

    அப்பா, மகன் என இரண்டு வேடங்களிலும் கெத்து காட்டி இருக்கிறார் விக்ரம். 15 வருடங்களுக்குப் பிறகு வரும் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தில் பார்த்த அதே லுக்கை, போலீஸ் எனும் செருக்கை ஆறுச்சாமிக்கு கொண்டு வந்திருப்பது சபாஷ். லேசான தாடி, இறுக்கமான முகம், பார்மல் டிரஸ் என மகன் ராம்சாமியாக குட் லுக் தருகிறார். ஆனாலும், முகம் அப்பாவைக் காட்டிக் கொடுக்கிறது. அதாவது வயது முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது.

    Saamy 2 movie review

    அதைக் கண்டு கொள்ளாமல் பார்த்தால் ஆக்ஷன் காட்சிகளில் பொளந்து கட்டி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் ரசிகர்களுக்கு சாமி 2 மாஸ் ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறது.

    அப்பா எட்டு அடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்வேன் என பெருமாள்பிச்சையின் வில்லத்தனத்தை அசால்டாக ஓவர்டேக் செய்து செல்கிறார் ராவணப்பிச்சை. ஜிகிர்தண்டா சேதுவுக்குப் பிறகு சாமி 2 ராவணப்பிச்சை கேரக்டர் நிச்சயம் பாபி சிம்ஹாவின் திரைவாழ்க்கையில் பேசப்படும். எங்க பாஸ் உங்க பால் வடியும் முகம்? தேடிப் பார்த்தாலும் கிடைக்கலையே.

    பிரபு தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதேபொல், ஜான் விஜய். ஓ.ஏ.கே.சுந்தர், உமா ரியாஸ், சுதா சந்திரன், ஐஸ்வர்யா என அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளனர்.

    படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. ஹரி படத்திற்கே உரித்தான பரபர, விறுவிறு காட்சிகள் ரசிகர்களை இருக்கையிலேயே அமர வைக்கிறது. ஆனால், காமெடி என்ற பெயரில் சூரி செய்யும் சேட்டைகள் தான் ஆங்காங்கே நெளிய வைக்கின்றன. முதலில் காமெடி பண்ணுங்க சூரி, அப்புறம் மெசேஜ் சொல்லலாம்.

    அடுத்தது தேவி ஸ்ரீபிரசாத். மொளகாப் பொடியே, டர்ணக்கா பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. அதிரூபனே பாடல் செம லவ்மூடைக் கொடுக்கிறது. விக்ரமும், கீர்த்திசுரேஷும் இணைந்து பாடிய மெட்ரோ ரயில் பாடல் சூப்பர் ரொமாண்டிக் நம்பர். பாடல்களில் செலுத்திய கவனத்தை பின்னணியில் காட்டத் தவறி இருக்கிறார் டிஎஸ்பி. காதைக் கிழிக்கிறது பின்னணி. பாபி சிம்ஹாவுக்கு தரப்படும் பீஜிஎம் இதில் விதிவிலக்கு.

    வெங்கடேஷ் அங்குராஜ் ஆக்ஷன் படத்திற்கே உரித்தான காட்சிகளை கேமராவில் பதிவு செய்திருக்கிறார். அதனை அழகாக படத்தொகுப்பாக்கி இருக்கிறார்கள் வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய். சில்வாவின் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அதிர வைக்கிறது. ஹரி படத்திற்கு தேவையான விசயங்களைப் பக்காவாக செய்துள்ளனர்.

    என்னதான் விக்ரம் பஞ்ச் பேசி, சண்டை போட்டாலும், முதல் பாகத்தில் இருந்த ஜீவன் சாமி 2வில் மிஸ்ஸாகிறது. காட்சிகள் டக்டக்கென நகர்வதால் மனதில் எதுவும் ஒட்டவில்லை. முதல் பாகத்தில் நேர்மையான மனிதராக காட்டப்பட்ட டெல்லிகணேசின் கேரக்டர், இதில் புரோகிதராக மாற்றப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது.

    முதல் பாகத்தில் மிகவும் ஃபேமஸான 'நான் போலீஸ் இல்ல பொறுக்கி' டயலாக்கை டிங்கரிங் பண்ணி, இதில் 'நான் சாமி இல்ல பூதம்' என்றாக்கியது போல், பீர் இட்லியை மோர் இட்லி ஆக்கியிருக்கிறார்கள். 'திருநெல்வேலி அல்வா' போல் நச் பாடல் எதுவும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

    மூன்றாவது பார்ட்டுக்கு அடிபோடும் வகையில் 'சாமியின் வேட்டை தொடரும்' எனும் எண்ட் டைட்டிலுடன் படம் முடிகிறது. சாமியா பூதமா என்றெல்லாம் யோசிக்காமல் 'சாமி 2'-ஐ தாராளமாக தரிசனம் செய்யலாம்.

    English summary
    The sequel of 2003 block buster hit movie Saamy's second part Saamy square is a complete action entertainer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X